Load Image
dinamalar telegram
Advertisement

சரியான உச்சரிப்புடன் தமிழை படித்தால் உடலுக்கு கிடைக்கும் ஆற்றல்

கனகலட்சுமியின் எழுத்து ஆராய்ச்சி

சமூக வலைதளங்கள் ஆதிக்கத்தால் ஆங்கிலத்தில் தமிழை எழுதும் மெசேஜ் கலாசாரம் அதிகரித்து வருகிறது. அதிலும் எழுத்து சுருக்கங்கள் என்ற பெயரில் வார்த்தை சிதைவுகளை உருவாக்கி தற்போதைய இளம் தலைமுறையினருக்கு மொழியின் அடிப்படையான எழுத்து, வரி வடிவம், ஒலி உச்சரிப்பு போன்ற பல சிறப்புக்களை மறந்த சமுதாயம் ஒன்று உருவாகிக்கொண்டிருக்கின்றது. இதனால் பிழையின்றி தமிழை எழுதுவது சவாலாக மாறி வருகிறது. இதற்கு தீர்வுகாணும் வகையில் தமிழ் எழுத்துகள் குறித்து பல்வேறு களஆய்வுகள் செய்து லட்சக்கணக்கான மாணவர்களை பிழையின்றி எழுத வைத்து வருகிறார், சென்னை ஆசிரியை முனைவர் கனகலட்சுமி. அவரது தமிழ் எழுத்து ஆராய்ச்சி குறித்து பொங்கல்மலருக்காக நம்மிடம்…

ஒரு மொழிக்கு உயிர் ஒலி. உச்சரிப்பு சரியாக இருந்தால் தான் அதன் இனிமை, சுவை மொழியின் ஆழம் நமக்கு தெரியும். ஒவ்வொரு எழுத்தையும் சரியாக உச்சரிப்பதன் மூலம் விரைவாக வாசிப்பதற்கும் பிழையின்றி எழுதுவதற்கும் அடித்தளமாக அமைகிறது.
தமிழ் மொழி படிக்க கஷ்டம் என்ற தவறான எண்ணம் நம்மிடையே விதைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் தமிழை எப்படி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாம் செய்து கொண்டிருக்கும் தவறு தான்.
தமிழின் முதல் எழுத்தான 'அ' என்பதையே வரி வடிவத்தின் பெயர்களை சரியாக உச்சரித்து எழுத சொல்லிக்கொடுப்பதில்லை. ஒரு எழுத்தை எங்கே துவங்கி எப்படி மடக்கி எப்படி முடிக்க வேண்டும் என்ற வரி வடிவங்கள் தெரியாமல் எழுத்துக்களை பார்த்து ஒரு ஓவியம் போல் வரைய தான் கற்றுக்கொடுக்கிறோம்.
ஒரு மாணவனுக்கு ஒன்றாம் வகுப்பில் உச்சரிப்பும் எழுதும் முறையும் சரியாக இருந்தால் மூன்றாம் வகுப்பில் எழுதும், பேசும் திறன் ஏற்படும், ஐந்தாம் வகுப்பில் அவன் அதிகபட்ச கற்றல் திறன் பெறுவான். எட்டாம் வகுப்பில் நுாலகம் சென்று படிக்கும் பழக்கம் ஏற்படும்.
10ம் வகுப்பில் பகுத்தறிவாளன் ஆக முடியும் என்பதே சிறந்த கற்றலுக்கான அடையாளம். இந்த அடிப்படையில் கற்றால் எந்த மொழியையும் எளிதில் கற்கலாம். 100 ஆண்டுகளாக தமிழ் எழுத்துகள் ஆய்வு குறித்த களஆய்வு இல்லை. என்னுடைய 18 ஆண்டுகள் களஆய்வுக்கு பின் திருவண்ணாமலை மாவட்டத்தில் கலெக்டர், சி.இ.ஓ., உதவியுடன் பயிற்சி அளித்து 1,56,710 அரசு மாணவர்களை உச்சரிப்புடன் பிழையின்றி எழுத வைத்தேன்.
தமிழின் உயிர் எழுத்துக்களை சரியாக உச்சரித்தால் குழந்தைகளுக்கு ஐம்புலன்களிலும் எவ்வித பிரச்னைகளும் ஏற்படாது. மெய் எழுத்துக்களை சரியாக உச்சரித்தால் வயிறு பிரச்னைகள் எழாது. 'ந' 'த்' 'ந்' நாக்கை கடித்து உச்சரித்தால் திக்குவாய் வராது. நாவை கடிக்கும் போது நரம்புகள் அழுத்தப்பட்டு நாவில் சீரான ரத்த ஓட்டம் ஏற்படும். தேவையான உமிழ் நீர் சுரக்கும் என்பது தொல்காப்பியம், நன்னுாலில் உள்ளதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமிழ் மாத்திரைகளை சரியாக உச்சரித்தால் 'பிற மாத்திரை' நமக்கு தேவைப்படாது. தினமும் ஒரு பக்கம் சரியான உச்சரிப்புடன் தமிழை வாசித்தால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். இதனால் தான் தமிழை 'மருத்துவ மொழி'என முன்னோர்கள் கூறியுள்ளனர். தமிழ் எழுத்துக்கள் குறித்து ஆராய்ச்சிகள் இன்னும் அதிகரிக்க வேண்டும்.
பல புத்தகங்கள் எழுதியுள்ளேன். பின்தங்கிய கிராம அரசு பள்ளி மாணவர்கள், பெற்றோருக்காக 'தமிழ் படிக்க எழுத 45 நாட்கள் ஆசிரியர் பெற்றோர் கையேடு' உட்பட ஒரே நேரத்தில் ஐந்து புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன். இதற்காக தமிழக அரசு பாராட்டு கிடைத்தது. எட்டையபுரத்தில் பாரதியார் வீட்டுக்கு அருகே தான் என் தந்தையின் பூர்வீக வீடு இருந்தது. பாரதிக்கு பக்கத்து வீடு என்பதால் என்னவோ எனக்கும் தமிழ் மீது அதீத ஆர்வம் தொற்றிக்கொண்டது. திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அண்ணாமலையார் ஆசியுடன் 'சிவசக்தி தமிழ் படிப்பகம்' என்ற 'வெப்சைட்' உருவாக்கி 'உலகளவில் ஒரே அடிப்படையில் தமிழ்' என்பதை கொண்டு சேர்ப்பதே லட்சியம் என்கிறார் இந்த சாதனை ஆசிரியை.
இவரை 93455 71942ல் வாழ்த்தலாம்.

Telegram Banner
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement