dinamalar telegram
Advertisement

நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் இடுவது எப்படி

Share

நிலக்கடலை பயிர்களில் நீர் மற்றும் சுண்ணாம்பு, கந்தகச்சத்து குறைபாட்டால் மகசூல் பாதிக்கப்படுகிறது. தழை, மணி மற்றும் சாம்பல் சத்து உரங்களை மட்டும் தொடர்ந்து பயன்படுத்துவதால் சுண்ணாம்பு மற்றும் கந்தகச்சத்து குறைந்து கொண்டே வருகிறது.
சுண்ணாம்புச்சத்து மிகுந்த மண்ணில் பயிரிடும் போது கந்தகம் மற்றும் மற்ற நுண்ணூட்டங்களின் குறைபாடுகளும் தென்படுகின்றன.

பயிரின் வளர்சிதை மாற்றத்திலும் அமினோஅமிலம் மற்றும் புரத உற்பத்திக்கு கந்தகச்சத்து அவசியம். பச்சையம் உருவாகவும் நிலக்கடலையில் எண்ணெய் அளவு அதிகரிக்கவும் உதவுகிறது. தழைச்சத்து பயன்படுத்தும் திறனையும் அதிகரிக்கிறது. கந்தகச்சத்து குறைந்தால் இளம் இலைகள் வெளிறி இருக்கும்.


சுண்ணாம்பு சத்தானது கடலை விதை உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இளம் காய்கள் நேரடியாக சுண்ணாம்புச்சத்தை எடுத்து கொள்கின்றன. காய்களில் விதைபருப்புகள் முழுமையாக உருவாக கால்சியம் அவசியம். இது குறைந்தால் பொக்கு கடலை உருவாகும். சுண்ணாம்பு பற்றாக்குறையால் இலை நுனி மற்றும் ஓரம் கிழிந்து காணப்படும். பயிரின் ஆரம்ப வளர்ச்சி பருவத்தில் பற்றாக்குறை ஏற்பட்டால் பூக்களில் சூல்பை சிதைவு ஏற்படும்.


மானாவாரி நிலக்கடலை சாகுபடிக்கு ஏக்கருக்கு 160 கிலோ ஜிப்சம் தேவை. விதைப்பதற்கு முன் 80 கிலோ ஜிப்சத்தை அடியுரமாக மண்ணில் ஈரம் இருக்கும் போது இடவேண்டும். மண்ணைக் கையில் எடுத்து இறுக்கிப் பிடித்தால் அதே உருவத்தில் கையில் ஒட்டாமல் இருப்பதே ஈரப்பதம் கண்டறியும் வழி. மீதம் உள்ளதை விதைத்த 30 - 45 நாட்களுக்குள் மழைவந்தவுடன் மேலுரமாக வேருக்கு அருகில் இட்டு மண் அணைக்கவேண்டும். அடியுரம் விதை எளிதாக முளைத்து வரவும் செடி வளர்வதற்கு தேவையான கந்தகம் சுண்ணாம்புச்சத்தையும் அளிக்கிறது. மேலுரமாக இடும் போது அதிக எண்ணெய் சத்துடன் திரட்சியான பருப்புகள் உருவாகும்.


இறவை பயிருக்கு ஏக்கருக்கு 160 கிலோ ஜிப்சத்தை பயிர் பூக்கத் தொடங்கும் 30 - 45 நாட்களுக்குள் மேலுரமாக வேருக்கு அருகில் இட்டு மண் அணைக்கவேண்டும். நிலக்கடலை வேர் மற்றும் விழுதானது 5-7 செ.மீ சுற்றளவில் உள்ள கால்சியத்தை மட்டுமே உறிஞ்சமுடியும். கால்சியச்சத்தானது செடியின் மிகஎளிதில் செல்லாது. எனவே ஜிப்சத்தை காய் உருவாகும் பகுதிக்கு அருகில் இட்டு மண் அணைக்க வேண்டும்.

கண்ணன், உதவி பேராசிரியர்
மகேந்திரன், துறைத்தலைவர் மண் மற்றும்
சுற்றுப்புற சூழலியல் துறை
வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை
தொடர்புக்கு: 99764 06231

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement