நுரையீரல், இதயம் இரண்டும் செயலிழக்கும் போது, அதன் வேலைகளை வெளியில் இருந்து செய்து உயிரைக் காப்பாற்றும் தொழில்நுட்பம், 'எக்மோ!' இதயம் - நுரையீரல் இரண்டின் பணியையும் செய்யும் இந்த தொழில்நுட்பம், 'வீனோ - ஆர்ட்டிரியல் எக்மோ - வி.ஏ., எக்மோ' எனப்படும். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வரை, உயிர் காக்கும் ஆதாரம்.
கடந்த வாரம் 'புளூ' வைரஸ் தொற்றால் நிமோனியா பாதித்த, கேரளாவைச் சேர்ந்த 2 வயது குழந்தையின் நுரையீரல் செயலிழந்தது. குழந்தையின் உடல் எடை 10 கிலோ மட்டுமே இருந்த நிலையில், எக்மோ கருவியைப் பொருத்தினோம்.
இது மிகவும் சவாலானதாக இருந்தது. நோயாளியின் உடல் எடை 40 கிலோவிற்கு அதிகமாக இருந்தால், எக்மோ கருவியை எளிதாக பொருத்தலாம்.
பொதுவாக தொடைப் பகுதியில் இருக்கும் ரத்தக் குழாயில், நுண்ணிய குழாயைப் பொருத்தி, அதன் வழியே இதயத்திற்கு ஆக்சிஜன் செலுத்துவது வழக்கம். ஆனால், இந்தக் குழந்தைக்கு கழுத்து வழியே இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் சொருகி, நேரடியாக இதயத்திற்கு ஆக்சிஜன் செலுத்தினோம்.
'பைப்ரோசிஸ்' என்ற நுரையீரல் தழும்பு குறித்து, கொரோனா தொற்றுக்குப் பின் அனைவரும் அறிவோம். மாசு நிறைந்த காற்று, தொழிற்சாலை மாசு, வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுகளால் தழும்பு வருவதைப் போல, மரபியல் காரணிகளால் பிறவியிலேயே பைப்ரோசிஸ் இருக்கும்.
வளர வளர இதுவும் பெரியதாகி, சுவாசிப்பதில் சிரமம், மூச்சிரைப்பு, சிறிது நேரம் விளையாடினால் சோர்வு என்று பல பிரச்னைகள் வரும்.
கோளாறு தீவிரமானால், எக்மோ உதவியுடன், தேவையான மருந்துகள் கொடுத்து, தானாக நுரையீரல் செயல்படத் துவங்கியதும், எக்மோ கருவியை எடுத்து விடலாம்.
வயது, உடல் எடைக்கு பொருத்தமான மாற்று நுரையீரல் கிடைத்ததும் பொருத்துவது ஒன்று தான் தீர்வு. குழந்தை வளர வளர மாற்று நுரையீரலும் வளர்ந்து இயல்பாகி விடும்.
கொரோனா இரண்டா வது அலையில், 'சி.டி.,ஸ்கேன்' பரிசோதனை செய்ததில், வைரஸ் பாதிப்பில் 50 சதவீதத்திற்கு மேல் நுரையீரல் பாதித்தவர்களுக்கு அறிகுறிகள் அதிகமாகவே வெளியில் தெரிந்தது.
இவர்களில் தீவிர பாதிப்புள்ளவர்களுக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஆய்வில், குணமான ஆறு மாதங்களுக்குப் பின், சுவாசிப்பதில் சிரமம் இருந்துஇருக்கிறது.
இவர்களுக்கு தொ டர்ந்து மருத்துவ ஆலோசனை, பிசியோதெரபி, யோகா, மூச்சுப் பயிற்சி அவசியம். இவற்றை விடாமல் செய்வதால், நாளடைவில், புதிதாக தழும்புகள் வராது; ஏற்கனவே இருப்பதும் ஆறி விடும்.
டாக்டர் சி.ஆறுமுகம்,
இதயம் - நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்,
ரேலா மருத்துவமனை, சென்னை
044 - 6666 7777.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!