dinamalar telegram
Advertisement

என்னதாண்டா தெரியும் உங்களுக்கு?

Share

''என்னய்யா, கார்ல பந்தாவா உக்கார்ந்திட்டு இருக்க. எழுந்து வெளியில வாய்யா.''
காரை சுற்றி, 17 - 18 வயதுடைய, இளைஞர்கள்; காலேஜில், முதல் அல்லது இரண்டாவது ஆண்டு படிப்பவர்களாக இருக்கும். இரண்டு பையன்களுக்கு மீசை கூட சரியாக முளைக்கவில்லை. ஒவ்வொருவர் கையிலும் கிரிக்கெட் மற்றும் ஹாக்கி மட்டை. அனைவரும் கருப்பு நிற, 'டீ - ஷர்ட்' அணிந்திருந்தனர். அதில், 'ஹிந்தி தெரியாது போடா' என்ற வாசகம்.
அந்த கூட்டத்திலிருந்த ஒருவன், திறந்திருந்த கார் ஜன்னல் வழியே எட்டி பார்த்து, சாவியை எடுக்க முயற்சித்தான். உடனே, சடாரென்று அதை உருவி எடுத்து, காரை விட்டு இறங்கினான், கிஷோர்.
''என்னப்பா விஷயம்?''
வாயில் பாக்கை மென்றபடி, ''என்ன விஷயமா... எங்க சத்தமா சொல்லு, தமில் வால்கனு,'' ஹாக்கி மட்டையை உயரே காண்பித்து, மிரட்டுவது போல் கத்தினான், ஒருவன்.
''என்னால இப்படி சொல்ல முடியாதுங்க!''
கிஷோர் சொன்னதில், உள்ளடங்கிய கேலியை அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை.
சற்றுத் தள்ளி நின்றிருந்த ஒருவன், ''நான் தமிளன், தமிழ் வால்கனு சொல்லுங்க!''
''நானும் தமிழன் தான்... வாழ்க தமிழ், மொழி வாழ்க, தமிழ் மொழி வாழிய வாழியவே, எங்கள் தமிழ் மொழி, எங்கள் தமிழ் மொழி என்றென்றும் வாழியவே,'' என்ற கிஷோரின் பதிலில் புன்னகையும் கலந்திருந்தது.
''டேய் இந்த ஆள், ரொம்ப நக்கலா பேசறான்... நம்ப வாத்தியார்கிட்ட கூட்டிட்டு போக வேண்டியதுதான்.''
சுமைதாங்கி போல் இருந்த ஒரு கல்லில் உட்கார்ந்திருந்த நடுத்தர வயதுள்ள வாத்தியாரிடம் கூட்டிச் சென்றனர், நாலு விடலைகள்.
''என்னடா விஷயம்?''
''கார்ல வந்த இந்த ஆள், எடக்கு மடக்கா பேசறான்... அதான் இங்க கூட்டியாந்தேன்.''
வாத்தியாரும், 'ஹிந்தி தெரியாது போடா' என்ற கருப்பு பனியன் அணிந்திருந்தான்.
''சொல்லுங்க,'' என்றான், வாத்தியார்.
''நீங்கதான் சொல்லணும்.''
''பார்த்தா படிச்சவன் மாதிரி இருக்கீங்க. கார்ல வந்து இருக்கீங்க போல... காரோட ஜாக்கிரதையா போகணுமில்ல.''
''அதுக்கு?''
''நம்ப தமிழ் வளர்ச்சி நிதிக்கு, 10 ஆயிரம் ரூபா கொடுத்துட்டு போங்க.''
''எங்கிட்ட இப்ப பணமாயில்ல... இப்பவே கொடுக்கணும்ன்னா, 'செக்'கா கொடுக்கறேன்.''
''செக்கெல்லாம் வேண்டாம்... பணமா கொடுத்துடுபா.''
''வீட்டுக்கு போய் எடுத்துட்டு வரணும்.''
''கண்டிப்பா திரும்பி வருவியா?''
''நீங்க வேணா கூட வாங்க.''
''பத்தாயிரம் ரூபா கண்டிப்பா தருவியா?''
''தமிழுக்கு எவ்வளவு வேணா தரலாம்.''
''டேய், கொஞ்சம் பார்த்துக்கோங்கடா,'' அடியாள் போல் நின்றிருந்த ஒருவனிடம் சொல்லி கிளம்பினான், வாத்தியார்.
காரில் முன் சீட்டில், கிஷோருடன் ஒருவன். பின் சீட்டில், வாத்தியாருடன் மேலும் இருவர் அமர்ந்து கொண்டனர்.
''தமிழ் வளர்ச்சி நிதிக்குன்னு பணம் கேட்டிருக்கீங்க. தமிழ் சம்பந்தமா ஏதாவது பேசிட்டு போலாமா,'' என்ற கிஷோரின் கேள்விக்கு, அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
''சரி, நான் கேள்வி கேக்குறேன்... நீங்க கரெக்டா பதில் சொன்னீங்கன்னா ஒரு பதிலுக்கு, 500 ரூபா தரேன்.''
''நாங்க நாலு பேர் இருக்கோமே.''
''வினாடி- - வினா மாதிரி. முதல்ல ஒருத்தர்கிட்ட கேட்கிறேன், அவர் சரியான பதில சொன்னால், 500 ரூபாய். அவருக்கு பதில் தெரியலன்னா, ரெண்டாவது ஆள் பதில் சொல்லட்டும்... சரியா இருந்தா, 400 ரூபாய். ரெண்டு பேருக்கும் தெரியாம, மூன்றாவது ஆள் சரியா சொன்னா, 300 ரூபா.
''மூன்றாவது நபராலயும் சொல்ல முடியாம, உங்க வாத்தியார் சரியான பதில் சொன்னா, 100 ரூபாய். ஆனா, தப்பான பதிலுக்கு, நீங்க எனக்கு பணம் தரணும். யாருமே சரியா சொல்லலேன்னா, நான் பதில் சொல்றேன். சரியான பதிலுக்கு, நீங்க எனக்கு பணம் தரணும். எவ்வளவு தர்றீங்க, அதே, 500 ரூபா?''
''ஹுஹூம், 300 ரூபா தர்றோம்,'' என்றான், மாணவன் ஒருவன்.
''நீங்கெல்லாம் எந்த காலேஜ் ஸ்டூண்ட்ஸ்... பிளஸ் 2 வரைக்கும் தமிழ் படிச்சீங்களா?''
''நாங்க எல்லாரும் தமிழ் தான் படிச்சிருக்கோம். இவர், எங்க காலேஜ்
தமிழ் லெக்சரர்... எங்ககிட்ட ரொம்ப, 'ப்ரண்டிலி'யா பழகுவார்.''
''ஓ!'' கிஷோரின் குரலில் ஆச்சர்யம்.
''சரி, இப்போ முதல் கேள்வி... தமிழில் எத்தனை விதமான எழுத்துக்கள் உள்ளன. அவை யாவை?''
''12, 18, 247!''
''நீங்க சொன்னது தப்பு.''
''நாலுன்னு நினைக்கறேன்,'' என்றான், இன்னொருவன்.
''உறுதியான பதில் சொல்லணும்.''
காரில் மவுனம் நிலவியது.
''நாலு வகை தான். அது என்னன்னு சொல்லணுமே,'' கிஷோரின் குரலில் கேலி இருந்ததாகத்தான் தோன்றியது.
''நான் பதில் சொல்லட்டுமா?''
''சரி சொல்லுங்க.''
''உயிர் எழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து,'' என, ஒரு மாணவன் உற்சாகமாக கூறினான்.
''நாலாவது?''
'ரியர் வியூ மிரர்' மூலமாக பார்த்தபோது, 'பைல்ஸ்' நோயாளி போல அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தான், வாத்தியார்.
''என்ன... நானே சொல்லட்டுமா?''
''ஆயுத எழுத்து. நீங்க எனக்கு, 700 ரூபா தரணும்பா. சரி, இரண்டாவது கேள்வி. தமிழுக்குண்டான சிறப்பு எழுத்துக்கள் எவை?''
மீண்டும் அமைதி.
''என்னப்பா நீங்கெல்லாம் தமிழே படிக்கலையா... தமிழுக்கே உண்டான ழகர எழுத்து. அடுத்து, ஆயுத எழுத்து. தமிழுக்கு பாதுகாப்பாகவும், வலிமையுடன் இருப்பதற்காகவே இது அமைக்கப்பட்டது. இந்த ரெண்டு எழுத்துகள் தான் சிறப்பு எழுத்துக்கள்.
''தமிழ் சொற்கள் எத்தனை வகைப்படும்?''
''பெயர்ச்சொல்!'' ஒரு மாணவனின் பதில்.
''எத்தனை வகைன்னு சொல்லுப்பா.''
''குருட்டாம் போக்குல ஏதேதோ சொல்றீங்க. வேண்டாம், நானே சொல்லிடறேன். தமிழ் சொற்கள் நாலு வகைப்படும். அவை, பெயர்ச்சொல், வினைச்சொல்,
உரிச்சொல், இடைச் சொல்.''
''இதெல்லாம் நாங்க படிச்ச மாதிரியே தெரிலேயே,'' ஒரு மாணவனின் ஒப்புதல் வாக்குமூலம்.
''தமிழில் சூத்திரம்ன்னு கேள்வி பட்டிருக்கீங்களா?''
விழித்தனர்.
''நன்னுால் சூத்திரம், அணியிலக்கணம், யாப்பிலக்கணம் கேள்விப் பட்டிருக்கீங்களா?'' என்று கேட்பதற்குள், கிஷோரின் வீடு வந்தது. தன் முழு சட்டையை கழட்டியபடியே இறங்கினான், கிஷோர்.
அவனுடைய வெண்நிற பனியனின் நடுவில், 'அரிய தமிழறிவோம் வாருங்கள்' என்று எழுதப்பட்டிருந்த வாசகத்தை கண்டு, வியப்புடன் பார்த்தனர்.
''இந்த பனியன்ல, நாலு பேர் படம் இருக்கு... யாரென்று சரியாக சொல்ல முடியுமா?''
''பாரதியார், திருவள்ளுவர்!''
''சார்... நீங்க?'' என்ற கிஷோரின் கேள்விக்கு, ''கம்பனும் இளங்கோவுமா?'' என்ற வாத்தியாரின் பதில், அவர் காதிலேயே விழுந்திருக்காது.
''உங்களுக்கு, 300 ரூபாய் தந்து
விடலாம். சரி, எல்லாரும் வாங்க
உள்ளே போகலாம்.''
கதவருகில் சென்று, அழைப்பு மணியை அழுத்தினான், கிஷோர்.
''அபி ஆரேன்!'' உள்ளிருந்து குரல் கேட்டது.
நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்து, தங்களுக்குள் முணுமுணுத்தது கண்டு சிரித்தான், கிஷோர்.
கதவைத் திறந்த அவன் மனைவி அனைவரையும் பார்த்து, ''அந்தர் ஆயியே,'' என, வரவேற்றாள்.
''ரொம்ப பசியா இருக்கு... எல்லாருக்கும் சாப்பாடு இருக்கா?''
''சாவல், சப்ஜி, சாம்பார் தயார் ஹை. அபி பூரி ஜல்தி பனாரே,'' சொல்லிக் கொண்டே அவன் மனைவி அனைவருக்கும் தட்டை எடுத்து வந்தாள்.
''வாங்க கை கழுவி விட்டு சாப்பிடலாம்.''
''சார், நாங்க சாப்பிட வரல.''
''மணி, 1:45 ஆகப்போகுது. எனக்கு பசிக்குது, எல்லாரும் சாப்பிடற நேரம் தானே... 'விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று'ன்னு வள்ளுவரே சொல்லியிருக்கிறார். சாப்பாடு தானே, வாங்க சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.''
''சார் உங்க மனைவி, டில்லியா?''
''அவங்ககிட்டயே கேளுங்க.''
''சார் எனக்கு ஹிந்தி?''
''நீங்க போட்டிருக்கிற பனியனுக்கு உண்மையா இருக்கீங்க போல,'' சிரித்துக்கொண்டே சொன்னான், கிஷோர்.
''அதுல்ல வந்து...''
''பரவாயில்லை, தமிழிலேயே கேளுங்க.''
''மேடம், உங்க பேர், எந்த ஊர்?''
''என் பேர் அனு; ஊர், துடியலுார். நான் படிச்சது, இங்க கொங்குநாடு ஆர்ட்ஸ் காலேஜ்ல, பி.சி.ஏ.,''
''நான், கிஷோர். பிறந்தது, பிரயாக்ராஜ். இன்ஜினியரிங் படிச்சது இங்க குமரகுருல. அப்படியே, இங்கேயே ராபர்ட் பாஷ்ல வேலை கிடைச்சது. இப்போ ப்ராஜெக்ட் மேனேஜரா இருக்கேன்.''
''பிரயாக்ராஜ்னு ஊர் இருக்கா!''
''அலகாபாத்னு கேள்விப்பட்டு இருக்கீங்களா?''
''ஆமா, திரிவேணி சங்கமம்.''
''அதனுடைய உண்மையான பெயர்தான் பிரயாக்ராஜ்,'' என்ற கிஷோர், தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட விபரத்தை கூறினான்:
ஆண்டவனின் பிரம்ம முடிச்சு எங்களுக்கு போடப்பட்டு இருந்ததால், எங்களது காதலும் மருதமலை, பொடானிகல் கார்டன், பேரூர், கோவை, குற்றாலம் என்று வளர்ந்தது.
எங்களது காதலுக்கு மொழி பிரச்னை தான் பிரதானமாக இருந்தது. அனு வீட்டில், தமிழ் தெரிந்தவர் மாப்பிள்ளையா வரணும் என்றும், எங்கள் வீட்டில், ஹிந்தி தெரிந்த மருமகள் தான் வேணும் என்றனர். ஒரே ஆண்டில் கற்றுக்கொள்வதாக இருவரும்
கூற, திருமணத்திற்கு சம்மதித்தனர், இரு வீட்டாரும்.
அதன்பின், எங்கள் திருமணம், கோவை சாரதாம்பாள் கோவிலில் நடந்தது. என் அப்பா, அம்மா, சகோதரி, அவரது கணவர் வந்தனர். அனுவின் தரப்பில் அவளது அம்மா, அண்ணன் மட்டும் வந்து முகூர்த்தம் முடிந்தவுடன் சென்று விட்டனர்.
'உங்கம்மா ஹிந்தி மருமகள்தானே வேணும்ன்னு கேட்டா! நான் நாலே மாசத்துல ஹிந்தி கத்துகிட்டு பேசுறேன். அதுக்கப்புறம் நான் ஹிந்தி மட்டும் தான் பேசுவேன்...' என்றாள், அனு.
'அப்போ தமிழ்! என்றேன்.
'நீங்க வேண்ணா பேசிக்கோங்க. உங்க மாமனார் தமிழ் மாப்பிள்ளை தானே வேணும்னார்...'
'ஆமா உங்கப்பா, தமிழன் தானே மாப்பிள்ளையா வரணும்ன்னு சொன்னார். நீ சொன்ன அதே நாலு மாசத்துல நானும் தமிழ் படிச்சி... அதுக்கப்பறம் நான் தமிழ்ல தான் பேசுவேன்...'
முதல் இரவில் சவால் விட்ட ஜோடி நாங்களாத்தான் இருந்திருப்போம்.
அதுக்கப்பறம் நான், பேரூர் தமிழ் கல்லுாரிலே சேர்ந்து புலவர் பட்டம் வாங்கினேன். மொழிவளமும், வாழ்வியல் நெறியும் கொண்டது, தமிழ் மொழி! என்னோட தாய்மொழி ஹிந்தியா இருந்தாலும், என்னோட காதல் மொழி தமிழ்தான்!
'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்'னு, பாரதி வெறுமனே சொல்லிடலே. அவருக்கு ஏழு எட்டுக்கு மேல மொழிகள் தெரியும். அத்தனையும் நல்லா படிச்சிட்டுதான் சொல்லியிருக்காரு. தவிர, 'தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்'ங்கற அவரோட விருப்பத்தை, மத்த மொழிகள் தெரியாம எப்படி நிறைவேற்ற முடியும்.
தெலுங்கு மற்றும் கன்னடம் தெரிஞ்சாதான் அவங்களுக்கு தமிழோட இனிமையை சொல்ல முடியும். அதே மாதிரி ஹிந்தி தெரிஞ்சாதான். அதிக அளவு மக்களுக்கு தமிழோட சிறப்பை சொல்ல முடியும். உங்க வட்டத்தை நீங்களே குறுக்கிக்காதீங்க...
இவ்வாறு, கிஷோர் கூறி முடித்ததும், ''நான், இப்போ, ஹிந்தி வகுப்பு எடுக்கிற அளவுக்கு படிச்சிருக்கேன். அதுவுமில்லாம நாங்க ரெண்டு பேரும் தமிழ்மொழிய கம்ப்யூட்டர்ல அதிக அளவு பயன்படுத்தற மாதிரி, 'கோடிங்க் லாங்க்வேஜா' உபயோகப்படுத்தறதுக்கு ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கோம்,'' என்றாள், அனு.
''நான் பேரூர் தமிழ்கல்லுாரிக்கு ஒவ்வொரு வருஷமும், 10 ஆயிரம் ரூபா நன்கொடை தருவேன்; இந்த வருஷம் வேணா உங்களுக்கு...''
''அதெல்லாம் வேண்டாங்க. நாங்க கிளம்புறோம்,'' என, வாத்தியாரும், மற்ற மாணவர்களும் கிளம்ப ஆயத்தமாகினர்.
''கொஞ்சம் இருங்க. அனு... அந்த,
'டீ - ஷர்ட்' நாலு எடுத்துட்டு வா.''
''ஹான்ஞ்சி!''
அனுவின் கையிலிருந்து, 'டீ - ஷர்ட்'டுகளை வாங்கி, அவர்கள் கையில் கொடுத்து, ''பிரித்துப் பாருங்கள்,'' என்றார்.
அதில், கம்பன், இளங்கோ, வள்ளுவர் படங்கள் இருந்தன. அதன்கீழ், 'அரிய தமிழறிவோம் வாருங்கள்' என்ற வாசகம் முத்தாய்ப்பாய் இருந்தது.
அதற்கும் கீழே பாரதியின் படம் கம்பீரமாக முறுக்கு மீசையுடன் இருந்தது.


எஸ். ரவிசங்கர்
வயது: 63,
படிப்பு: எம்.ஏ., - எம்.பி.ஏ., - பி.ஜி.எல்., வங்கி பணி ஓய்வு.
பூர்வீகம்: கோயம்புத்துார்
ஆர்வம்: படிப்பதும், நிறைய எழுதுவதும்
கதைக் கரு உருவான விதம்:
சமீபத்தில், 'ஹிந்தி தெரியாது போடா' என்ற பிரசாரம் சில ஊடகங்களில் முன்னிலைப்படுத்தியபோது, எதற்கு இந்த பிரசாரம் என்ற வருத்தத்திலும், ஆதங்கத்திலும் உருவானதே இக்கதை.
மேலும், பாரதியார் கருத்துகளை மையப்படுத்தியும், வரலாற்று - இலக்கிய பின்னணியிலும், தற்போதைய அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளின் அடிப்படையில் கதை புனைவதிலும் ஆர்வம் காரணமாகவும் மனதில் வருடிய கதை கரு இது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement