உசிலம்பட்டி அருகே சீமானுாத்து ஊராட்சி கல்லுாத்து கிராமத்தில் சரளை கற்கள் நிறைந்த தரிசு நிலத்தை சீர்படுத்தி விவசாயத்தில் சாதித்து வருகிறார் ஓய்வு பெற்ற நகராட்சி அலுவலர் குபேந்திரன். உசிலம்பட்டி நகராட்சியில் பில் கலெக்டராக இருந்தவர் குபேந்திரன். விவசாய ஆர்வத்தில் ஓய்வு பெறும் முன்பே இப்பகுதியில் நிலங்களை வாங்கி 10 ஆண்டுகளுக்கும் மேலாக நெல்லி, தென்னை, எலுமிச்சை, கொய்யா போன்ற மரங்களை நட்டு பராமரித்து வருகிறார். அடர் நடவு முறையில் இவர் பயிரிட்டுள்ள தைவான் பிங்க் கொய்யா லாபம் கிடைக்க துவங்கியுள்ளதாக தெரிவித்தார்.
குபேந்திரன் கூறியதாவது: 5 ஏக்கரில் நெல்லி, 5 ஏக்கரில் தென்னையுடன் ஊடுபயிராக எலுமிச்சை, இரண்டரை ஏக்கரில் அடர் நடவு முறையில் தைவான் பிங்க் சிகப்பு ரக கொய்யா பயிரிட்டு உள்ளேன். கொய்யா 6 க்கு 6 அடி இடைவெளி விட்டு அடர்நடவு முறையில் 2500 செடிகள் நட்டுள்ளேன். கிணறு, போர்வெல்கள் மூலம் கிடைக்கும் தண்ணீரை அளவாக பயன்படுத்த சொட்டுநீர் பாசனம், இயற்கை உரங்கள், மினி டிராக்டர் உதவியுடன் சீரான இடைவெளியில் களையெடுத்தல் என தொடர்ந்து ஓராண்டாக வளர்த்து வருகிறேன்.
இந்த வகை கொய்யா சிறு செடியாக இருக்கும் போதே பூக்கத்துவங்கும். பூக்களை நீக்கி, அதிகப்படியான கிளைகளை கவாத்து செய்து பராமரிப்பதன் மூலம் தற்போது தரமான காய்கள் காய்க்கத் தொடங்கியுள்ளன. வியாபாரிகள் தோட்டத்திலேயே வந்து காய்களை கிலோ ரூ. 30 முதல் 40 வரையில் விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்.
சராசரியாக செடிக்கு 2 கிலோ கொய்யா மகசூல் கிடைத்தாலே நல்ல லாபம் கிடைக்கும். நெல்லி, எலுமிச்சை, தென்னை முதலியவை காய்ப்புக்கு வரும்போது கூடுதல் லாபம் கிடைக்கும். விவசாயத்தை கண்ணும் கருத்துமாக கவனித்து செய்து வந்தாலே விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றார். தொடர்பு கொள்ள: 99947 93738
சரளை கற்கள் நிறைந்த தரிசு நிலத்தை சீர்படுத்தி விவசாயம்
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!