Load Image
dinamalar telegram
Advertisement

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மா -
என் வயது: 35. திருமணமாகி, 8 ஆண்டுகள் ஆகின்றன. மனைவி, பிளஸ் 2 படித்தவள். எங்களுக்கு, 5 மற்றும் 2 வயதில் இரு பெண் குழந்தைகள். நாங்கள், சென்னை புறநகர் பகுதியில் வசிக்கிறோம்.
தினமும் வேலைக்கு போய் வர, 40 கி.மீ., இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்ய வேண்டும். காலையில், 8:30க்கு கிளம்பினால், போக்குவரத்து நெரிசலில் சின்னாபின்னப்பட்டு, கசங்கி வியர்த்து பணியிடத்துக்குள், 10:00 மணிக்கு பிரவேசிப்பேன். மாலையில், 5:30க்கு கிளம்பி இரவு, 7:30 மணிக்கு வீடு திரும்புவேன்.

மனைவிக்கு சொந்த அபிப்ராயங்களோ, யோசனைகளோ அறவே இல்லை. எதை எடுத்தாலும் கேள்வி தான்.
'ஏங்க... மதியானத்துக்கு எடுத்துட்டு போக என்ன பண்ண?'
'உன் இஷ்டப்படி ஏதாவது பண்ணு...'
'அதெப்படி... நீங்க சொன்னாதான செய்ய முடியும்?'
'சாம்பார் சாதம் செஞ்சு குடு...'
அதன்பின்னும் ஆயிரம் கேள்விகள், ஆயிரம் சந்தேகங்கள்.
டிராபிக்கில் நின்று கொண்டிருப்பேன்.
'ஏங்க... டிரைனேஜ் அடச்சுக்கிட்டு இருக்கு. என்ன செய்ய?' என, போன் பண்ணுவாள்.
'குச்சி வைச்சு குத்து...'
'அப்படியும் சரியாகலேன்னா?'
'ராத்திரி வரைக்கும் காத்திரு. நா வந்து பார்த்துக்கிறேன்...'
காலை, 11:00 மணிக்கு வேலையில் மூழ்கியிருப்பேன்.
'ஏங்க சின்னவ பாலை கக்கிட்டே இருக்கா...' என்று போன் பண்ணுவாள்.
'வசம்பை சுட்டு தேய்ச்சு நாக்குல தடவி விடு...'
'வசம்பு எங்க இருக்கு?'
'வீட்லதான் இருக்கும் தேடு. கிடைக்கலேன்னா பக்கத்து வீட்ல கேளு; பக்கத்து வீட்ல இல்லேன்னா, நாட்டு மருந்து கடையில வாங்கு...'
'அரைநாள் லீவு போட்டுட்டு வந்து குழந்தையை பாருங்க... எனக்கு பயமா இருக்கு...'
'ஏங்க, வெளில கதவ யாரோ தட்றாங்க...
என்ன செய்ய?'
'ஏங்க, தண்ணி இன்னைக்கி ஜில்லுன்னு இருக்கு. குளிக்கவா வேணாமா?'
'போன்ல யாரோ உங்க பெரியம்மாவாம், உங்க நம்பர் என்கேஜ்டா இருக்காம்... பேசவா, வேண்டாமா?'
இப்படி, சின்ன சின்ன முடிவுகளை கூட இவள் எடுக்க மாட்டாள். நடிகர் செந்தில் போல ஆயிரம் கோக்மாக் கேள்விகள் கேட்பாள். எத்தனையோ நாள் இவளை அமைதிபடுத்த, அலுவலகத்துக்கு அரைநாள் லீவு போட்டுட்டு வீட்டுக்கு பறந்து வந்திருக்கிறேன்.
இவளின் அம்மா, அக்கா, தங்கைகள் படு விபரம். இவள் மட்டும் எப்படி அம்மாஞ்சியாய்... திருமணத்திற்கு பிறகு இவளின் அறிவு மங்கி வருகிறதா... கிராமத்துகாரிக்கு நகரத்து சூழ்நிலை ஒத்து வரவில்லையா...
துாங்கும்போது, விடுமுறை நாளின் போதுகூட நிம்மதியாக விடமாட்டாள். இவள் மீது யாராவது செய்வினை வைத்து விட்டனரா... மீதி வாழ்நாள் முழுக்க இவளை வைத்து எப்படி சமாளிப்பேன்... இவளை ஒரு மனநல மருத்துவரிடம் கூட்டிச் செல்லவா?
என்ன செய்யலாம், சொல்லுங்கள் அம்மா. -
- இப்படிக்கு,
அன்பு மகன்.

அன்பு மகனுக்கு -
'எல்லாம் கணவரை கேட்டுதான் சொல்லணும்...' என்பது வழக்கத்தில் நைந்து போன சொற்றொடர். தானியங்களை கொத்த வரும் பறவைகளை பயமுறுத்த வயல்களில் சோளக்காட்டு பொம்மைகளை நிறுத்தி இருப்பர், விவசாயிகள். அதுபோல, கணவரை சகல விஷயங்களில் முன்னிறுத்துவது பெண்களின் தற்காப்பு யுக்தி.
நன்கொடை கேட்டு வரும் கட்சிக்காரரை, 'ஓனர் வெளிய போயிருக்கார்...' என கூறி, கடை உரிமையாளரே விரட்டுவதை பார்த்ததில்லையா?
பொதுவாக அறிவாளி மனைவியரை, கணவர்களுக்கு பிடிக்காது. எதையும் தன்னைக் கேட்டு தான் மனைவி செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பர். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறாளோ உன் மனைவி?
ஏட்டுக்கல்வி பயின்ற நகரத்து பெண்கள் பலர், அறிவிலிகளாக இருக்கின்றனர். வாழ்க்கைக் கல்வி பயின்ற கிராமத்து பெண்கள் பலர், அறிவாளிகளாக இருக்கின்றனர். கேள்வி மேல் கேள்விகள் கேட்டு, உன்னை சீண்டி மன்மத விளையாட்டு விளையாடி, மூன்றாவது குழந்தைக்கு அடி போடுகிறாளோ உன் மனைவி.
இனி நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...
* 'அன்பு மனைவியே... வீட்டின் மகாராணி நீதான். வீட்டின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டியது நீதான். மிகவும் தவிர்க்க முடியாத தருணங்கள் தவிர, மீதி நேரங்களில் என்னை அழைக்காதே. நீ எந்த முடிவெடுத்தாலும் நான் கோபித்துக் கொள்ள மாட்டேன்.
'கணவன் கண்கண்ட தெய்வமல்ல; அவன் உன் தோழன்; சமபங்கு வகிக்கும் கூட்டாளி. அலுவலகப் பணியில் கவனச்சிதறல் இருந்தால், கெட்ட பெயர் வாங்குவேன். அதனால், என் வேலைக்கு பாதகம் ஏற்படும். சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டால் குடும்பத்தை செவ்வனே நடத்த முடியாது.
'டிராபிக்கில் உன் போனை எடுத்தால், விபத்து ஏற்படும். தேவையா யோசி. எடுக்கும் 10 முடிவுகளில், ஆறு சரியாக இருந்தால் நீ கெட்டிக்காரிதான். தாழ்வு மனப்பான்மையை உதறு. தலைமை பண்பை வளர்த்துக்கொள். தினமும் செய்தித்தாள் வாசி. 'டிவி'யில் நியூஸ் சேனல் பார். குழந்தைகள் நோவுக்கான கை வைத்தியங்கள் சேகரித்து வைத்துக்கொள்...' எனக் கூறு
* செய்வினை நம்பிக்கைகளை குப்பையில் துாக்கி வீசு
* மனைவி கேட்கும் ஏன், எதற்கு, எப்படி என்ற அத்தியாவசிய கேள்விகளுக்கு, அறிவுப்பூர்வமாய் பதில் கூறு
* அண்டை அயலாருடன் உன் மனைவியை பழகச் சொல்
* வெள்ளந்தி மனைவியை மனநல மருத்துவரிடம் அழைத்து போய், அவளை மனநிலை பாதிக்கப்பட்டவள் என சித்தரித்து விடாதே
* விடுமுறை நாட்களில் மனைவியை வெளியே அழைத்து போய் சென்னையை சுற்றி காட்டு
* மனைவியின் அப்பாவித்தனத்தை ஏசி, புகார் செய்யாதே
* உன்னிடம் அதிகாரம் செய்யும் தோரணையும், மிரட்டும் தொனியும் இருந்தால் அதை இன்றே அகற்றி விடு
* உன் ஊரிலிருந்து யாராவது முதிய பெண்மணியை வரவழைத்து, மனைவிக்கு துணையாக வை.
* தொலைதுார கல்வி இயக்ககம் மூலமாக மனைவியை பட்டபடிப்பு படிக்க வை.
- என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement