dinamalar telegram
Advertisement

கால்நடைகளுக்கு தேவை பசுந்தீவனம்

Share

கால்நடைகள் மூலம் சீரான பால் உற்பத்தி பெற ஆண்டு முழுவதும் தொடர்ந்து அவைகளுக்கு பசுந்தீவனம் அளிக்கவேண்டும். மேய்ச்சலுக்கு விடுவதன் மூலமும் வீரியரக ஒட்டு புற்கள், சோளம் மற்றும் மக்காச்சோளப் பயிர்களை தருவதன் மூலம் கால்நடைகளுக்கு பசுந்தீவனம்
கிடைக்கிறது.

பசுந்தீவனங்கள் கறவை மாடுகளின் கருப்பை வளர்ச்சிக்கும் பால் உற்பத்திக்கும் பெரிதும் உதவுகிறது. பசுந்தீவனம் அதிகம் கொடுப்பதால் பாலில் உள்ள கரோட்டின் என்ற நிறமியின் (வைட்டமின் ஏ) அளவு அதிகரித்து பசும்பால் நிறத்திற்கு காரணமாக உள்ளது. கால்நடைகளின் உற்பத்தி பெருக்கத்திற்கேற்ற உயிர்சத்துக்களும் நுண்ணூட்டச் சத்துக்களும் அதிகமாக உள்ளதால் இயற்கையாகவே அதிக செரிமானத்தன்மை இருக்கிறது.

பெரும்பாலான விவசாயிகள் இத்தருணத்தில் ஒரு பருவ பயிர்கள் சாகுபடி செய்வதாலும் நீர் பற்றாக்குறை இல்லாததாலும் மழைக்காலங்களில் தேவைக்கு மேல் பசுந்தீவனம் கிடைக்கின்றது. கோடையில் பசுந்தீவனம் குறைவதன் மூலம் கால்நடைகளின் உற்பத்தி குறைந்து வருமானமும் பாதிக்கப்படுகிறது. மழைகாலங்களில் உபரியாக கிடைக்கும் பசுந்தீவனத்தை காற்றுபுகாதமுறையில் பதனப்படுத்தி ஊட்டமூற்றி சேமித்துவைத்தால் கோடையில் பசுந்தீவன பற்றாக்குறையை தவிர்க்கலாம். இதனை பதனத்தாள் அல்லது ஊறுகாய்புல் என்றும் சொல்வர். பசுந்தீவன உற்பத்தி அதிகமான காலத்தில் கிடைக்கும் தீவனப்பயிர்களை சேகரித்து அவற்றின் பசுமை மாறாமல் ஊட்டமேற்றவேண்டும்.

பயறுவகை தீவனங்களை மட்டும் தனியே பதனத்தாள் தயாரிப்புக்கு பயன்படுத்தினால் அவற்றில் உள்ள புரதசத்து சிதைப்பட்டு பயன் குறைந்துவிடும். மக்காச்சோளம், வீரிய புல் வகைகள் மற்றும் சோளம் போன்ற தீவனப் பயிர்களுடன் பயறுவகை தீவனங்களை மூன்று அல்லது நான்கு பங்கு புற்களுக்கு ஒரு பங்கு பயறுவகை தீவனம் என்ற விகிதத்தில் கலந்து பதனத்தாள் தயாரிக்கலாம்.

- இளங்கோவன்
இணை இயக்குனர்
பாசன மேலாண்மை பயிற்சி நிலையம், துவாக்குடி
திருச்சி

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Rajesh - Ontario,கனடா

    நகரத்தில் மாடு வளர்ப்பவர்கள் அதற்க்கு பசுந்தீவனம் கொடுப்பது இல்லை நகரத்தில் மாட்டின் வாழ்க்கை ஒரு நரகம் ......குப்பையில் தான் மாடுகள் மேயும் நகரத்தில்

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement