dinamalar telegram
Advertisement

அக்கரை அதிசயம்!

Share

சக்கர நாற்காலியே கதியென 20 ஆண்டுகள் கடந்து விட்டார். முகம் கைகளைத் தவிர உடலில் அசைவு கிடையாது. ஆனாலும், மகிழ்ச்சிக்கு குறைவின்றி இருக்கிறார் 31 வயது யாழினிஸ்ரீ.

பிறந்து வளர்ந்தது நீலகிரி கோத்தகிரி மலை கிராமத்தில்! 10 வயதில், விளையாடி முடித்து தாங்க இயலாத மூட்டு வலியோடு வீடு திரும்பியவர் முடங்கிப் போனார். மருத்துவத்துறை சொன்ன காரணம்... முடக்குவாதம் மற்றும் முதுகுத்தண்டு நோய் பாதிப்பு! கோத்தகிரியின் குளிர் தாளாமல் தற்போது கோவை மேட்டுப்பாளையத்தின் ஜடையம்பாளையம் கிராமத்தில் அம்மா, அப்பாவுடன் வசிக்கிறார்.

யாழினியின் ஒருநாள்?
'முடியாது'ன்னு தெரிஞ்சும் யார் உதவியும் இல்லாம எனக்கான வேலைகளை நானே செய்ய முயற்சி பண்றேன். பகல் இரவா மாறுறது தெரியாம நிறைய வாசிக்கிறேன். கவிதைகள் எழுதுறேன். சமூக வலைதளங்கள்ல கருத்துக்களை பதிவிடுறேன். மனசு முடங்கிடாத அளவுக்கு ஒவ்வொரு நாளையும் இப்படி கவனமா கடத்துறேன்.
'மரப்பாச்சியின் கனவுகள், வெளிச்சப்பூ' கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கும் யாழினி, 'ஐஸ்கிரீம் அருவி' கவிதைத் தொகுப்பையும் விரைவில் வெளியிட இருக்கிறார். கவிதை, சிறுகதைகளைத் தொடர்ந்து நாவல் எழுதும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்.

சிந்தனைகள் ஊற்றெடுக்க பயணங்கள் அவசியமில்லையா?
அவசியம்தான்; நானும் பலரோட எழுத்துக்கள் மூலமா, புகைப்படங்கள் மூலமா, சினிமாக்கள் மூலமா இந்த உலகத்தை சுத்திப் பார்த்துட்டுதான் இருக்குறேன்.
சேலம், பழனி, திருவண்ணாமலை, மருதமலை தாண்டி வேறெங்கும் பயணப்படாத யாழினி, ஜோதிடர் முத்துசாமி - சுந்தரி தம்பதியின் ஒரே மகள். 10ம் வகுப்பு வரை அம்மாவின் உதவியோடு படித்திருக்கிறார். அப்பாவின் சுமை குறைக்க தட்டச்சு பணியில் சம்பாதித்து வருகிறார். கம்பளி 'ஸ்கார்ப்' தயாரித்து விற்கிறார். இயன்றவரை சுயமாக வாழப் போராடுகிறார்.

உங்கள் தன்னம்பிக்கை பற்றி...
குறையவே குறையாது; இது கிராமம்; கிராமத்து சூழலும், மனிதர்களும் தனிமையை உணரவிட மாட்டாங்க! தனிமை உணரப்படாத இடத்துல தன்னம்பிக்கை குறையாது!
முகநுாலில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் யாழினிக்கு நட்புவட்டத்தில் ஒரு புனைப்பெயர் உண்டு. அது... மியாவ். ஆம்... பதில் சொல்ல விரும்பாத கேள்விகளுக்கு இவரது பதில்... மியாவ்.

பெற்றோர் காலத்துக்கு அப்புறம் உங்க நிலைமை என்ன?
மியாவ்.

ஆசைகள் 1000
சொந்த வீட்டில் வாழ்க்கை!
பெற்றோருக்கு நீண்ட ஆயுள்!
எந்நேரமும் மழையில் நனையும் மனது!

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

    யாழினியின தன்னம்பிக்கைக்குத் தலை வணங்குகிறேன். அந்த குழந்தைக்கு உதவ வாய்ப்ப கிடைக்குமா.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement