dinamalar telegram
Advertisement

அம்பிகா - அர்ச்சனா - ஆராதனா (3)

Share

முன்கதை சுருக்கம்:
விக்ரமை பார்க்கும் அம்பிகா, அவனிடம் ஸாரி கூற செல்கையில், ஆட்டோவில் ஏறி சென்று விடுகிறான். கண்ணாடி கடைக்கு விக்ரம் சென்றதையடுத்து, அங்கு சென்று விசாரித்தாள். 'விக்ரமை காதலிக்கிறாயா...' என, அறை தோழி ரேஷ்மா கிண்டல் செய்ய, அறையை பூட்டி கிளம்பினாள், அம்பிகா.

அம்பிகாவின் மொபைல் நம்ரை விக்ரமிடம் கொடுத்திருந்தான், ராஜேஷ்.
இருப்பினும், 'அம்பிகாவுக்கு போன் செய்து என்ன பேசுவது. நேராக பார்த்தால் தானே முடியும். சம்பந்தமே இல்லாமல், பி.கே.சி., போன்ற பரபரப்பாக இயங்கும் ஏரியாவில் அடிக்கடி சுற்றினால் யாருக்காவது சந்தேகம் வரும். ஆங்காங்கே, சி.சி.டி.வி., கேமராக்கள் இருக்கின்றன. எதையாவது சாக்கு வைத்து, சுற்றுவது தான் சரி...' என்று நினைத்தவனுக்கு, உடைந்த கண்ணாடி, சாக்கானது.
குருதாஸ் ஆப்டிகலில் ஏதோ ஒரு கண்ணாடிக்கு, 'ஆர்டர்' கொடுத்து, அதை வாங்கும் சாக்கில், அந்த ஏரியாவில் சுற்ற வேண்டும் என்று நினைத்தான்.
குருதாஸ் ஆப்டிகலில், விநாயகர், மகாலட்சுமி படங்களுக்கு விளக்கேற்றி பூ போட்டாள், கடை ஊழியரான ஷோபனா. துணியால் அங்குமிங்கும் துாசு தட்டினாள்.
மணி, 10:15க்கு கடைக்குள் நுழைந்தாள், அம்பிகா.
''வாங்க மேடம்!''
''ரெடியா?''
அலமாரியில் இருந்து எடுத்தாள். அழகான கண்ணாடி கூட்டுக்குள், பளிச்சென புது கண்ணாடி. கையில் எடுத்து பார்த்தாள், அம்பிகா. அவன் போட்டுக் கொள்வது போல் அவளுக்கு தோன்றியது.
மெல்லிய சிரிப்புடன் கண்ணாடியை பையில் வைத்து, ''தாங்க்ஸ்,'' என, கடையை விட்டு வெளியேறினாள்.
மணி, 12:10. ஆட்டோவில் வந்து இறங்கிய விக்ரம், கடைக்குள் நுழைந்தான்.
''சார், உங்க கஸின் வந்து கண்ணாடியை வாங்கிட்டு போயிட்டாங்க.''
''கஸினா?'' அதிர்ச்சியாகி, புரியாமல் கேட்டான்.
''ஆமா சார். நான் இதை, 'சர்ப்ரைஸ் கிப்டா' குடுக்கணும்ன்னு வாங்கிட்டாங்க. பணமும் கொடுத்துட்டாங்க. ஸாரி சார். நான் தான், 'சர்ப்ரைஸ்'ச போட்டு உடைச்சிட்டேன்.''
''யார் அவங்க. எப்படி இருந்தாங்க?''
''நல்ல கலரா இருந்தாங்க, சார். அவங்க கார்டு கூட கொடுத்தாங்க. இந்தாங்க...'' என்று நீட்ட, அம்பிகா பெயரைப் பார்த்ததும் உள்ளூர சந்தோஷப்பட்டான், விக்ரம்.
''நீ எதுக்கு மா கொடுத்த?''
''உங்க கஸின்னு சொன்னாங்க...''
''என் மாமா பொண்ணு தான். அவகிட்டயிருந்து வாங்குறது ரொம்ப கஷ்டம். சரி நான் பாத்துக்கறேன்,'' என்று கிளம்பினான்.
'ராஜேஷ் கொடுத்த நம்பரும், கடையில் பெண் கொடுத்த நம்பரும், ஒன்று தான். எனவே, இவள் தான், நான் பார்க்க வேண்டிய அம்பிகா. பிடி கிடைத்திருக்கிறது. சின்ன நாடகம் நடத்த வேண்டும்...' என, எண்ணியபடி, அவள் அலுவலகத்தை நோக்கி நடந்தான்.
கட்டடத்தின் கீழ்தளத்தில், எதிரெதிராக, 'லிப்ட்'கள் இருந்தன. 'லிப்ட்'டுக்காக காத்திருந்தவர்களோடு விக்ரமும் சேர்ந்து கொண்டான். 10வது மாடியில் இறங்கினான். ஏதோ, ஸ்டார் ஹோட்டலுக்குள் வந்த உணர்வு.
இரண்டு காவலாளிகள் நின்றிருந்தனர். இவர்களிடம் எல்லாம் விசாரிக்க கூடாது என நினைத்து கொண்ட விக்ரம், 'ஸ்டைல்' ஆக பாக்கெட்டில் கை விட்டு, தன் போனில் ஆங்கிலத்தில் கோபமாக பேசியபடி,
உள்ளே நுழைந்தான். யாரோ புது அதிகாரி
என நினைத்து, 'சல்யூட்' அடித்தனர், காவலாளிகள்.
நடு ஹாலுக்கு வந்து நின்ற விக்ரம், ஏகப்பட்ட இளைஞர்கள் பரபரப்பாக வேலையில் மூழ்கி இருக்கும் தளத்தில் அம்பிகாவை தேடினான்.
ஒரு ஐடியா!
வாயருகே கையை குவித்து வைத்து, ''மிஸ் அம்பிகா! மிஸ் அம்பிகா!'' என்று, சத்தமாக கூவினான்.
திடீரென யாரோ சத்தம் போட்டதால், வேலை செய்து கொண்டிருந்த மொத்த பேரும், விக்ரம் நிற்கும் திசையை பார்த்தனர்.
கேபினிலிருந்து சில அதிகாரிகள் வெளியே வந்து பார்த்தனர்.
விக்ரம் மீண்டும், ''அம்பிகா எங்க இருக்கீங்க...'' என்றதும், 'கான்ப்ரன்ஸ்' அறையிலிருந்து பதட்டமாக ஓடி வந்தாள், அம்பிகா.
அவள் வந்ததும், ''எத்தனை தடவை கூப்பிடறது? உடனே வர முடியாதா?'' என, கோபமாக கேட்டான்.
''மிஸ் அம்பிகா! வாட்ஸ் ஹாப்பனிங்? யார் இவர்... இங்க வந்து சத்தம் போடறாரு?'' என்றார், அதிகாரி ஒருவர்.
''ஹலோ, ஹலோ...'' என்று, விக்ரம் ஏதோ சொல்ல ஆரம்பிக்கும் முன், அவனை இழுத்துக் கொண்டு வெளியேறினாள், அம்பிகா.
வராண்டாவில் நடந்து கொண்டே, ''நீங்க யாரு? உங்களுக்கு எதுக்கு இந்த வேலை?'' என்று, கோபமாக இருப்பவன் மாதிரி பேசிக்கொண்டே போனான்.
காத்திருப்போர் அறையில், விக்ரமுடன் நுழைந்தாள். எதுவுமே சொல்லாமல், குருதாஸ் ஆப்டிகல் பாக்சை, அவனிடம் நீட்டினாள். வாங்கி கண்ணாடியை பார்த்தான், விக்ரம்.
''ஓ.கே., யா?'' என்றாள்.
''என்ன ஓ.கே., யா? நான், 'ஆர்டர்' குடுத்தது. நான் போய் வாங்கிக்க மாட்டேனா? நீங்க எதுக்கு எனக்காக பணம் குடுக்கணும்? நான் என்ன வசதி இல்லாதவனா?'' என்று பேசிக் கொண்டே போனான்.
''ஷ்ஷ்ஷ்... இது என் ஆபிஸ்.''
''தெரியும்.''
''ஏற்கனவே சத்தம் போட்டு மானத்தை வாங்கினது போதும்.''
''எனக்காக நீங்க எதுக்கு பணம் குடுத்தீங்க... என்ன உங்க ஐடியா?''
''இத பாருங்க... என்னால் தான் உங்க கண்ணாடி உடைஞ்சது. அதுக்கு பரிகாரமா புதுசு வாங்கி குடுத்தேன். வேற எதுவும் இல்லை.''
''இதுக்கு பதிலா என்னைப் பார்த்து ஸாரி சொல்லிட்டு போயிருக்கலாமே?''
''அன்னிக்கே, 'ட்ரை' பண்ணிணேன். ஸ்டேஷன்ல சொல்றதுக்குள்ள ரயில் கிளம்பிடுச்சு. நேத்து சாயங்காலம் எதிர் பிளாட்பாரத்தில் நின்னு யார்கிட்டயோ பேசிக்கிட்டு இருந்தீங்க.''
''நானா?''
''ஆமா. 'ப்ளு ஷர்ட் - ப்ளாக் பேன்ட்!' அப்போவும் ஸாரி சொல்ல முடியலை. குருதாஸ் கடைக்கு போயிட்டு அப்படியே ஆட்டோல ஏறி போயிட்டீங்க.''
விக்ரம் கடகடவென சிரித்தான்.
''ஸோ, என்னை, 'பாலோ' பண்ணிக்கிட்டே இருக்கீங்க...''
''நோ... நோ...''
''என்னோட, 'பேன்ட் - ஷர்ட்' கலர் வரைக்கும் கரெக்டா சொல்றீங்க. எனக்காக செலவு பண்றீங்க. நான் வருவேன்னு தெரிஞ்சு, கடைல உங்க, 'டீடெயில்ஸ்' சொல்லிட்டு வந்திருக்கீங்க. நிஜமா சொல்லுங்க. என்னை, 'லவ்' பண்றீங்களா?''
அதிர்ச்சியானாள், அம்பிகா.
''சேச்சே! அதெல்லாம் இல்லை. உளறாதீங்க.''
''நீங்க வாயால் இல்லைன்னு சொன்னாலும், உங்க கண்ணு
ஆமான்னு சொல்லுதே.''
''இல்லை சத்தியமா இல்லை...''
''சரி! ஒண்ணு பண்ணுவோம். முன்ன பின்ன தெரியாத ஒருத்தனுக்காக ஒரு பொண்ணு செலவழிக்கறா, அவனை கண்காணிக்கிறா, அவனையே நினைச்சுக்கிட்டு இருக்கான்னா, என்ன அர்த்தம்ன்னு, உங்க ஆபிஸ்லயே கேட்போம் வாங்க,'' என்று அவன் நகர...
அவன் கையை இழுத்து பிடித்து நிறுத்தினாள்.
''தயவு செய்து போயிடுங்க. இதுக்கு மேல் இதை பத்தி பேசிக்கிட்டிருக்கிறது சரியில்லை, ப்ளீஸ்,'' என்றாள்.
அவள் கையில் கண்ணாடியை வைத்தான், அவன்.
''எப்போ என்னை, 'லவ்' பண்றேன்னு உண்மையை ஒத்துக்கறீங்களோ, அப்போ வாங்கிக்கறேன்,'' என்றவன், பாக்கெட்டில் இருந்து பேனாவை எடுத்து, அவள் உள்ளங்கையில் மொபைல் நம்பரை எழுதிவிட்டு, ''பை...'' என்று கிளம்பினான்.
புரியாமல் பார்த்தபடி நின்றாள், அம்பிகா.
அன்றிரவு-
''அம்பிகா இதோ பார்! இல்லை இல்லைன்னு சொல்லி உன்னையே நீ ஏமாத்திக்காத,'' என, ரேஷ்மா பேச, கேட்டுக் கொண்டிருந்தாள், அம்பிகா.
''ரயில்வே ஸ்டேஷனோட அவனை மறந்திருக்க வேண்டியது தானே... கண்ணாடிக்கு பணம் கொடுத்த, எதுக்கு கையோட கொண்டு வந்த... அவன் வந்து உன்ன பாக்கணும்ன்னு தானே கடைல உன் கார்டை கொடுத்த... இதையெல்லாம் வெச்சு பார்க்கும் போது, எனக்கே இது, 'லவ்'வுன்னு தோணுதே. அவனுக்கு தோணாதா?''
கேள்விகளை ரேஷ்மா அடுக்கிக் கொண்டே போக, அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள், அம்பிகா.
தொடர்ந்தாள், ரேஷ்மா...
''ஒருத்தன் ஆபீசுக்கே வந்து, நடு ஹால்ல நின்னு, உன் பேர சொல்லி கத்தியிருக்கான். அப்பவே பளார்ன்னு அறைஞ்சு அனுப்பி இருக்கணும். 'விசிட்டர்' அறையில், அவன் கேட்டானா இல்லையா? 'லவ்' பண்றியான்னு. அங்க சும்மா இருந்திருக்கியோ என்ன நாடகம் இது?
''அம்பிகா! 'லவ்' ஒண்ணும் தப்பில்லை. 'டோண்ட் டிலே பர்தர்!' அவ்வளவு தான். குட் நைட்...''
இரவு விளக்கு வெளிச்சத்தில், கண்களை மூடாமல் படுத்திருந்தாள், அம்பிகா. அவள் கை மெதுவாக டேபிள் மீதிருந்த கண்ணாடி கூட்டைத் தொட்டது.
- தொடரும்.
கோபு பாபு

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement