Load Image
dinamalar telegram
Advertisement

பின்னணி பாடகி வாணி ஜெயராமின் இசைப் பயணத் தொடர் - நாதமெனும் கோவிலிலே... (4)

இந்திய அளவில், சாதனை புரிந்த சில மூத்த கலைஞர்களுக்கு, இன்னமும் கூட பத்ம விருதுகள் கொடுக்கப்படவில்லை. அதற்காக, வாணி எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா என்ற கேள்வி, மனதில் தோன்றியது.
சில நேரங்களில், மனதில் தோன்றும் அந்த கேள்விகளை நாம் கேட்காமலேயே விடைகள் தானாகவே கிடைக்கும். அதுபோல்தான் ஒரு நிகழ்வை நம்மிடம் பகிர்ந்து கொண்டார், வாணி:
ஒருமுறை, அரபு நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் கச்சேரி முடித்து திரும்பும் நேரத்தில், அங்கிருந்த ரசிகர் ஒருவர் என்னிடம் வந்து, 'இன்னைக்கு நீங்க பாடின, 'நாதமெனும் கோவிலிலே' பாட்டுக்காக, என் உயிரையே கொடுக்க தயாரா இருக்கேன்'னு சொன்னார்.

நான் உடனே, 'பெரிய வார்த்தைகள் சொல்ல வேண்டாம் சார். என் இசை மேல உங்களுக்கு இருக்கிற இந்த அன்பு என்னைக்கும் நிலைச்சிருந்தால் அதுவே போதும்...' என்றேன்.
இப்படி இந்த பிறவியில், முன்பின் அறிமுகமாகாத மனிதர்கள் கூட, என்மேல் இவ்வளவு அன்பு வச்சிருப்பதை விட, வேறென்ன பெரிய விஷயம் இருக்க முடியும், என்றார்.

தான்சேன் விருது உட்பட, ஐந்து விருதுகளை ஒருசேர, வாணிக்கு அள்ளித் தந்தது, குட்டி திரைப்பட பாடல். அதன்பின், பல ஹிந்தி திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. ஹிந்தியில் அப்போது இருந்த உச்சபட்ச இசையமைப்பாளர்கள் அனைவரின் இசையிலும் பாடல்கள் பாடியுள்ளார், வாணி.
அந்த காலத்தில், ஹிந்தியில் மிகப் பிரபலமாக இருந்ததோடு, மராத்தி, குஜராத்தி உட்பட பல மொழிகளில், 'பிசி'யான பாடகியாகி விட்டார். உண்மையில், இவர் ஒரு தமிழ் பெண் என்று அங்கிருக்கும் பலருக்கும் தெரியாது. அவருடைய உச்சரிப்பும், பாடும் விதமும், வட மாநில பெண்ணாகவே நினைக்க வைத்தது.

தமிழில் வாணி, பாட ஆரம்பித்தது எப்போது?
'ஹிந்தியில், வாணி ஜெயராம்ன்னு ஒரு பாடகி, சக்க போடு போட்டுட்டு இருக்காங்க. அவங்கள, மெட்ராசுல ஹிந்தி பாடல் பாடுறதுக்காக, ஒரு கச்சேரி ஏற்பாடு பண்ணா புதுமையாக இருக்குமே...' என்று, சென்னையில் இருந்த சிலர், அவரை தொடர்பு கொண்டனர்.
ஹிந்தியில் அத்தனை, 'பிசி'யாக இருந்தாலும், சிறு வயதில், மெட்ராஸ், 'ஆல் இந்தியா ரேடியோ'வில் பாடியவர், மீண்டும் தன் சொந்த மண்ணான தமிழகத்திற்கு வந்து பாடும் அந்த சந்தர்ப்பத்தை மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து வாணி கூறியதாவது:
நான் பாடின ஹிந்தி பாடல்களோட தொகுப்பா, மியூசிக் அகாடமியில் இரண்டு நாள், பாம்பே ஆர்கெஸ்ட்ராவோட என் கச்சேரியை சபாகாரங்க ஏற்பாடு செய்திருந்தனர். அந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க வந்திருந்தார், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி., சார்.
அப்போ அவர் மேடையில் பேசும்போது, 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் அதிகம்ன்னு சொல்வாங்க. ஆனா, நம் ஊரு பொண்ணு, பாம்பேல போயி இவ்வளவு நல்லா பாடிக்கிட்டிருக்காங்க... நமக்கு இன்னும் அவங்களோட திறமை பத்தி புரியலையே...' என்று சொல்லிட்டு போயிட்டாரு.
இது நடந்தது, பிப்ரவரியில்... அதே ஆண்டு, ஏப்ரல் மாதம், தீர்க்கசுமங்கலி படத்துல பாடறதுக்காக என்னை கூப்பிட்டார். எம்.எஸ்.வி., சாரோட இசையில் நான் பாடின முதல் பாட்டு தான், 'மல்லிகை என் மன்னன் மயங்கும்...' என்ற பாடல், என்றார்.
தீர்க்கசுமங்கலி படத்தின் பெயருக்கு மிகப்பொருத்தமாக அமைந்தது, வாணியின் குரல். அழகான, இனிமையான அந்த குரல், உண்மையில் அந்த தலைப்பிற்கும், லக்ஷ்மி என்ற அந்த கதாபாத்திரத்திற்கும் அத்தனை பாந்தமாக பொருந்தியது. அந்த ஒரே பாட்டின் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானார், வாணி.

மேயர் மீனாட்சி படத்தில், சென்னை பாஷையில், 'இருந்தா நல்லா இரு'ன்ற பாடலை பாடியிருக்கேன். எம்.எஸ்.வி., சார் கூட பாடின, 'டூயட்' பாடல் அது. அந்த பாட்டுக்கு நடுவுல, 'அடச்சீ கம்முன்னு கட'ன்னு ஒரு வசனம் வரும்... அது, எம்.எஸ்.வி., சாரை பார்த்து நான் சொல்ல வேண்டியது. என் குரு ஸ்தானத்துல இருக்கிற அவரை பார்த்து, இந்த வசனத்தை நான் எப்படி சொல்றதுன்னு, எனக்கு தயக்கமா இருந்தது.
ஆனா, என்னோட சங்கடத்தை புரிஞ்சுகிட்ட எம்.எஸ்.வி., சார், 'என்னம்மா இது, சினிமா தானே... கதைப்படி, ஹீரோயின், ஹீரோவை பார்த்து பேசுற மாதிரி வருது. அவ்வளவு தானே... அதனால, கவலையேபடாத, தைரியமா அந்த வசனத்தை சொல்லுங்க...'ன்னு சொன்ன பின் தான், கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சுகிட்டு, அந்த வார்த்தைகளை சொன்னேன்.

எம்.எஸ்.விஸ்வநாதனின் ஆர்கெஸ்ட்ராவை சேர்ந்த, இசைக்கலைஞர் ஒருவர் சொன்ன தகவல்: 'வாணிம்மா மட்டும், எனக்கு, 25 ஆண்டுக்கு முன்ன கிடைச்சிருக்கணும். பல, 'ஹிட்' பாடல்களை கொடுத்திருப்பேன். எவ்வளவு ஞானம் அந்தம்மாவுக்கு...' என, வாணியம்மாவை பற்றி எங்களிடம் பலமுறை சிலாகித்து சொல்லியுள்ளார், எம்.எஸ்.வி.,

தொடரும்.
ஸ்ரீவித்யா தேசிகன்

Telegram Banner
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement