'கோவில்பட்டியில் கல் எறிந்தால் அது ஒரு எழுத்தாளர் ஊரில் விழும்,' என பழமொழி உண்டு. அந்தளவிற்கு அந்த கரிசல்சீமையில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனால் உருவாக்கப்பட்ட எழுத்தாளர்களின் பட்டியல் நீள்கிறது. கோவில்பட்டியிலிருந்து கயத்தாறு செல்லும் வழியில் உள்ளது இடைசெவல். இங்கு ஒரே தெருவைச் சேர்ந்த எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமி, கி.ரா., நண்பர்கள். ஒரு கிராமத்தின் ஒரே தெருவைச் சேர்ந்த இரண்டுபேர் நண்பர்களாக இருந்து எழுத்தாளர்களாகி சாகித்ய அகாடமி விருது பெற்றது இந்தியாவில் முதல்முறை.
'நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன். ஒதுங்கியவன் பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையையே பார்த்துக்கொண்டிருந்து விட்டேன்'என்கிறார் எழுத்தாளர் கி.ரா. எட்டாவது வகுப்பு முடிக்காத கி.ரா.,வின் கதை சொல்லும் முறை, ஆளுமைதான் அவரை 60 வயதிற்கு மேல் புதுச்சேரி பல்கலை வருகைதரு பேராசிரியராக பணிபுரிய வைத்த அதிசயம் நிகழ்ந்தது.
கரிசல் வட்டாரச் சொல்லகராதியை உருவாக்கியவர். தற்போது 99வது வயதை எட்டி நுாற்றாண்டை நோக்கி பயணிக்கிறார். புதுச்சேரியில் வசிக்கிறார். கரிசல் சீமையின் வரைபடத்தை உருவாக்கி, அதில் கரிசல் எழுத்தாளர்களின் பிறந்த ஊர்களை குறிப்பிட்டுள்ளார். தெலுங்கு பேசும் மக்கள் ஆந்திராவிலிருந்து இடப்பெயர்ச்சியாகி தமிழக கரிசல் பகுதியில் குடியேறியதை விவரிக்கும் கி.ரா.,வின் 'கோபல்ல கிராமம்' நாவல் மிகப்பெரிய காவியம். இதன் தொடர்ச்சியான அவரது 'கோபல்லபுரத்து மக்கள்' நாவலுக்கு 1991ல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.
'கரிசல்வாழ் மக்களுக்கு இயற்கையாலும் சரி, செயற்கையாலும் சரி தண்ணீர் உத்தரவாதம் கிடையாது. வானத்திலிருந்து விழும் மழைத்துளிகளை நம்பித்தான் இவர்களின் வாழ்க்கை அமைந்துவிட்டது சாதகபட்சியைப் போல. வானமும் இவனுக்கு வஞ்சகமே செய்கிறது. ஒன்று பெய்யாமல் கெடுக்கும்; அல்லது பெய்தே கெடுத்துவிடும். இக்கரிசலில் பிறந்த சம்சாரி அல்லல்படுவதற்கென்றே பிறந்தவன். இவனுக்கு யாராலும் எவ்வித உதவியும் இல்லை. எனது மக்கள் பேசுகிற மொழியில், அவர்கள் சிந்திக்கிற மனோ இயலில் அவர்கள் வசிக்கிற சூழ்நிலையில் எனது சிருஷ்டிகள் அமைய வேண்டும் என நினைக்கிறவன் நான். இன்னும் எழுத வேண்டிய விஷயங்கள் வண்டி வண்டியா இருக்கே...', என ஆதங்கப்படுபவர் கி.ரா.
கரிசல் சீமை
'கரிசல் சீமையில் வசன இலக்கியம் என முதலில் தேடும்போது 1901க்கு பின் குருமலை சுந்தரம் பிள்ளை 'பொற்றொடி' நாவலை எழுத ஆரம்பிக்கிறார். இதே காலகட்டத்தில் பாரதியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை எழுதத்துவங்கினர். நீண்ட இடைவெளிக்குபின் 1940ல் கு.அழகிரிசாமி பேனா எடுக்கிறார் எழுத,' என குறிப்பிடுகிறார் கி.ரா. 20ம் நுாற்றாண்டின் சிறந்த சிறுகதை எழுத்தாளர் கு.அழகிரிசாமி இடைசெவலில் 1923ல் பிறந்தார். இடைசெவலில் அக்காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்தவர் என்ற பெருமைக்கு உரியவர். உலகமே கொண்டாடும் 'அன்பளிப்பு' கதையில் குழந்தைகளின் மன உலகை துல்லியமாகப் பதிவு செய்தவர் கு.அழகிரிசாமி. அச்சிறுகதைத் தொகுப்பிற்கு 1970ல் அவர் மறைந்தபின் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. அவர் வாழ்ந்தது 47 ஆண்டுகள். குறைந்த வாழ்நாளில் நுாற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள் எழுதி, பத்திரிகையாசிரியர், பதிப்பாசிரியர் என முழு இலக்கியவாதியாக வாழ்ந்தவர் கு.அழகிரிசாமி. சிறுகதைக்கலையின் எல்லைகளை விரித்தவர். குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனைத் தமிழிலக்கியத்தில் அழியாப் புகழ் பெற வைத்தவர். அழகம்மாள், திரிபுரம், ராஜா வந்திருக்கிறார், வெறும்நாய் போன்ற அமரத்துவ கதைகளை எழுதிச் சென்றவர் கு.அழகிரிசாமி.
பூமணி
மனித மனதின் விசித்திரங்களை, நகைச்சுவை உணர்வுடன் சித்தரிப்பதில் வல்லவர். கரிசல் மக்களின் வாழ்வை நுட்பமாக தனது படைப்புகளில் பதிவு செய்தவர். விவசாயச் சமூக சிக்கல்களை அதன் அனுபவப் பின்புலங்களிலிருந்து பரிசீலித்த படைப்பாளி. கரிசல் வாழ்வின் சகலக் கூறுகளையும், அதன் அடையாளங்களைச் சிதைக்காமல் கலைப்படுத்தியவர் எழுத்தாளர் பூமணி. இவர் கோவில்பட்டி அருகே ஆண்டிபட்டிக்காரர்.
சோ.தர்மன்
'கலப்புல் களத்திலே என்றாலும் காடை காட்டிலே' என்பது சொலவடை. அதுபோல நான் எங்கேஇருந்தாலும் பேனாவைத் தொடும்போது என் மக்களும் அவர்கள் வாழும் கரிசல் மண்ணும் தான் கண் முன்னே நிற்கும்,' என்கிறார் எழுத்தாளர் சோ.தர்மன். இவரும் கோவில்பட்டி அருகே உருளைக்குடியை சேர்ந்தவர். பூமணியின் உறவினர். இருவரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்கள். ஐந்தாம் வகுப்புவரை படித்தவர் மேலாண்மறைநாடு கரிசல் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி. 'கண்டதைப் படித்து பண்டிதன் ஆனவர்'. இவரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
எஸ்.ராமகிருஷ்ணன்
கரிசல் நிலப்பரப்பான மல்லாங்கிணறை சேர்ந்த சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கூறியதாவது: மலையாள இலக்கியத்தின் தனிப்பெரும் ஆளுமை ஓ.வி.விஜயன். பாலக்காட்டினை அடுத்துள்ள தர்ஸக் கிராமத்தில் தங்கி, அதை மையமாகக் கொண்டு புகழ் பெற்ற 'கசாக்கின் இதிகாசம்' நாவலை எழுதினார். அதன் நினைவைக் கொண்டாடும் வகையில் நாவலின் முக்கிய கதாபாத்திரங்களை சிற்பம், ஓவியங்களாக்கி கேரள அரசே ரூ.4 கோடியில் மியூசியம் அமைத்துள்ளது. ஒரு எழுத்தாளரை கவுரவிப்பது எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.
வெளிநாடுகளில் ஒரு எழுத்தாளர் வாடகை வீட்டில் வசித்திருந்தால்கூட அத்தெருவிற்கு அவரது பெயரை சூட்டுவர். அவர் வசித்த வீட்டை மியூசியமாக்கிவிடுவர். அவர் படித்த கல்லுாரியில் அவரது பெயர் பலகை இருக்கும். இங்கு பாரதியாருக்கு நினைவு இல்லம், கண்ணதாசனுக்கு மணிமண்டபம் உள்ளன. இதுபோல் சிலருக்கே உள்ளது என்கிறார்.
கு.அழகிரிசாமியின் மகன் ஆவணப்பட இயக்குனர் சாரங்கராஜன், 'இடைசெவல் கண்மாய் அருகே அழகிரிசாமியும், கி.ரா.,வும் அமர்ந்து பேசுவது போல் சிலை வைக்க உள்ளோம்,' என்கிறார்.
எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வன், கோணங்கி, அ.முத்தானந்தம், திடவை.பொன்னுச்சாமி, சுயம்புலிங்கம், வே.சதாசிவன், அழ.கிருஷ்ணமூர்த்தி, பொ.அழகுகிருஷ்ணன், ஜி.காசிராஜன், கே.ராமசாமி, பொன்ராஜா, தனுஷ்கோடி ராமசாமி, ரா.அழகர்சாமி, கவுரிசங்கர், வீர.வேலுச்சாமி, பா.ஜெயப்பிரகாசம், வேல.ராமமூர்த்தி, கவிஞர் தேவதச்சன் என கரிசல் இலக்கியத்திற்கு உரம் சேர்த்தவர்கள் இன்னும் பலர். இவர்கள் பிறந்த ஊர்களில் நுழையும் இடங்களில் பெயர்ப் பலகையில் எழுத்தாளர்களின் பெயர்கள், அவர்கள் பெற்ற விருதுகளை குறிப்பிடலாம். பயணம் செய்யும் மக்கள் அறிந்து கொள்வர். கரிசல் சீமை எழுத்தாளர்களின் ஊர்களை பெருமைப்படுத்த தனி சுற்றுலாவை அரசு ஊக்குவிக்கலாம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!