dinamalar telegram
Advertisement

முதல்வர் பேசுகிறேன்...

Share

வணக்கம்; நான் தமயந்தி நாராயணசாமி. கடலுார் மாவட்டம் விருத்தாச்சலம், கொட்டாரகுப்பம் ஆர்.கே. பூராசாமி நினைவு ஆரம்ப பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை; நான் ஓய்வு பெற்று 17 ஆண்டுகள் ஆயிருச்சு!

அன்று...
அது 1970 காலகட்டம்; செவிவழி கல்வியை விட விழிவழி கல்விக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது! நெல் விளைச்சலை வயல்ல பார்த்து மாணவர்கள் கத்துக்கிட்டாங்க; பணிவோட பெருமையை நெற்கதிர் புரிய வைச்சது. இந்த தலைமுறைக்கு இப்படியான கற்றல் வாய்ப்புகள் இல்லை!

நல்லாசிரியர்
'குளத்துல நம்ம சங்கர் மூழ்கிட்டான் டீச்சர்'னு ஒரு மாணவன் ஓடி வந்தான். அதுவொரு விடுமுறை நாள். பதற்றத்தோட கிளம்பினேன்; எல்லாருமா சேர்ந்து அவனை காப்பாத்திட்டோம். இன்னைக்கு, 'உங்க பிள்ளை சிங்கப்பூர்ல நல்லா இருக்கான் டீச்சர்'னு அவங்க அம்மா சொல்றப்போ விருது வாங்குற மாதிரி இருக்கு!

தெரியாது = பலம்
'ஆசிரியர்னா எல்லாம் தெரிஞ்சிருக்கணும்'னு அவசியமில்லை; ஆனா, தெரியாததை தெரியாதுன்னு ஒத்துக்க பழகியிருக்கணும். இந்த குணத்தை மாணவர்கள் ரசிப்பாங்க; நாமும் வளர்த்துக்கணும்னு ஆசைப்படுவாங்க! இது என் அனுபவம் மட்டுமில்லை... ஆழமான உண்மை!

புதிய ஜன்னல்
ஆசிரியர் பணியில இருக்குற எல்லாரும் ஓய்வு நேரத்துல ஏதாவது புதுசா வாசிச்சுட்டே இருக்கணும்; ஆசிரியர்களோட இந்த அறிவு, மாணவர்கள் உலகத்தை பார்க்கிறதுக்கான புது ஜன்னல்!

அரசியல் படி
அன்றாட செய்திகளை மாணவர்கள் தெரிஞ்சுக்கணும்; சம்பவங்களோட பின்னணியை சந்தேகப்படணும்; அரசியல்வாதிகளோட வார்த்தைகளை நம்பாம செயல்பாடுகளை ஆராயணும்; 'நேர்மையான அரசியல்'ங்கிறது செயல்தான்!

குற்றவாளி
'மாணவர் - ஆசிரியர்' சம்பந்தப்பட்டது மட்டுமில்லை கல்வி; பெற்றோருக்கும் இதுல முக்கிய பங்கிருக்கு. இந்த ஊரடங்கு காலத்துல தங்களோட பெயர்களை பிழையில்லாம எழுதுறதைக் கூட குழந்தைகள் மறந்திருக்காங்கன்னா இந்த குற்றத்துல பெற்றோர்களுக்கும் பங்கிருக்கு!

கொடும் வலி
'கணவன் இல்லை; மகன் வேலைக்குப் போனாத்தான் வீட்டுச்சூழலை சரி பண்ண முடியும்'னு நல்லா படிச்சிட்டிருந்த ஒரு பையனை அவன் அம்மா பள்ளியில இருந்து கூட்டிட்டுப் போனப்போ, தடுக்க முயற்சி பண்ணினேன்; ஆனா, 'நீ விட்டிருக்கக் கூடாது தமயந்தி'ன்னு இன்னமும் மனசு உறுத்திட்டே இருக்கு!

எச்சரிக்கிறேன்
அனுபவம்தான் வாழத் துாண்டும்; இந்த அனுபவத்தை நட்புதான் தரும். இதுக்கு, நண்பர்களோட மனம் விட்டு நிறைய பேசணும். 'நீ என்ன கேம் விளையாடுறே; என்ன சீரிஸ் பார்க்குறே'ங்கிற பழகுதல்... படுகுழி; எச்சரிக்கிறேன்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

 • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

  அந்தக்கால பட்டுபுடவைபோல் ஆழமான கருத்துக்கள். ஒவ்வொன்றும் வெண்முத்து.

 • வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா

  இந்த “குரு”தான்... மாதா, பிதா, குரு, தெய்வம்..ங்கற நான்கில் ஒருத்தரு... அதாவது “தெய்வத்துள் வைக்கப்படும்”... அப்படீன்னு சொல்லப்படுகின்ற ஆசிரியர்... இவங்க சொல்லி இருக்காங்க... ///அது 1970 காலகட்டம்///...னு... அப்ப... “சேவை” மனப்பான்மையுடன், தன்னிடம் பயிலும் மாணவர்களை “ஏற்றி விடும் ஏணி”யாக இருந்தார்கள்... அந்த ஏணி என்றுமே அதே இடத்தில்தான் நிலையாகத்தான் நின்று இருக்கும்... அதன் பணியே மற்றவர்களை ஏற்றிவிடுவது... அதாவது வாழ்க்கையின் உச்சிக்கு ஏற்றிவிடுவது மட்டுமே... அவர்தான் நல்ல ஆசிரியர். அது 1970 காலகட்டத்தில் இருந்தவர்கள், நான் அறிந்தவர்கள் ஏழைகளாக, நடுத்தர வர்க்கத்தினர்தான் ஆசிரியராக இருந்துள்ளனர். அந்த ஆசிரியர்கள்... தம் மாணாக்கர்களுக்கு குருவாக... நல்வழிகாட்டியாக... மாலுமியாக... கடவுளாக இருந்தார்கள்...? இப்பத்து ஆசிரியர்களில் பெரும்பாலோர்... பணம் மட்டுமே பிரதானமாக கொண்டு, கல்வியை வணிக மயமாக்கிக் கொண்டு... தன் வகுப்பில் பயிலும் மாணவரிடம், “என்னிடம் டியூஷனுக்கு வந்துவிடு, இல்லையென்றால் டெஸ்ட்டில் ஜீரோ போட்டுவிடுவேன்”... என்று ரௌடிகளைப் போல மிரட்டுபவர்களும், பணம் பண்ணுவதையே பிரதான தொழிலாக ஆசிரியர் தொழிலை செய்து வருகிறார்கள்... 1968 முதல் 1978 வரையில் நான் நடுப்பள்ளி, உயர் கல்வி பயிலும் வரையில் “ஆசிரியர்” கடவுளாக தெரிந்தார்கள்.... அதுமட்டுமல்லாமல், அப்போது ஆசிரியர்கள், படித்த புத்திசாலிகள் என்பதைவிட “ஒழுக்கமிக்கவர்களாக” திகழ்ந்தார்கள்... அந்த ஆசிரியர்களை... குறிப்பாக, டீச்சரை கண்டால் வானத்திலிருந்து குதித்த சரஸ்வதிகளாகவும், வாத்தியாரை கண்டால் பிரம்மாகவும் இருந்தனர்... ஆசிரியர்களை கண்டால் பயம் ஒருபுறம் இருந்தாலும், பயம் கலந்த மரியாதையும், அன்பும் அவர்கள்மீது இருந்தது... “முன்னேறு நேராச் சென்றால்தான், பின்னேறும் நேராகச் செல்லும்” என்பார்கள் கிராமப் புறத்தில்... அதுபோல... கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள்... ஒழுக்கமிக்கவர்களாக, நேர்மையாளர்களாக, அன்புமிக்கவர்களாக, கண்டிக்கவர்களாக... இப்படி “பன்முக குணங்களை” ஒருங்கே கொண்ட கடவுளர்களாக இருந்ததால்... என்னைப் போன்ற அக்காலத்து மாணவர்கள் இன்று வரை... படித்து பட்டம் பெற்று முதல் ரேங்க் வாங்கினோமோ இல்லையோ... ஒழுக்கத்துடன் - நேர்மையுடன் வாழ்க்கையில் வெற்றி அடைந்தவனாய்... “வெற்றி”யாளனாய் வலம் வருவதற்கு.. அறுபது - எழுபதுகளில் ஆசிரியராக இருந்த நடமாடும் தெய்வங்களான ஆசிரியர்கள்தான் காரணம்... அந்த வகையில்... “எந்தக் கோவிலுக்கு போனாலும், எல்லா சாமியும் ஒண்ணுதே... எந்த வீட்டுக்குப் போனாலும் எல்லா தாயும் ஒண்ணுதே..” என்ற வசனத்தின்படி... “எந்த பள்ளி ஆசிரியராக இருந்தாலும் எல்லா ஆசிரியையும் தெய்வந்தே”... என்ற அடிப்படையில் இந்த “ஆசிரியக் கடவுளின்” பாதந்தொட்டு நமஸ்கரிக்கின்றேன்...

 • naadodi - Plano,யூ.எஸ்.ஏ

  அருமையான கருத்துக்கள் இவர்களிடம் பயின்ற மாணவர்கள் பாக்கியசாலிகள்

 • திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,பிரான்ஸ்

  இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். நல்லது அப்படியே A - Z எமது மொத்த கருத்துக்களையும் நகலெடுத்துக் கொள்ள வேண்டுமே

 • திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,பிரான்ஸ்

  முதல்வர்களின் முதல்வர் இவரே இன்று முதல்வராக இல்லையெனினும் முதன்மையாக கருதப் படவேண்டியவைகளை பத்தி பத்தியாக பளிச்சென பட்டு கத்தரித்தாற்போல சொல்லியுள்ளார் பசுமாராத்தானியாய் பதியவேண்டிய கருத்துக்கள் ஆரம்ப பள்ளியாசிரியர்கள் அனைவர் கண்ணில் பட்டால் பத்தாது கருத்திலும் பட வேண்டுமென விழைகிறேன்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement