Load Image
dinamalar telegram
Advertisement

திண்ணை!

டாக்டர் மெ.ஞானசேகர் எழுதிய, 'சான்றோர் சிந்தனைகள்' நுாலிலிருந்து:
'வெள்ளி நாக்குப் பேச்சாளர்' என்று புகழப்பட்டவர், தமிழகத்தை சேர்ந்த சீனிவாச சாஸ்திரி. ஜெனிவாவில் அவர் பேசிய ஆங்கில உரையை கேட்டு, பால்ப்ளோர் என்ற ஆங்கில பிரபு, 'உங்களது பேச்சுப் புலமையை கேட்டுத்தான் ஆங்கில மொழியில் இவ்வளவு தனி சக்தியும், திறமையும் உள்ளது என்று தெரிந்து கொண்டோம்...' என்று பாராட்டினார்.

அச்சமயம் ஆப்ரிக்காவுக்கு, இந்திய துாதராக இவரை அனுப்பி வைத்தார், காந்திஜி. காரணம், தென்னாப்பிரிக்காவில் இருந்த வெள்ளையர்கள், இந்தியர்களை மிகவும் கேவலமாக பார்த்தனர், பேசினர்.
இந்தியா பேய், பிசாசு நிறைந்த நாடு; இந்தியர்கள் காட்டுமிராண்டிகள்; கேவலமானவர்கள் என்ற எண்ணம் அவர்களிடம் தலை துாக்கி நின்றது.
இச்சமயம், சீனிவாச சாஸ்திரியின் பேச்சு, அவர்களை மாற்றியது. அங்கிருந்த டர்பன் நகரில் லட்சக்கணக்கில், அவரின் பேச்சு மூலம் நிதி திரட்டி, கல்லுாரியே துவங்கப்பட்டது. தென்னாப்பிரிக்க இந்தியர்கள் கல்வி கற்க அது உதவியது.

ஏ.எல்.எஸ்.வீரய்யா எழுதிய, 'நாடகமும் சினிமாவும்' நுாலிலிருந்து:
ஊமைப்பட சகாப்தத்திலேயே நடிகர் ராஜா சாண்டோ, அகில இந்திய புகழ் பெற்றிருந்தார். அவரது வீர, தீர, சாகசங்களை ரசிக்க, இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருந்தனர்.
அப்போதெல்லாம், பட டைட்டிலில், தயாரித்த கம்பெனியின் பெயரும், டைரக்டர் பெயரும் மட்டும் தான் இடம்பெற்று வந்தது. இதை ஆட்சேபித்து, பம்பாய் பட முதலாளிகளோடு சண்டை போட்டு போராடி, நடிகர் - நடிகையரின் பெயர்களையும், இந்திய படங்களில் முதன் முதலில் வெளியிடச் செய்தார், ராஜா சாண்டோ.
பம்பாயில் வசித்து, ஹிந்தி, பஞ்சாபி, உருது மொழிகளை பேசினாலும், தான் ஒரு தமிழன் என்ற தன்மான உணர்ச்சியை கைவிடாதவர், ராஜா சாண்டோ. அவர், மாத சம்பளத்திற்கு பணியாற்றி வந்த பம்பாய் ரஞ்சித் மூவிடோனில் தான், மேனகா படப்பிடிப்பு நடந்தது. ஸ்டுடியோ சிப்பந்திகள், ஒரு காட்சியில் பழைய சோபாக்களையும், நாற்காலிகளையும் போட்டிருந்தனர்.
ராஜாவுக்கு கோபம் வந்து விட்டது. 'யாரடா அவன் செட்டிங் மாஸ்டர், ரஞ்சித் மூவிடோனில் நல்ல சோபாக்கள் கிடையாதா... ஓட்டை உடைசல்களை எல்லாம் எடுத்துப் போட்டிருக்கிறீர்கள்...' என்று ஹிந்தியில் சத்தம் போட்டிருக்கிறார்.
நல்ல சோபாக்கள் எல்லாம், ஹிந்தி படங்களுக்கு ஸ்பெஷலாக உபயோகிப்பதாக, செட்டிங் மாஸ்டர் சொன்னதை கேட்டதும், ராஜாவுக்கு மேலும் கோபம் அதிகமானது.
'ஏன்டா, ஸ்டுடியோவுக்கு முள்ளங்கி பத்தை போல, 13 ஆயிரம் ரூபாய் வாங்கவில்லையா... எங்கள் தமிழ்நாட்டான் காசு, உங்கள் பாட்டன் வீட்டுச் சொத்தா...' என்று கூச்சல் போட்டு, 'கொண்டாடா சுத்தியலையும், கடப்பாரையையும்...' என்றபடி, 'ஸ்டோர் ரூமின்' பூட்டை உடைக்க போயிருக்கிறார்.
கூச்சல் கேட்டு, ஸ்தலத்திற்கு விரைந்து வந்து நல்ல சோபாக்களுக்கு ஏற்பாடு செய்தாராம், ஸ்டுடியோ முதலாளி, சந்துலால் ஷா.

நடுத்தெரு நாராயணன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement