dinamalar telegram
Advertisement

இறைச்சிக்கு இணையான உணவு கோழிமுட்டை

Share

புரதச்சத்து நிறைந்த ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி மற்றும் மீன் உணவு பட்டியலில் கோழிமுட்டையையும் உணவியலாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர். இரண்டு முட்டையில் உள்ள சத்து, கொழுப்பற்ற 90 கிராம் இறைச்சிக்கு ஈடாக உள்ளது என நிரூபித்துள்ளனர்.
எளிதாக ஜீரணிக்கப்படுவதால் சிறந்த குழந்தை உணவாகவும், முதியவர், நோயிலிருந்து மீண்டவர்களுக்கும் பயன்படுகிறது. மஞ்சள் கரு புரதச்சத்தையும், இரும்புச் சத்தையும் அபரிமிதமாக தருகிறது.
முட்டை ஓடு மற்றும் மஞ்சள் கருவின் நிறம் முட்டை ஓட்டின் நிறம் கோழியினங்களின் மரபியலைச் சார்ந்தது. வீரிய இன வெள்ளை லெக்கார்ன் கோழிகள் வெள்ளை நிறத்திலும், சிவப்பு போந்தா மற்றும் நாட்டுக் கோழிகள் வெளிர் சிகப்பு நிறத்தில் முட்டையிடும். ஓட்டின் நிறத்திற்கும், முட்டையிலுள்ள சத்துப் பொருட்களுக்கும் சம்பந்தம் இல்லை. மக்காச்சோளம், பசுந்தீவனம் அதிகமாக சாப்பிடும் கோழிகளின் மஞ்சள்கரு ஆழ்ந்த மஞ்சளாகவும் மற்ற கோழிகளில் வெளிர் மஞ்சளாகவும் காணப்படும்.
பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழி முட்டைகளின் மஞ்சள் கரு வெளிர் மஞ்சள் நிறத்திலும், நாட்டுக் கோழிகள் அவற்றுக்கான உணவை வயல் வெளிகளிலும் பெறுவதால் ஆழ்ந்த மஞ்சள் நிறத்தில் உள்ளது. மஞ்சள் கருவின் நிறம் மாறினாலும் சத்துக்கள் ஒரே மாதிரியே இருக்கும்.
ஆரோக்கிய வாழ்விற்கு சத்துப் பொருட்களின் கூட்டுக் கலவையாக முட்டையைக்கொள்ளலாம். முட்டையில் பாஸ்பரஸ், இரும்பு மற்றும் பாஸ்போலிபிட் போன்ற கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ, பி போன்ற சத்துக்களுடன் உயர்தரமான புரதமும் உள்ளது.
முட்டையின் ஆறில் ஒரு பாகம் புரத மாகவும் மஞ்சள் கருவில் 16 சதவீதமும், வெள்ளைக் கருவில் 10 சதவீதம் உள்ளது. பால், இறைச்சி, தானியங்களில் உள்ள புரதச் சத்தைக் காட்டிலும் தரத்தில் சிறந்ததாகவும் உள்ளது. மனித உடலுக்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களும் சரியான விகிதத்தில் முட்டையில் உள்ளன. இதன் புரதச்சத்து முழுவதுமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு ஜீரணிக்கப்படுகிறது . முட்டையில் கொழுப்புச் சத்து மஞ்சள் கருவில் மட்டுமே உள்ளது. ஒரு முட்டையில் ஏறக்குறைய 260 மில்லி கிராம் கொழுப்புச்சத்து உள்ளது. மனித உடலுக்கு குறிப்பிட்ட அளவு கொழுப்புச் சத்து தேவைப்படுவதால் நாம் உண்ணும் முட்டையில் உள்ள கொழுப்புச் சத்தானது தீங்கு விளைவிக்காது.
கொழுப்பில் கரையும் வைட்டமின் சத்துக்களான 'ஏ', 'டி', 'ஈ', 'கே' ஆகியவை மஞ்சள் கருவில் அதிகம் உள்ளன. மீன் எண்ணெய்க்கு அடுத்ததாக வைட்டமின் சத்து 'டி' அதிக அளவு உள்ளது. ஒரு முட்டையிலிருந்து 18கிலோ கலோரி வெள்ளைக் கருவிலிருந்தும் 79 கிலோ கலோரி மஞ்சள் கருவிலிருந்தும் கிடைக்கிறது.
மனிதனின் தினசரி தேவையில் 3 சதவீத கலோரியை பூர்த்தி செய்கிறது. முட்டையை வேகவைப்பதால் புரதக் கழிவு ஏற்படுவதில்லை. இது நன்கு ஜீரணமாகிறது. ஆம்லெட் செய்வதில்30 சதவீதம், வறுவல் செய்வதில் 9 சதவீதம், ஊத்தப்பமாக மாற்றும் போது 14 சதவீத புரதம் வீணாகிறது.

- உமாராணி, பேராசிரியர்,
கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆய்வு மையம்
திருப்பரங்குன்றம். மதுரை - 625 005
0452 - 248 3903

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement