dinamalar telegram
Advertisement

டைனோ என் தோழன்! (7)

Share

முன்கதை: இயற்கை மீது ஆர்வம் கொண்ட சிறுவன் சந்திரஜெயன், விஞ்ஞானியாக பணியாற்றிய மாமாவுடன், அன்டார்டிகாவுக்கு வந்தான். அந்த பகுதிகள் பற்றி அறிய, கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்தான். இனி -

''பனிக் கரடிகள் வந்து தாக்க வாய்ப்பிருக்கு...''
''உல்லன் டிரஸ் போட்டதும், நாமளே கரடி மாதிரி தான் இருக்க போகிறோம்; கரடியை கரடி தாக்குமா...'' என்றான் சந்திரஜெயன்.
''சரி தான்... காபி ஆறிட போகுது... குடி...''
''இங்க குளிக்க முடியுமா...''
''தேவையில்லை... சுடு தண்ணில, உடம்பை துடைச்சுக்க வேண்டியது தான்...''
''தங்கப்போற, 45 நாளும் அப்படி தானா...''
''இங்கே வியர்க்காது; உடல் எப்பவும் மலர்ச்சியாக தான் இருக்கும். உடலில் வெப்பத்தை தக்க வெச்சிக்குறது தான், பெரும் சவால். அன்டார்டிகா என்றாலே மூன்றே விஷயம் தான்; ஒன்று, அடிச்சு துாள் கிளப்பும் காற்று; சுழன்று அடிச்சுட்டே இருக்கும்...
''இரண்டு, மனிதனுக்கு வாழ சாதகமில்லாத சூழல்; மூன்று, 'நறுக்'கென கடித்து வைக்கும் குளிர்; இன்றைய குளிர் எவ்வளவு தெரியுமா...''
''தெரியாது... சொல்லுங்க...''
''மைனஸ் 60 டிகிரி பாரன்ஹிட்...''
''குறைவா... இல்ல அதிகமா மாமா...''
''குறைவு தான்...''
இருவரும் பல் துலக்கி, உடல் முழுதும் சுடுநீரால் துடைத்தனர்.
அடுக்கடுக்காய் உல்லன் ஆடைகளை அணிந்த பின் சாப்பிட்டனர்.
கை, கால்களுக்கு உறை அணிந்து, தலையில், உல்லன் தொப்பி, கழுத்தில், பைனாக்குலர் தொங்க விட்டனர்; இருவரும், 20 கிலோ கூடி, குண்டர்களாக காட்சி அளித்தனர்.
ஆளுக்கொரு, டெலஸ்கோபிக் வாக்கிங் போல் எடுத்தனர்.
குடியிருப்பிலிருந்து வெளியே வந்தனர்.
அங்கு விதவிதமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன; வழியில் இருக்கும் பனிப் பொழிவை ஒதுக்கி, வழி ஏற்படுத்தி தரும் வாகனமும் இருந்தது.
''எந்த வாகனத்தில் பயணம் செய்யலாம் மருமகனே...''
''உங்க இஷ்டம்... எந்த வாகனம் பொருத்தமானது என்பதை நீங்கள் தான் அறிவீர்...''
அங்கு நின்ற குவாடு பைக் ஒன்றை சுட்டிக்காட்டி, ''இதில் தான் பயணம் செய்ய போறோம்...'' என்றார்.
குவாடு வாகனம், '550 சிசி' திறன் உடையது. நான்கு ராட்சச டயர் பொருத்தப்பட்டிருக்கும்; கிளி பச்சை நிறத்தில் காட்சியளித்தது அந்த வாகனம். ஸ்டியரிங்குக்கு பதில் ஹான்பார் இருந்தது.
''இந்த வாகனம், கியரில் இயங்க கூடியது; எல்லா பிரதேசங்களிலும் பயன்படுத்த முடியும்; இரு சக்கர வாகனம் போல் ஓட்டலாம்...'' என்றார் மாமா.
''இரு சக்கரம் என்ன, நான்கு சக்கர வாகனமே ஓட்டுவேன்...''
''ஓட்டும் போது ஒரு பக்கம் இழுக்கும்; கவனமாக ஓட்டணும்; வழியில, பனி, மேடு, பள்ளமாய் உறைந்திருக்கும்; கவனம் பிசகினால் வாகனம் உருண்டு சரிந்து விடும்...''
''கவனித்து ஓட்டுறேன் மாமா...''
விஞ்ஞானிகள் சிலர், யோகிபாபுவிடம், ஹிந்தியிலும், கன்னடத்திலும் பேசினர்.
'இங்கு வந்து, ஒரு நாள் கூட ஆகல; அதுக்குள்ள ஆராய்ச்சியா... இரண்டொரு நாள் ஓய்வெடுக்க வேண்டியது தானே...' என்றனர் நிலைய விஞ்ஞானிகள்.
''எந்த பிரச்னையும் இல்ல நண்பர்களே...'' என்றார் யோகிபாபு.
'இந்த சிறுவன் யார்...' என்றனர் விஞ்ஞானிகள்.
''என் மருமகன் சந்திரஜெயன்; ஏழாம் வகுப்பு படிக்கிறான்; இயற்கையின் காதலன்; மிகவும் வித்தியாசமானவன்...''
'வாழ்த்து மற்றும் பாராட்டுகள்...'
ஜெயனுடன் கைகுலுக்கினர் விஞ்ஞானிகள்.
''இன்றைய தட்ப வெப்பநிலை அறிக்கை பார்த்தாயா... 150 கி.மீ., வேகத்தில் பனிப்புயல் வீச வாய்ப்பிருக்கிறது...'' என்று கூறினார் ஒரு விஞ்ஞானி.
''பனிப்புயல் வீச, ஐந்து சதவீதம் தான் வாய்ப்பு; கடல் வற்றி கருவாடு தின்ன காத்திருப்பவன் நானல்ல...'' என்றார் யோகிபாபு.
'பார்த்து பயணம் செய்யுங்கள்...'
எச்சரித்து விடைபெற்றனர் விஞ்ஞானிகள்.
யோகிபாபுவும், சந்திரஜெயனும் ஆளுக்கொரு குவாடு வாகனத்தில் ஏறினர்; அவை சீறிப் பாய்ந்தன. அன்டார்டிகா, பனிப் பிரதேசம் சூன்ய பிரதேசம் போல் சிரித்தது!
துாரத்தில், ஆயிரக்கணக்கான பென்குவின்கள் கூட்டமாக நகர்ந்தன.
அது, 'ஓவர் கோட்' அணிந்த மனிதர்கள் ஊர்வலம் போவது போல இருந்தது.
''பென்குயின் பராமரிப்பு பற்றி, ஏதாவது சட்டம் இருக்கிறதா மாமா...'' என்றான் சந்திரஜெயன்.
''பென்குயினுக்கு யாரும் இரை இடக்கூடாது; அதை, ஆறு அடி துாரத்தில் இருந்து தான் பார்க்க வேண்டும்; தொடக்கூடாது; தொட்டால், பென்குயின் நம்மை தாக்கும் வாய்ப்பிருக்கிறது...'' என்றார் யோகிபாபு.
''பென்குயினை எனக்கு பிடிக்கும் மாமா... அடுத்த பிறவியில், மகாராஜா பென்குயினாக பிறக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்...''
''மீனை தின்று திமிங்கலத்துக்கு இரையாகவா...''
''எந்த உயிரினத்துக்கும் பிறப்பு இருந்தால், இறப்பும் வர தானே செய்யும்...''
''இந்த வயதிலேயே தத்துவார்த்தமாக பேசுற...''

- தொடரும்...
- வஹித்தா நாசர்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement