dinamalar telegram
Advertisement

இது உங்கள் இடம்!

Share

வழியா இல்லை பூமியில்!
செல்வந்தர் ஒருவர் வீட்டில் டிரைவராக வேலை செய்து வந்தான், என் தம்பி. விபத்து ஒன்றில் ஒரு காலை இழந்ததால், வேலையை விட்டு நிறுத்தி விட்டனர். வேறு எந்த தொழிலும் தெரியாது. கல்லுாரிகளில் படிக்கும் இரண்டு பிள்ளைகள். வீடு வாடகை உட்பட எல்லா செலவுகளும் பூதாகரமாகியது.
ஏதாவது தொழில் செய்து பிழைக்கட்டுமே என்று, என்னிடம் இருந்த மூன்று சவரன் தங்க சங்கிலியை தம்பியிடம் கொடுத்தேன். அவன், நகையை அடகு வைத்து, பழைய கார்களை வாங்கி, மேற்கொண்டு கொஞ்சம் செலவு செய்து, அதை புதுப்பித்து விற்க ஆரம்பித்தான்.
புதுப்பிக்கப்பட்ட கார்களை வலைதளத்தில் விளம்பரம் செய்வது, மகளின் பொறுப்பு; வரும் வாடிக்கையாளர்களிடம் பேசி, கார்களை விற்பது, மகனின் பொறுப்பு; வரவு செலவு கணக்கு பார்ப்பது, மனைவியின் பொறுப்பு. மீண்டும் வேறு காரை தேர்வு செய்து வாங்குவது, தம்பியின் பொறுப்பு.
இப்படி குடும்பமாக சேர்ந்து தொழிலை திறம்பட நடத்தினர். ஆரம்பத்தில், மாதம் ஒரு கார் மட்டுமே விற்று வந்த நிலையில், தற்போது, தனி இடம் பார்த்து, கார்களை நிறுத்தி விற்பனை செய்யும் அளவிற்கு வியாபாரம் சூடு பிடித்துள்ளது. இவ்வளவும் இரண்டே ஆண்டில் நடந்தன. நான் நகையை கொடுக்கும்போது, திட்டிய என் கணவரிடம், இரண்டு பங்காக திருப்பிக் கொடுத்து நன்றி சொன்னான், தம்பியின் மகன்.
கால் இழந்து விட்டதாக துவண்டு விடாமல், தனக்கு தெரிந்த தொழிலை மூலதனமாக வைத்து, தானும் முதலாளியாகி, அடுத்த தலைமுறையினையும் சிறப்பாக வாழ வைக்கிறான். மேலும், வேலை இல்லாமல் திண்டாடும் சிலருக்கு வேலை அளித்த என் தம்பியை நினைத்து, பெருமைப்படாத நேரம் இல்லை.
எல்லாரிடமும் ஒரு தனி திறமை கண்டிப்பாக இருக்கும். அதை உபயோகித்து வாழ்வில் முன்னேறி காட்டலாமே!
பி. சோமேஸ்வரி, கோவை.

உள்ளூரிலேயே வாங்கலாமே!
வரும் தீபாவளிக்கு பட்ஜெட் போட்டபோது, புது துணிகள் வாங்க, 6,000 ரூபாய் ஒதுக்கினோம். கல்லுாரியில் படிக்கும் என் மகன், 'ஒவ்வொரு முறையும், சென்னையில், தி. நகருக்கு சென்று கூட்டத்தில் நெருக்கியடித்து துணி எடுக்கிறோம்; பிறகு, ஹோட்டலில் சாப்பிடுகிறோம். சில சமயம் வீடு திரும்ப, டாக்சியில் வர நேருகிறது. நாம் போடும் பட்ஜெட், 6,000 ரூபாய் என்றால், முடிவில், 8,000த்தை தாண்டுகிறது.
'கொரோனா முற்றிலும் ஒழிந்தபாடில்லை. எனவே, இம்முறை நம் ஏரியாவிலேயே இருக்கும் கடைகளில் டிரஸ் எடுக்கலாம். உள்ளூர்காரர்களை நாம்தானே ஊக்குவிக்க வேண்டும்...' என்று யோசனை சொன்னான்.
மகன் சொல்வதில் நியாயம் இருப்பது தெரிந்து, மனைவியும் தலையாட்ட, உள்ளூரில் இருக்கும் கடைக்கு சென்றோம். தரம், நியாயமான விலை மற்றும் மனதுக்கும் பிடித்திருந்தது. அதே பட்ஜெட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு புது டிரஸ் எடுப்பதற்கு பதிலாக, தலா மூன்று டிரஸ் எடுத்து வந்தோம்.
டி. சீனிவாசன், சென்னை.

பெண்ணை எங்கே தேடுவர்!
நெருங்கிய உறவினரின் மகளுக்கு, திருமணம் நிச்சயமாகி இருந்ததை அறிந்து, அவரை பார்க்கச் சென்றேன். மணப்பெண் முதுகலை பட்டம் பெற்று, தனியார் கம்பெனியில் பணிபுரிகிறாள். மாப்பிள்ளையின் படிப்பு மற்றும் பணி பற்றி உறவினரிடம் கேட்டேன். மாப்பிள்ளை, புரோகிதராக இருப்பதாய் கூறினார்.
முதுகலை பட்டம் பெற்று பணியில் உள்ள பெண், புரோகிதரை மணக்க சம்மதித்தது ஆச்சரியமாக இருந்தது. என் சந்தேகத்தை வெளிப்படையாகவே உறவினரிடம் கேட்டேன். 'இதற்கு, நான் பதில் சொல்கிறேன்... உங்கள் வியப்பும், சந்தேகமும் நியாயமானது தான். நிறைய படித்து, சம்பாதிக்கும் பெண்கள் தமக்கு சமமான தகுதியுள்ள மணமகனையே தேர்ந்தெடுக்கிறாள். தங்கள் அந்தஸ்துக்கு கீழ் உள்ளவர்களை நிராகரிக்கின்றனர்.
'அப்படியானால், புரோகிதம் செய்பவர்கள், பெண்ணை எங்கே தேட முடியும்... இவர்களுக்கும் நல்ல வருமானம் வருகிறது. வேதம் கற்றதோடு இவர்களில் பலர், கல்லுாரியில் பயின்று பட்டமும் பெற்றுள்ளனர். எனக்கு வரப்போகிறவரும், எம்.பி.ஏ., படித்தவர். இந்த, 'வாத்தியார்' வேலை பிடித்ததால் அதைச் செய்கிறார்.
'கை கட்டி சேவகம் செய்ய விரும்பாது, சுயமாக சம்பாதிக்கும் அவரை எனக்குப் பிடித்தது. திருமணத்திற்கு பச்சைக் கொடி காட்டினேன்...' என்றார், அந்த மணப்பெண். அவளது பதிலில் உள்ள நியாயம், சுரீரென்று சுட்டது.
மீனாட்சி பட்டாபிராமன், மதுரை.

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement