dinamalar telegram
Advertisement

காதல் போயின்!

Share

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் அல்லது குணம் பெரிதேயன்றி குலமல்ல

கவிதைப் புத்தகத்தைப் புரட்டி பார்த்துக் கொண்டிருந்தாள், அமராவதி.
எழுதியவர், 'அம்பிகா' என்று போட்டிருந்தது. அம்பிகாபதி தான் அவன் என்பது, பின்னர் தெரிந்து கொண்டாள்.
அவள் படித்த கல்லுாரியின் தமிழ் மன்றத்திற்கு, சிறப்புப் பேச்சாளனாக வந்தான். அவன் கையெழுத்துப் போட்டுத் தந்த கவிதைப் புத்தகத்தில், பக்கத்துக்கு பக்கம் கவிதையுடன் ஒரு கனவும் கண்டாள்.
ஏழ்மையான கோவில் குருக்களின் மகன், அம்பிகாபதி.
கோவில் தர்மகர்த்தாவின் தயவால், தங்குவதற்கு வீடும், மளிகை பொருட்களும் வீடு தேடி வந்து விடும். அவரின் சிபாரிசால், கல்லுாரிப் படிப்பை அம்பிகாபதியால் தொடர முடிந்தது. சொற்பொழிவுகள் மூலம் கொஞ்சம் பொருளீட்டினான்.
அன்று -
காலை நேர நடை பயிற்சிக்காக, அமராவதி வர, தற்செயலாக, அம்பிகாபதியும் அதே இடத்திற்கு வந்தான்.
அமராவதியின் கையிலிருக்கும் இவன் கவிதை புத்தகம் கீழே விழ, அதை அவன் எடுக்க குனிய, அவளும் குனிய, இருவர் உடலிலும் மின்சாரம் பாய்ந்தது. அதன்பின், இருவரும் கவிதைப் பற்றி பேசிப் பேசி, காதலிக்க ஆரம்பித்தனர்.
ஒருநாள் -
அமராவதியின் மொபைல்போன் ஒலித்தது. குளியல் அறையிலிருந்து இவள் வெளிவர தாமதமானதால், போனை எடுத்தார், அப்பா.
''யாரும்மா அது, உன் பிரண்டா... அம்பிகான்னு போட்டிருக்கு?''
''ஆ... ஆமாம்... பிரண்ட் தான்.''
''வாட்ஸ் - ஆப்பிலே கவிதை வேறு அனுப்பி இருக்கா...''
''ஆ... ஆமா, நல்லா கவிதை எழுதுவா.''
அம்பிகாபதிக்கு, 'ஸ்மார்ட் போன்' வாங்கிக் கொடுத்ததே, இவள் தான். கவுரவம் பார்க்கும் அப்பா, தன் அந்தஸ்திற்குக் குறைவான மனிதர்களை மதிக்காதவர். அதனாலேயே, போன் செய்யாதே என்று சொல்லி இருந்தாள்.
தப்பித் தவறியும், அப்பாவின் கண்களில் படாமல் சந்தித்தனர்.
''என்ன சொல்றே?'' என்றான், அம்பிகாபதி.
''ஆமாம்... என்னமோ திடீன்னு டில்லி போகணும்கறார், அப்பா... அவரோட நண்பர், வெளிநாட்டிலேர்ந்து ரொம்ப நாளைக்கப்புறம் இந்தியா வந்தவர், டில்லியில் தங்கியிருக்கிறார். அப்பாவை பார்க்கணுமாம்.''
''திரும்பி வர எத்தனை நாளாகும்?''
''தெரியலை... என்னமோ பயமா இருக்கு.எதுவா இருந்தாலும், எனக்கு போன் பண்ணாதே; மேசேஜும் அனுப்பாதே. தேவைப்பட்டா, நானே உன்னை, 'கான்டாக்ட்' பண்றேன்.''
வீட்டிற்கு வந்தபோது, பரபரப்பாக, 'பேக்' செய்து கொண்டிருந்தார், அப்பா.
''சீக்கிரம்மா... நீயும், 'பேக்' பண்ணு... நாளை காலையில, 'ப்ளைட்'லே டில்லி கிளம்பறோம்.''
''இத்தனை சீக்கிரமாவா?''
''யெஸ்... உன் ப்ரண்ட் பேர் என்ன... ஆ... அம்பிகாகிட்டே சொல்லிட்டியா?''
''இ... இல்லை அவ ஊருக்குப் போயிருக்கா.''
அம்பிகா என்பது பெண்ணல்ல; ஒரு ஆண். கோவில் அர்ச்சகரின் மகன். தன் மகளின் காதலன். 'வாட்ஸ் - ஆப்' நம்பரை வைத்து, இவர் கண்டுபிடித்த உண்மைகள்.
கோடி கணக்கில் சொத்துள்ள தான்
எங்கே, ஒரு அர்ச்சகரின் மகன் எங்கே? முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும். அன்றே தீர்மானித்து, நண்பனுக்கு போன் செய்து, டில்லி பயண ஏற்பாடுகளைச் செய்து விட்டார்.
ஒரு வாரமாகி விட்டது. டில்லியில் அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்தனர்.
அடுத்து, ஹரித்துவார், ரிஷிகேஷ் மற்றும் கேதார்நாத் பயணத் திட்டம் வகுத்தார், அப்பாவின் நண்பர்.
'இது பயணத் திட்டமா, இல்லை, தன்னை துாரமாக அழைத்துப் போகும் சதித் திட்டமா?' என்ற சந்தேகத்தில் அம்பிகாவுக்கு தகவல் சொல்ல,பெட்டியைத் திறந்தாள். போன் வைத்திருந்த பவுச் காலியாக இருந்தது.
கேதார்நாத் போகும் பாதையின், 'பேஸ் கேம்'ப்பான, 'கவுரி குண்டில்' ஹோட்டல்
அறையின் வெளியே நின்று, இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்தாள், அமராவதி.
தன் மொபைல் போன் காணாமல் போன விபரத்தை அப்பாவிடம் சொன்னபோது, அவர் எந்தவித ஆச்சர்யத்தையும் காட்டவில்லை.
''அப்படியா... ஊரிலேயே மறந்து வைச்சிருப்பே; போய் பார்த்துக்கலாம் விடு. இப்போ அப்படி என்ன தலை போற அவசரம்?'' என்றார்.
சிறுமியாக இருந்தபோது, இவள் பேபி சைக்கிள் காணாமல், அப்பா செய்த ஆர்ப்பாட்டம் நினைவுக்கு வந்தது. அப்போது, இவள் மகள் மட்டுமே; இப்போது, காதலி!
அறைக்குள் நுழைந்தாள், அமராவதி. வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார், அப்பா. கைடாக வந்தவன், உதவிக் கொண்டிருந்தான்.
''என்னாச்சு?'' என்றாள்.
''லேசா காய்ச்சல், சாப்பாடு ஒத்துக்கலை. 'வெதர்' வேற சரியில்லை. மழை துாறுது,
என்னால மேலே வர முடியாது. இத்தனை துாரம் வந்தாச்சு... நீ, இவரைக் கூட்டிட்டு, போலேநாத் தரிசனம் பண்ணிட்டு வந்துடு,'' என்றார், அப்பா.
''டாக்டரை கூப்பிடட்டுமா அப்பா?''
''வேண்டாம்மா... மாத்திரை போட்டுட்டேன்; நீ கிளம்பு. சீக்கிரமா போனாத்தான் சீக்கிரம் திரும்ப முடியும்.''
கிளம்பினாள், அமராவதி.
'நமோ நமோ சங்கரா... ஹரே ஹரே சங்கரா...'
பக்தர்கள் கூட்டத்துடன் கலந்தாள். மழை வேறு, நடக்க முடியவில்லை.
''இருங்க மேடம்... நான் ஒரு கோடாவாலா ஏற்பாடு பண்றேன்.''
ஒரு குதிரைவாலாவுடன் வந்தான்.
''ஏகக் கூட்டம். ஒரே ஒரு கோடா தான் கிடைச்சது. அதுவும் இந்த, 'டூரிஸ்ட் புக்' பண்ணினது. நான், 'ஷேர்' பேசி, கூட்டிட்டு வந்திருக்கேன். நீங்க குதிரையிலே உக்காருங்க... இவர் கூட நடந்து வரேன்னு சொன்னார்,'' என்றான், கைடு.
அந்த, 'டூரிஸ்ட்' திரும்பினார்.
'இவனா?'
ஆச்சரியம் காட்டிய அம்பிகாபதியை, கண்களால் எச்சரித்தாள். நல்லவேளை, அந்த, 'கைடு'க்கு தமிழ் தெரியாது.
பத்தடி முன்னால் நடக்க ஆரம்பித்தான், கைடு. அமராவதி கைகளைப் பிடித்து குதிரை மீது ஏற உதவினான், அம்பிகாபதி. குதிரைக்காரருடன் நடக்க, அம்பிகாபதியும் உடன் நடந்தான்.
சுற்றிலும் உடுக்கை ஒலியும், சிவ நாமமும் துணை வர... இருவரும் நடந்தவைகளை பகிர்ந்து கொண்டனர்.
''ஊர் திரும்பியதும், அப்பா... நண்பரோட மகனுக்கு என்னை கட்டிக் கொடுக்கப் போவதாக அவரிடம் பேசியதைக் கேட்டேன். ஆண்டவனாப் பார்த்து நம்மளை இணைச்சிருக்கார்... இப்படியே ஓடிடலாமா?''
''வேண்டாம் அமரா, காத்திருப்போம்... 'தண்ணீரைக் கூட சல்லடையால் அள்ளலாம்... அது, பனிக்கட்டியாகும் வரை காத்திருந்தால்'ன்னு ஒரு வாசகம் உண்டு.''
அம்பிகாபதியின் இந்த திடீர் பயணம் கூட, தற்செயலாக நிகழ்ந்தது தான். அவர் அப்பாவுக்கு அடைக்கலம் தந்த தர்மகர்த்தா, கேதார்நாத் பயணம் புறப்பட, துணைக்கு இவன் அப்பாவும் வர... இவனும் தனிமையை கொல்ல, உடன் வர, எப்படியோ அமராவதியை சந்தித்து விட்டான்.
உயரத்தில், போலேநாத்தின் திருக்கோவில் தெரிந்தது.
ஒரு ஆரத்தி தட்டு வாங்கி, சன்னிதிக்குள் நுழைந்தாள், அமராவதி.
கைகளைக் கோர்த்து, கண்களை மூடியபடி, இருவரும் மெய் மறந்து தரிசனம் செய்தனர்.
திடீரென்று பெருத்த இடியோசை. மக்கள் கூக்குரல், 'ஓடுங்கள்...' என்ற ஹிந்தி அறிவிப்பு...
வெளியே வந்து பார்த்தபோது, வானம் இருண்டு, மின்னல் மின்ன, மலை முகட்டுகளிலிருந்து, வெள்ளம் பாய்ந்தோடியது, பாறைகளையும் பெரிய பெரிய கற்களையும் பந்தாடியபடி சாதுவாக இருந்த, மந்தாகினி, பிரளய ரூபமெடுத்து, ருத்ர தாண்டவம் ஆடியது. அந்த இடம், ஒரு மயான பூமியாக மாறியது.
அம்பிகாபதியின் தோளில் மயங்கிச் சாய்ந்தாள், அமராவதி.
நன்றாக உறங்கிக் கொண்டிருந்த, அமராவதி அப்பாவின் உறக்கம் திடீரென்று தடைப்பட்டது. வெளியே என்ன ஆரவாரம் என பார்ப்பதற்குள், அறை கதவு திறந்து, திடீரென்று, 10 - 15 பேர் ஓடி வந்தனர்.
வெளியே கரை புரண்டு ஓடும் வெள்ளம். அனைவர் கண்களிலும் மரண பீதி தென்பட்டது. மாளிகையில் வாழ்பவர்களும், சகதியில் வாழ்பவர்களும், ஒன்றாக அடைக்கலம் தேடும் இக்கட்டான சூழ்நிலை.
குளிரில் நடுங்கியபடி, வெள்ளத்தின் உக்கிரத்தை பார்த்து, தப்பிப்போமா, சாவோமா என்று பயந்தபடி மக்கள். அதில், இவரும் ஒருவர். 'ஓம் நமச்சிவாய' கதறல்கள்.
'தென்னாடுடைய சிவனே போற்றி' ஒரு தமிழ் குரல்.
கூட்டத்தில், அவரைத் தேடிய அமராவதியின் அப்பா, அப்படியே மயங்கி விழுந்தார். எப்போது கண் விழித்தார் என்று தெரியவில்லை. இவரை படுக்க வைத்து, ஒருவர் விசிறிக் கொண்டிருந்தார்.
மழை கொஞ்சம் விட்டிருந்தது. வெளியே மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. பசி குடலைப் பிடுங்க, கையிலிருக்கும் பணம் பயனின்றி போக... பொட்டல சாதத்திற்காக காத்திருக்கும் மக்கள் கூட்டத்துடன், இவரும் ஒருவராக இருந்தார். ஏழை, பணக்காரன் அனைவருக்கும் பொதுவானது மரணமும், பசியும் தான்.
திடீரென, ''ஐயோ... என் பெண்,'' அழுதார், அமராவதியின் அப்பா.
விசிறிக் கொண்டிருந்தவர், ''நீங்க தமிழா?'' என்றார்.
''ஆமாம்... என் பொண், என் பொண்,'' திணறினார்.
''கவலைபடாதீங்க... என் பையனையும் காணலை. விபரம் சொல்லுங்க, நான் முகாம்லே போய் விசாரிக்கறேன்... கடவுள் கை விட மாட்டார். உங்க மகளோட பேர் என்ன?''
''என் மகள் பெயர் அமராவதி. உங்க மகனோட பேர் என்ன?'' என்று கேட்டார்.
''அம்பிகாபதி.''
கேட்டவர், திகைத்தார்.
அதே அம்பிகாபதி, இவர் மகளின் காதலன். 'கடவுளே... இவர்களை பிரிக்க, நான் போட்ட கணக்கு தப்பு; ஆண்டவன் போட்ட கணக்கு தான் சரி. இது கணக்கல்ல, முடிச்சு; யாராலும் அவிழ்க்க முடியாத முடிச்சு. கடவுளே, இவர்களை காப்பாற்றி, என்னிடம் தா... நானே இவர்களை இணைத்து வைக்கிறேன்...' என, வேண்டிக் கொண்டார்.
அப்போது...
'அப்பா...' என்ற, இரு குரல்கள் கேட்டன.
இருவரும் திரும்ப, கைகளைக் கோர்த்தபடி உடலெங்கும் சகதியாக, அம்பிகாபதியும் - அமராவதியும் நின்றிருந்தனர்.
இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்; குணம் தான் பெரிதே அன்றி குலமல்ல. காலம் கடந்து புரிந்து கொண்ட உண்மை.
கை கூப்பி, கடவுளுக்கு நன்றி சொன்னார், அமராவதியின் அப்பா.

சாருகேசி

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • Saranya - Kallakurichi,இந்தியா

    தலைவலி Sami

  • Velu Mandhimuthiriyar - COIMBATORE,இந்தியா

    செயற்கை பிரிக்க நினைத்தது, இயற்கை சேர்த்து வைத்தது.... நல்ல கருத்து...வாழ்த்துக்கள்

  • Girija - Chennai,இந்தியா

    நாப்பது சாரி டான் மாத்திரை வேண்டும் .............

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement