முன்னங்கால்களை வானத்தில் பறக்கவிட்டு, வாடி வாசலில் ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் சீறும். அகன்ற மார்போடு களத்தில் நிற்கும் வீரர்கள் குறி வைத்து காளைகள் மீது பாய்வர். திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கினால் வீரருக்கு வெற்றி. அடக்க பாயும் வீரர்களை பந்தாடி அகப்படாமல் தப்பினால் காளைகளுக்கு மகுடம். இது தான் ஜல்லிக்கட்டு.
இப்போட்டி எப்படி, எப்போது வந்தது என்ற கேள்வி எழலாம். இது ஓர் ஆட்டம் மட்டும் அல்ல. தமிழ் இனத்தின் அடையாளம். உலகம் வியக்கும் ஓர் உன்னத பண்பாட்டின் அங்கம். இவ்வீர விளையாட்டின் வேர் தேடினால் பல நுாறு ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்க வேண்டும். காளைகளையே பெரும் சொத்தாக கருதிய தொன்மை தமிழ் குடியின் ஆதி பழக்கம் இது.
விளைச்சல் வேண்டி நடத்தப்படும் ஒரு வழிபாட்டு திருவிழா தான் ஜல்லிக்கட்டு. ''காளைகள் அனைத்தும் வீரர்களிடம் அகப்பட வேண்டும் என்பதல்ல இவ்வழிபாட்டின் சாராம்சம். மாறாக, களத்தில் சீறும் காளைகள் நிறைய 'குத்து' விட வேண்டும் என்பதே வேண்டுதல். இப்படி குத்து விடுவதனால் வீரர்களின் உடலில் இருந்து குருதி சிந்தும். ஒரு சுத்தமான வீரனின் செங்குருதி நிலத்தை நனைத்தால் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பது நம்பிக்கை. அது தான் ஜல்லிக் கட்டாக நிலைபெற்றது'' என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக நடத்தப்பட்டாலும் மதுரை ஜல்லிக்கட்டுக்கு தான் மவுசு அதிகம். பொங்கல் நாளில் அவனியாபுரத்தில் காளைகள் ஆர்ப்பரிக்கும். அடுத்த நாள் பாலமேட்டில் அனல் பறக்கும். மறுநாள் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு. போட்டி வேண்டுமானால் ஒரு நாள் கூத்தாக இருக்கலாம். ஆனால் இதற்கான ஆயத்தம் ஆண்டு முழுவதும் நடக்கிறது. கடைசி ஒன்றரை மாதங்கள் காளைகளை தயார் படுத்துவதிலும், காளையர்கள் பயிற்சி பெறுவதிலும் கழியும். களத்தை தயார் செய்யும் பணியும் நடக்கும். ஜல்லிக்கட்டு நாளில் பல கி.மீ., துாரத்தில் இருந்தும் காளைகளை அழைத்து வருவர். கிடைக்கும் பரிசை விட பல மடங்கு ரூபாய் போக்குவரத்து செலவு இருக்கும்.
இருப்பினும் வெற்றி ஒன்றே இலக்கு. களத்தில் காளைகள் வெல்வதை பெரும் கவுரவமாக கருதுகின்றனர். எனவே தான் செலவை பாராது மாவட்டம் விட்டு மாவட்டம் காளைகளை அழைத்துச் செல்கின்றனர். பெரும் பணம் செலவிட்டு பராமரிக்கின்றனர். நின்று விளையாடும் காளைகள் தான் மாடு பிடி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும்.
பார்வையாளர்களும் ரவுண்டு கட்டி விளையாடும் மாடுகளை ஆவலோடு ரசிப்பர். இதற்காகவே பெருமளவு நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு பிரத்யேக பயிற்சிகளை அளிக்கின்றனர். மாடுபிடி வீரர், காளை வளர்ப்போரை கடந்து உலகத் தமிழ் மக்களின் உணர்வில் இப்போட்டி கலந்திருக்கிறது. இதற்கு உதாரணம் தான், தலைமையின்றி தமிழகம் கண்ட மாபெரும் தன்னெழுச்சி போராட்டம். மதுரையில் காளைகள் சீறிப்பாய மெரினா கடற்கரையே கொந்தளித்தது. மாவட்ட தலைநகர் தோறும் இரவு, பகலாய் போராட்டம். தடை தகர்ந்தது. மீண்டும் காளைகள் பாய்ந்தன. இன்று அவனியாபுரத்தில் சீறுகின்றன.
'நாங்கள் இப்படி தான் தயாராவோம்' ஜல்லிக்கட்டு சாம்பியன் ரஞ்சித்
2020ல் நடந்த அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் அனல் பறந்தது. முடிவில் உள்ளூரை சேர்ந்த மாடுபிடி வீரர் ரஞ்சித் மகுடம் சூடினார். இவர் கடைசி ரவுண்டில் களம் இறங்கி 16 காளைகளை அடக்கி அட்டகாசப்படுத்தினார். இவருக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது. 2019ல் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வானவர் ரஞ்சித்தின் தம்பி ராம்குமார். அந்த ஜல்லிக்கட்டில் இவர் 16 காளைகளை அடக்கி இருந்தார்.
சாம்பியன் ரஞ்சித் கூறியதாவது: பொங்கலுக்கு ஒரு மாதம் முன்பாகவே மாடுபிடி வீரர்கள் தயாராக துவங்குவோம். காப்புக் கட்டி விரதம் இருப்போம். உடல் வலு பெற கடுமையான பயிற்சி, பிரத்யேக உணவுகளை சாப்பிடுவோம்.
குறிப்பாக தினமும் 10 கி.மீ., துாரம் நடை பயிற்சி செல்வோம். ஒரு மணி நேரம் நீச்சல் அடிப்போம். குறிப்பிட்ட துாரம் ஓடியும் பயிற்சி பெறுவோம். இது தவிர காளைகளுக்கு பயிற்சி கொடுக்கும் போது அதனோடு சேர்ந்து பல்வேறு பயிற்சிகளை பெறுவோம். குறிப்பாக தற்காலிக வாடிவாசல் அமைத்து காளைகள் களத்திற்குள் புக பயிற்சி அளிப்போம். அப்போது அவற்றை தழுவி நாங்களும் பயிற்சியும் பெறுவோம். இது தான் களத்தில் காளைகளை எதிர்கொள்ள உதவியாக இருக்கும், என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!