dinamalar telegram
Advertisement

அன்புடன் அந்தரங்கம்!

Share

அன்புள்ள சகோதரிக்கு -
என் வயது: 47. கணவர் வயது: 55. சொந்தமாக போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்துகிறார், கணவர். எங்களுக்கு ஒரே மகள். வயது: 22. எங்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் கழித்துதான் பிறந்தாள். குறை பிரசவம்; 'இன்குபேட்டரில்' வைத்து காப்பாற்றினோம்.
அவள், 10 வயது வரை சோனியாக, ஒல்லிகுச்சியாக இருந்தாள். யாருடனும் விளையாட மாட்டாள். எப்போதும் சிடுசிடுவென இருப்பாள். சாப்பிட அடம் பிடிப்பாள். படிப்பில் சராசரியாக இருந்தாள்.
கணவருக்கோ, அவளை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்று, பெரிய கனவு. பல டியூஷன்கள் வைத்தார். மகளின் படிப்புக்கு பணத்தை வாரி இறைத்தார். பிளஸ் 2 தேர்வு எழுதினாள். 390 மார்க் எடுத்து பெயிலானாள்.
'இவ்வளவு செலவு பண்ணியும் பெயிலாகி தொலைச்சிருக்க... நீ, ஒரு படிப்பறிவில்லாத முண்டம்... என் மூஞ்சில முழிக்காத...' என, மகளை திட்டி விட்டார், கணவர்.
அவமானம் தாங்காமல், மூன்றாவது மாடியிலிருந்து குதித்து விட்டாள். தலையில் பலத்த காயம். உடலில், 21 இடங்களில் எலும்பு முறிவுடன் உயிர் தப்பினாள். அவள் எழுந்து நடமாட ஒரு ஆண்டு ஆயிற்று.
சிகிச்சைக்காக பணத்தை தண்ணீராக செலவழித்தார், கணவர். மகள் நலம் பெற வேண்டி, கோவில் குளங்கள் ஏறி இறங்கினோம்.
'இனி, நீ படிக்க வேண்டாம்; எங்களுக்கு மகளாய் உயிரோடு இருந்தால் போதும்...' என, அவளை அமைதிபடுத்தினோம். இருந்தாலும், மீண்டும், பிளஸ் 2 தேர்வு எழுதி, 610 மார்க் எடுத்து, பாஸாகி விட்டாள். அதன்பின், கடந்த மூன்று ஆண்டுகளாக அவளுடன் போராட்டம் தான்.
'எனக்கு, ஐபோன் வாங்கிக் கொடுங்க. இல்லேன்னா தற்கொலை பண்ணிப்பேன்...' என மிரட்டுவாள். வாங்கிக் கொடுத்து விடுவார், கணவர்.
'பத்து பவுனில் எனக்கு செயின் வாங்கிக் கொடுங்க. இல்லேன்னா தற்கொலை பண்ணிப்பேன்...' என மிரட்டுவாள். கடனை வாங்கி செயின் செய்து கொடுத்தார். தொடர்ந்து தற்கொலை மிரட்டல்கள் தான்.
என் கணவரின் வழியில் நான்கைந்து பெண்கள், தற்கொலை செய்துள்ளனர் என்பது என்னை உறுத்தும் செய்தி.
ஆறு மாதங்களுக்கு முன், ஒரு குண்டை துாக்கி போட்டாள்.
'கேபிள் கனெக் ஷன் கொடுக்கிறவனை காதலிக்கிறேன். எனக்கு அவனை கல்யாணம் பண்ணி வைங்க. இல்லேன்னா தற்கொலை பண்ணிப்பேன்...' என, மிரட்டுகிறாள்.
கேபிள்காரனிடம் எல்லா கெட்ட பழக்கவழக்கங்களும் இருக்கின்றன. 10ம் வகுப்பு வரை படித்திருக்கிறான். அவனோடு பிறந்தது, நான்கு தங்கைகள். அவன் அப்பா, பிளம்பர்; அம்மா, சத்துணவுக்கூட ஆயா. எவ்வளவு சொல்லியும், அடங்கமாட்டேன் என்கிறாள். மகளின் அடங்காத காதலில் நிலைகுலைத்து போய் நிற்கிறோம்.
தகுந்த ஆலோசனைகள் வழங்குங்கள், சகோதரி.
- இப்படிக்கு,
அன்பு சகோதரி.

அன்பு சகோதரிக்கு —
ஒருமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டோர், மீண்டும் மீண்டும் முயல்வது இயல்பாய் நடப்பது தான். தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என மிரட்டுபவர்கள் அதிக கவனம் செலுத்தி தடுப்பது நம் கடமை. தற்கொலை உணர்வு ஒரு பரம்பரை நோய் என்பது, விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.
உங்களது அன்பில் ஒரு செயற்கைத்தனத்தை காண்கிறாள், மகள். அப்படி காண்பது அவளின் தவறான புரிதலாகக் கூட இருக்கலாம். அவள் படிக்க விரும்பாத, சிறு சிறு விஷயங்களுக்கு பெரிதும் உணர்ச்சிவசப்படுகிற, எளிதில் காமவயப்படுகிற, சுயநலப்பெண்ணாய் இருக்கிறாள் என யூகிக்கிறேன். அவள் விஷயத்தில் நீங்கள் செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...
* அம்மா என்ற ஸ்தானத்திலிருந்து இறங்கி, தோழியாய், மகளை உள்ளும் புறமும் நெருங்கு. 'மகளே... எங்கள் வாழ்வின் அர்த்தமே நீதான். படித்தாலும், படிக்காவிட்டாலும், நீ என் மகள் தான். ஒரு பெண்ணின் சராசரி வாழ்நாள், 71 வயது. நீ, 100 வயது வரை வாழ வேண்டும் என, விரும்புகிறோம்.
'இறைவன் தந்த உயிரை நீ மாய்த்து கொள்ள நினைப்பது நியாயமா? நீ கேட்பதெல்லாம் வாங்கி தரும் எங்களுக்கு, நீ தவறு செய்தால், இரண்டு வார்த்தை திட்டுவதற்கு உரிமை இல்லையா... ஒரு பொருளை வாங்கினால், 'வாரன்டி
கார்டு' கேட்கிறோம்.
'அதேபோல், 50 - 60 ஆண்டுகள் சேர்ந்து வாழப்போகும் ஆணிடம் குறைந்தபட்ச உத்திரவாதம் எதிர்பார்க்க மாட்டாயா... உன் காதலுக்கு, இரண்டு ஆண்டுகள் நன்னடத்தை காலம் நிர்ணயி; இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் அவனைதான் கல்யாணம் பண்ணிக் கொள்வேன் என, நீ கூறினால் நாங்கள் மனப்பூர்வமாக உன் காதலை ஏற்கிறோம்.
'இனி, எக்காரணத்தை முன்னிட்டும், 'தற்கொலை செய்து கொள்ள மாட்டேன்' என்று உறுதி கூறு. எது வேண்டுமானாலும் எங்களிடம் நீ உரிமையாக கேட்டு பெறு; உணர்வுப்பூர்வமான மிரட்டல் விடுக்காதே. நாங்கள், உன்னை எங்கள் உயிருக்கு
மேலாக நேசிக்கிறோம் அம்மா...'
எனக் கூறு
* மகள் காதலிக்கும் பையனின் நல்லது கெட்டதுகளை பதிவு செய்து, முழு வீடியோ ஆதாரம் சேகரித்து, அவளுக்கு போட்டு காட்டு
* மகளின் ஒழுக்கமான தோழியர் மூலம், அவளின் காதலன் பற்றிய உண்மைகளை முழுமையாக கூறு
* மகளை வாரா வாரம், கோவிலுக்கு கூட்டி போ. இருதரப்பு பாட்டி - தாத்தா வீட்டுக்கு அவளை அனுப்பு
* தன்னம்பிக்கை, சுயசரிதை ஆடியோ, வீடியோக்களை மகள் முன் ஒலிக்கச் செய்
* மகளுடன் சேர்ந்து உணவு உண்ணுங்கள். இரவு அவளை உன்னுடன் படுக்க சொல்
* படித்து வேலைக்கு போய் தனக்கென சுய அடையாளம் அமைத்து, சொந்தக்காலில் நிற்கும் பெண்களை மகளிடம் பேச வை
* தற்கொலையிலிருந்து மீண்டு மாபெரும் வெற்றி பெற்றவர்களின் கதைகளை மகளுக்கு கூறு
* மனநல ஆலோசகரிடம் மகளை அழைத்து சென்று, தேவையான ஆலோசனைகளை வழங்க செய்.

— என்றென்றும் பாசத்துடன்,
சகுந்தலா கோபிநாத்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement