அக்., 20 அன்னாபிஷேகம்
போஜனம் என்றால் உணவு. சொல் வழக்கில் போசனம் என்பர். பொசி + அனம் என, இதை பிரிப்பர். பொசி என்றால் பொதிதல். ஒரு பொட்டலத்தில் ஒரு பொருளை பொதிவது போல, வயிற்றை உணவிட்டு நிரப்புவதே, பொசி ஆனது. போஜனத்துக்கு, அன்னம் என்ற பெயரும் உண்டு.
சிவாலயங்களில் உள்ள மூலவர் லிங்கத்துக்கு, ஐப்பசி மாத பவுர்ணமியன்று, வெள்ளைச் சோறு கொண்டு அன்னாபிஷேகம் நடத்தப்படும்.
சோறு வெண்மையாக இருந்தாலும், அதை சமைப்பவருக்கு என்ன மனநிலை இருக்கிறதோ, அந்த குணத்தை அது அடைகிறது. அதனால் தான், வெள்ளை மனம் வேண்டும். மூர்க்க குணத்துடன் சமைத்தால், அதை சாப்பிடுபவர்களும் மூர்க்க குணத்தையே அடைவர். இதனால் தான், பக்திப்பூர்வமாக சமைத்த வெள்ளை அன்னத்தை, லிங்கத்துக்கு அபிஷேகம் செய்கின்றனர்.
குழந்தைகளுக்கு முதல் சோறை கோவில்களில் வைத்து கொடுப்பதும், அவர்கள் வெள்ளை மனம் பெற வேண்டும் என்பதற்காகவே.
ஐப்பசி பவுர்ணமியன்று, சந்திரன் அதற்குரிய, 16 கலைகளை (ஒளிக்கதிர்கள்) முழுமையாக ஒளிர்விக்கிறது. அது, பூமியின் அருகில் வருவதாகவும் நம்பிக்கை உண்டு. சந்திரனை வெள்ளை நிலா, பால் நிலா என்று வர்ணிப்பது வழக்கம்.
சந்திர ஒளியில் சாப்பிடும் உணவுக்கு, சக்தி அதிகம். குழந்தைகளுக்கு நிலாவைக் காட்டி சோறுாட்டுவதும் இதனால் தான். இந்நாளில், இறைவனின் உடலில் ஒட்டும் உணவு மேலும் சக்தியடைகிறது. அதை தயிர் சேர்த்து சாப்பிடும்போது, அதிக பலம் கிடைக்கிறது.
அன்னத்தை பரபிரம்மம் என்பர். அதாவது, உணவே தெய்வம். இதனால் தான், 'கீழே சிந்தாமல் சாப்பிடு...' என்பர். உணவை வீணாக்குவது, மகா பாவம். அது மட்டுமா... 'பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது' என்பர். கொலை பாவத்தை விட, பொய் பேசுவதால் கிடைக்கும் பாவம் கடுமையானது.
பொய், மற்றவர்களின் வாழ்க்கையை அழித்து விடும். பொய் சாட்சி சொல்வதால், பல குடும்பங்களின் வாழ்க்கை நாசமாவது கண்கூடு. பொய் சொல்பவர்கள் பட்டினி கிடந்தே சாக வேண்டியிருக்கும். பணமிருந்தாலும், சாப்பிட முடியாத நிலை ஏற்படும். சிலர், ஏழ்மையை அடைவர். அவர்கள் பசிக்கிறது என்று உண்மையையே சொன்னாலும் கூட, பொய் சொல்வதாகக் கருதி யாரும் உணவளிக்க மாட்டார்கள். ஆக, உணவின் முக்கியத்துவத்தை உணர்ந்து, போஜன திருவிழாவை அர்த்தத்துடன் கொண்டாடுவோம்.
- தி. செல்லப்பா
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!