Load Image
dinamalar telegram
Advertisement

பப்புவா நியூ கினியாவில் 'பட்டாசு நகரின்' கவர்னர் - தமிழர் பெருமை பேச வைக்கும் சசீந்திரன்

'குட்டி ஜப்பான்'என அறியப்படும் தமிழகத்தின் சூடுபறக்கும் பட்டாசு மண்ணான சிவகாசியில் பிறந்து, பசுபிக் பெருங்கடலின் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து இடைப்பட்ட இயற்கை வளம் குவிந்து கிடக்கும் பப்புவா நியூ கினியா நாட்டின் கவர்னர், மத்திய அமைச்சர் பதவிகளை பெற்று உழைப்பால் உயர்ந்து உலக தமிழர்களுக்கு பெருமை சேர்த்து வருகிறார் சசீந்திரன்.
தமிழர்கள் கலாசாரம், பண்பாடு, வீரத்தின் பெருமை பேசும் தைத் திருநாளில் அவரது கடல் கடந்து சென்ற சாதனை தடங்களின் 'சக்சஸ்' பயணம் குறித்து இணைய வழியில் நம்மிடம் நினைவுகூர்ந்த தருணங்கள்…...

ஆரம்ப காலம்…
சிவகாசியில் தமிழ் வழியில் பள்ளி படிப்பு முடித்தேன். அச்சுத் தொழிலில் ஈடுபடும் குடும்பத்தில் பிறந்தாலும் கல்லுாரியில் வேளாண் படிப்பை முடித்தேன். வேலை தேடி சிங்கப்பூர் சென்று சூப்பர் மார்க்கெட்டில் மேலாளராக ஆனேன். சிங்கப்பூரில் இருந்தபோது பப்புவா நியூ கினியாவில் வேலை இருப்பதை நண்பர்கள் தெரிவித்தனர். ஒரு மாற்றம் தேடி 1999ல் இங்குள்ள நியூ வெஸ்ட் பிரிட்டன் எனும் மாகாணத்திற்கு வந்தேன்.
மொழி, உணவு பிரச்னைகள் இருந்தன. மொழியை மூன்று மாதங்களில் கற்றேன். கிறிஸ்தவ நாடான இங்கு அசைவம் தான் பிரதானம். நான் சைவம். சிரமப்பட்டு பழகி விட்டேன்.

பப்புவா நியூ கினியா பற்றி…
1975ல் ஆஸ்திரேலியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது. பசுபிக் கடலின் ஆஸ்திரேலியா - நியூசிலாந்துக்கு இடைப்பட்ட 16 தீவுகளில் பெரிய தீவு நாடு இது. எண்ணெய், எரிவாயு உட்பட இயற்கை வளங்கள் கொண்ட செழிப்பான நாடு. ஒரு கோடி மக்கள் தொகை கொண்டது. 80 சதவீதம் பேர் கிராமங்களில் வசிக்கின்றனர்.
ஆதிக்குடிவாசிகள் 850க்கும் மேல் மொழிகள் பேசுகின்றனர்.
ஆங்கிலம் தாக்கம் அதிகமில்லை என்றாலும் ஆங்கிலம் - ஜெர்மன் கலந்த 'பிஜின்' என்ற மொழி இணைப்பு மொழியாக உள்ளது.

அரசியலில் சாதித்தது எப்படி
இங்கு நான் வேலை செய்த கடையை 2000ல் குத்தகைக்கு எடுத்து ரீ டெயில் சூப்பர் மார்க்கெட் துவங்கினேன். போக்குவரத்து இல்லாத பகுதிகளுக்கு சென்று மக்களுக்கு தேவையான பொருட்களை வழங்கினேன். துவக்க பள்ளிகளுக்கு தேவையான பொருட்கள் வழங்கினேன். இதன் மூலம் ஆதிக்குடிவாசிகளின் அன்பை பெற்றேன். 2007ல் குடியுரிமை பெற்றதால் அவர்கள் என்னை தத்தெடுத்து தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளித்தனர். 2012 மற்றும் 2017 தேர்தலில் வெற்றி பெற்று நியூ வெஸ்ட் பிரிட்டன் மாகாண கவர்னராக உள்ளேன்.

அமைச்சர் வாய்ப்பு எப்படி வந்தது
இந்தியா போல் கவர்னர்களை மத்திய அரசு நியமிப்பதில்லை. இங்கு மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கின்றனர். இரண்டாவது முறை கவர்னராக பதவியேற்ற போது நிகழ்ந்த அரசியல் மாற்றத்தில் ஜேம்ஸ் மாராப்பே தலைமையில் புதிய அணி உருவாகி பிரதமராக ஆனார். பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு துறை அமைச்சர் ஆனேன்.

தமிழர்கள் நிலை…
நான் இங்கு வந்தபோது தமிழர்கள் 10 பேர் மட்டும் இருந்தனர். தற்போது தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை இங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்துடன் கலாசார ரீதியிலான உறவை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிகள் எடுக்கிறேன்.

அரசியல் சவால்…
இங்குள்ள பொருளாதார நிலையை சரி செய்வதே என் முன் உள்ள மிக பெரிய சவால். பல்வேறு நாட்டு அரசுகளிடமிருந்து பெற்ற கடன் தொகை பெருகியுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு உதவ விரும்பும் நாடுகளிடமிருந்து நிதியுதவிகள் பெற நீண்ட காலதாமதம் ஏற்படுகிறது. இவற்றை சரிசெய்ய வேண்டும்.

தமிழக அரசியல் பற்றி…
தமிழக மக்கள் கட்சியை மையப்படுத்தி வாக்களிப்பதை தவிர்த்து தங்களுக்கான பிரதிநிதி குறித்து நன்கு தெரிந்து அவர்களை தேர்வு செய்ய வேண்டும்.

குடும்பம்
மனைவி சுபா. நெல்லையை சேர்ந்தவர். 2000ல் திருமணம். இரண்டு குழந்தைகள் உள்ளனர். வீட்டில் எப்போதும் தமிழில் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளோம்.

'தை மகளை' கொண்டாடுவீர்களா
இதில் என்ன சந்தேகம். இந்தியாவை விட இங்கு கோலாகலமாக உற்சாகமாக தைப் பொங்கலை நாங்கள் கொண்டாடுவோம். 200க்கும் மேற்பட்ட தமிழர் குடும்பங்கள் ஆங்காங்கே உள்ளன. தமிழ்க் குடும்பங்கள் ஒன்று கூடி கோலமிட்டு கரும்பு, மஞ்சள் படைத்து பொங்கலிட்டு சூரியனை வணங்கி கொண்டாடுவர்.

தங்கள் பொங்கல் வாழ்த்து
தமிழர்கள் கொண்டாடும் அனைத்து பண்டிகைகளுக்கும் ஒரு அர்த்தம் பொதிந்திருக்கும். கலாசாரத்தின் ஊடே அறிவியல் ஆன்மிகத்தையும் நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்று உள்ளனர். அந்த வகையில் பொங்கல் விவசாயிகளுக்கு மரியாதை செய்து அங்கீகரிக்கும் விழா. தமிழர்களின் வீரத்தை உலகெங்கும் கொண்டுசெல்ல வேண்டும்.

தமிழ் மொழியின் வளர்ச்சி குறித்து
வெளிநாட்டுவாழ் தமிழர்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம். கடல் கடந்து சாதித்த தமிழர்கள் குறித்து பள்ளி பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும். ஒவ்வொரு தமிழரும் உள்ளம் மகிழ உற்சாகமாக பொங்கல் கொண்டாட வாழ்த்துகள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement