Load Image
dinamalar telegram
Advertisement

மீரா!

கடலில் விளையும் உப்புக்கும் மலையில் விளையும் நார்த்தைக்கும் என்ன உறவு? ஒரே ஜாடிக்குள் எப்படி ஊறுகாயாகின்றன?

பரபரப்பாக இருந்தாள், கிருஷ்ணவேணி. அமெரிக்காவிலிருந்து மீரா வருகிறாள். தினமும், 'ஸ்கைப்'பிலும், வீடியோ காலிலும் பார்த்த முகம். இன்று, நேரில் பார்க்கப் போகிறாள்.
கிருஷ்ணவேணியின் பேத்தி, மீரா. இவள் மகன் அர்ஜுன் மாதிரி நல்ல நிறம். கூர்மையான மூக்கு, தீர்க்கமான கண்கள்.

ஏன், கிருஷ்ணவேணியே அழகு தான். அந்த நிறமும், ஸ்டெயிலும் காதில் ஒற்றைக் கல் வைர தோடு; கழுத்தில் மெல்லிய செயின்; கையில் காஸ்ட்லி காஸியோ ரிஸ்ட் வாட்ச். பள்ளிக்கூட டீச்சர் மாதிரி, மடிப்பு கலையாத புடவை. முகத்தில் ஒரு கம்பீரம்; இந்திரா அல்லது ஜெயலலிதா மாதிரி ஒரு ஆளுமை.
இன்று எல்லாமே கனவாகி விட்டது. மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்ற அர்ஜுன், அமெரிக்கப் பெண்ணை திருமணம் செய்து, 'இவள் ஆனி... என் மனைவி...' என்று, 'ஸ்கைப்'பில் அறிமுகம் செய்தபோது, உடைந்து தான் போனாள்.
திருமண நிகழ்ச்சிகளைக் கூட வீடியோவிலும், 'ஸ்கைப்'பிலும் தான் பார்த்தாள். கணவன் இறந்து ஆறு மாதத்திற்குள் வெளிநாடு, அதுவும் கடல் கடந்து செல்லக் கூடாது என்ற சம்பிரதாயத்தை அனுசரித்து, இந்தியாவில் இருந்தாள்.
இவள் போக நினைத்து ஏற்பாடு செய்தபோது, அவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டது. காரணம் கேட்பதால் எந்த பயனும் இல்லை. முடிந்து போன விஷயம்.
மாறி வரும் கலாசாரங்கள். மாற்றம் தேவை தான். ஆனால், அதன் அடிப்படை பார்க்க வேண்டாமா?
காந்திஜி சொன்னது போல், 'நான் என் வீட்டு ஜன்னல் கதவுகளைத் திறந்தே வைத்திருக்கிறேன். இதன் வழியாக அந்நிய நாட்டு கலாசாரங்கள் வரட்டும். ஆனால், என் சொந்த நாட்டின் கலாசாரங்கள் இதன் வழியாக வெளியே போய்விடக் கூடாது...'
நதிகள் தம் போக்கை மாற்றி அமைத்துக் கொள்கின்றன. புதிய தடங்கள் உருவாகின்றன. கலாசாரங்கள் தம்மை புதுப்பித்துக் கொண்டே தான் இருக்கின்றன. ஆனால், எதை ஏற்பது, எதை விலக்குவது என்ற தெளிவு நமக்குத் தான் தேவை.
இந்த கிருஷ்ணவேணியும் பல மாற்றங்களை ஏற்றவள் தான். பிறக்கும்போதே கை மூடி ரகசியத்துடன் பிறக்கும் குழந்தை. பெரியவனாகி இறக்கும்போது, கை திறந்து எதையும் நான் எடுத்துச் செல்லவில்லை என்ற வாக்குமூலத்துடன் மரணிக்கிறான். இடைப்பட்ட காலத்தில் விருப்பு, வெறுப்பு.
எங்கெங்கோ பிறந்து, வளர்ந்து, நாம் எப்படி ஒன்று சேருகிறோம்?
கடலில் விளைந்த உப்பும், மலையில் விளைந்த நார்த்தங்காயும் ஊறுகாயாகி, ஒரே ஜாடிக்குள் எப்படி ஒன்று சேருகின்றன?

சட்டென்று நினைவு கலைந்தது. இன்று, மீரா வருகிறாள். அது ஒன்று தான் சத்தியம்.
விமான நிலையம் போக வேண்டும். விவாகரத்து ஆன பெற்றோரின் குழந்தை, சட்டப் பாதுகாப்பில் இருக்கும் ஆறு வயது சிறுமி. வாரத்தில் மூன்று நாட்கள் தாயிடம், பாக்கி நாட்கள் தந்தையிடம் என, சட்டத்தால் பிரிக்கப்பட்ட உறவு.
தன் பேத்தியை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், சட்டப்படி வாதிட்டு, அபிடவிட்டில் கையெழுதிட்டு, ஒரு மாத இந்தியா வருகைக்கு, தானே கார்டியனாகப் பொறுப்பேற்றாள். அதற்காக எத்தனை எத்தனை விதிமுறைகள்.
ஒரு பசு மாடு, தன் கன்றை நக்கித் தர, கோர்ட் ஆர்டர் வாங்க வேண்டாம். நாம், படிச்சவர்கள். அதனால் தான் இத்தனை சட்ட திட்டங்கள்.
மீராவை இவளிடம் ஒப்படைப்பார், விமான பணிப்பெண். ஆதாரங்களை காட்டி, இவள் வீட்டிற்கு அழைத்து வரவேண்டும். காரை எடுத்து கிளம்பினாள், கிருஷ்ணவேணி.
மீரா வந்து விட்டாள். அந்த ஆங்கிலம் கலந்த மழலை மொழி கூட அழகு தான். காலை எழுவதிலிருந்து இரவு படுக்கும் வரை, மீராவிற்கு, 'டைட் ஷெட்யூல்' தான். மீரா இங்கிருக்கும் ஒரு மாதத்தின் ஒரு வினாடியைக் கூட வீணாக்க விரும்பவில்லை, கிருஷ்ணவேணி.
அவளைக் கோவில் கோவிலாக அழைத்துச் சென்று, அங்கிருக்கும் சிற்பங்களைப் பற்றி பாடம் எடுத்தாள். நம் கலாசாரங்கள் எத்தனை பொக்கிஷம் என்பதை நாம் தான் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும்.
''கிராண்ட்மா, இங்கே எல்லாரும் எப்படி ஒரே வீட்டிலே, சில்ரன், பேரண்டஸ் கூட ஒண்ணாவே இருக்காங்க?''
நல்லவேளை, மீராவிற்குக் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது. அர்ஜுனின் உபயம்.
''இதுதான் இந்தியா... நாங்க குடும்பமா தான் வாழுவோம். வேற்று கருத்துகள் இருந்தாக் கூட சேர்ந்து வாழறது தான் எல்லாருக்கும் பிடிக்கும்.''
மீராவை, தன் சினேகிதிகளின் இல்லத்திற்கு அழைத்துப் போய், 'என் அமெரிக்கா பேத்தி' என்று அறிமுகம் செய்து வைத்தாள்.
சின்ன தமிழ் பாடல்கள் கற்றுத் தந்தாள்; விதவிதமான பட்டுப் பாவாடைகளை அணிவித்து, அழகு பார்த்தாள்.
''ஸோ நைஸ் கிராண்ட் மா,'' மகிழ்ந்தாள், மீரா.
'பர்க்கர், பீசா'வை தவிர்த்து, இட்லி, தோசை, அடை என்று அறிமுகப் படுத்தினாள். நவராத்திரிக்கு, வீட்டிலேயே சிறிய கொலு வைத்தாள்.
கீழ் தட்டில் மிருகங்கள்; அடுத்த தட்டில், மனித பொம்மைகள், திருமண செட்; மேல் வரிசையில், தெய்வத் திரு உருவங்கள் என்று வைத்து, மனித பரிணாம வளர்ச்சி பற்றி கூறினாள். நம் கலாசாரத்தின் ஆணி வேர், சிறு சிறு விஷயங்களில் இருக்கும் தத்துவம் பற்றி விளக்கினாள்.
பிரமிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தாள், மீரா. நந்தகோபாலனின் லீலைகளை தரிசிக்கும் பக்த மீராவாக நெகிழ்ந்தாள்.
விஜயதசமியன்று, மீராவிற்கு, புத்தம் புது பட்டு பாவாடை உடுத்தி, காசுமாலை, கல் அட்டிகை, ஒட்டியாணம் அணிவித்ததை, போட்டோ எடுத்து, மகனுக்கு அனுப்பினாள்.
என் கண்ணே பட்டு விடும் என்று, மீராவிற்கு திருஷ்டி சுற்றினாள்.
'குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா' பாடலைக் கற்றுத் தந்தாள். மீரா, மழலையில் பாடுவதை, ஆனந்தக் கண்ணீருடன் ரசித்தாள்.
ஆயிற்று, ஒரு மாதம் ஓடியே விட்டது.
நாட்கள், வாரங்கள், மாதங்கள், ஆண்டுகளாயின. கிருஷ்ணவேணிக்கு வயதாகி விட்டது. 10 - 15 ஆண்டு தனிமை. ஏதோ ஒரு அமெரிக்கக் கல்லுாரியில் படிக்கிறாள், மீரா.
'என் ஸ்டடீஸ் முடியட்டும் கிராண்ட்மா, உனக்கொரு சர்ப்பரைஸ்...' என்றாள்.
என்ன சர்ப்பரைஸ்? பூவே பூச் சூடவா திரைப் படத்தில், பத்மினி பாட்டி மாதிரி, என்றாவது மீரா வருவாள் என்று காத்திருந்தாள்.
அன்று -
வாசல் அழைப்பு மணியை யாரோ உயிர்ப்பிக்க, ஒருவேளை மீராவோ... கதவு திறந்தாள், கிருஷ்ணவேணி.
மகன் அர்ஜுன் - மருமகள் ஆனி நின்றிருந்தனர். இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது?
ஆனி, இவள் காலடியில் விழுந்தாள். கை கூப்பி நின்ற அர்ஜுன் விவரித்தான்:
மதன்கிற ஒரு இந்திய வாலிபனைக் காதலிக்கிறாள், மீரா. இவர்கள் விசாரித்ததில், அவன் ஒரு பொறுக்கி, பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவன்; பணக்காரப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பின் ஓடி விடுவது, அவன் தொழில் என்பதும் தெரிய வந்தது.
மீராவிடம் சொன்னதும், அவள் அதை ஏற்க மறுத்து, 'நான் மதனைக் காதலிக்கிறேன். தவறு செய்தால் அவனைத் திருத்துவேன். உங்களை மாதிரி என்னால் ஒரு நாளைக்கு ஒருவனுடன் வாழ முடியாது.
'மதன் தான் என் கணவன். அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள முடியாது. எத்தனையோ இந்தியக் குடும்பங்கள் வேற்றுக் கருத்துக்களுடன் ஒன்றாக வாழறாங்க... எல்லாரும் விவாகரத்துக்கு போனா, உலகத்திலே உறவே இருக்காது; என் மாதிரி, 'சிங்கிள் பேரண்ட்' குழந்தைகள் சீரழியணும்...' என்று கூறினாளாம், மீரா.
திகைத்தாள், கிருஷ்ணவேணி. சரித்திரம் திரும்புகிறதா?
''என் பெண்ணை மீட்டுத்தாங்க, மாஜி. நீங்க சொன்னா மீரா கேட்பா. உங்க மேலே அவளுக்கு ரொம்ப மரியாதை. மீராவுக்காகத் தான் நாங்களே ஒண்ணு சேந்துட்டோம்,'' அழுதாள், ஆனி.
தாய்மை எத்தனை வலிமையானது.
''சரி, உள்ளே போய் உடை மாற்றி வாங்க... நான் மீராகிட்டே பேசறேன்.''
''அவசரத்துலே மாற்று உடை கொண்டு வரலை.''
''உள்ளே என் கப்போர்டிலே, மீராவுக்காக வாங்கி வைச்சிருக்கிற டிரஸ் இருக்கு.''
அவர்கள் உள்ளே போக, 'லேப்டாப்' அருகே சென்றாள், கிருஷ்ணவேணி.
டைனிங் டேபிளில் ஜாடியில், நார்த்தங்காய் ஊறுகாய் பதமாக இருந்தது.

உசேனி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement