எட்டு ஏக்கரில் சொட்டுநீர் பாசனம் அமைத்து கிடைக்கும் தண்ணீரை சிக்கனப்படுத்தி விவசாயம் செய்து லாபம் ஈட்டுகிறார், மதுரை செல்லம்பட்டியில் உள்ள கேசவன்பட்டி பஞ்சாயத்து முன்னாள் துணைத்தலைவர் ஜெயராமன்.
அவ்வளவு ஏக்கரிலும் சொட்டுநீர் பாசனம் சாத்தியமானது எப்படி… அவரே விளக்குகிறார்.
முதலில் 50 சென்ட் நிலத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து செண்டுப்பூ பயிரிட்டேன். குறைந்த தண்ணீரில் நல்ல மகசூல் கிடைத்தது. அதன் பின் 50 சென்ட் நிலத்தில் சின்னவெங்காயம், ஒரு ஏக்கரில் இளம் தக்காளி, 1.40 ஏக்கரில் பச்சை மிளகாய் நட்டுள்ளேன்.
பச்சைமிளகாயில் மட்டும் 8 டன் சாகுபடி செய்துள்ளேன். மல்ச்சிங் ஷீட் விரித்து சொட்டு நீர்ப் பாசனம் அமைத்ததால் இருமடங்கு விளைச்சல் கிடைத்தது. 3 நாட்களுக்கு ஒருமுறை நீருடன் உரம் கலந்து தருகிறேன். 2 ஏக்கரில் தக்காளி தனியாக நட்டுள்ளேன்.
ஒரு ஏக்கரில் செவ்வந்தி பயிரிட்டுள்ளேன். முதலில் தோட்டக்கலைத் துறை மூலம் மானியம் பெற்று சொட்டுநீர் பாசனம் அமைத்தேன். அப்போது அதன் அருமை தெரியவில்லை. பராமரிக்காமல் விட்டு விட்டேன். அதன் பின் விவசாய சுற்றுலாவில் மற்றொரு தோட்டத்துக்கு சென்று பார்த்த போது சொட்டுநீர் பாசனத்தின் அருமை புரிந்தது. பழைய லைன்களை அப்படியே வைத்து புதிதாக செலவு செய்து 8 ஏக்கரையும் சொட்டுநீர் பாசனத்திற்கு மாற்றினேன்.
முதலில் நட்ட தக்காளி காய்ப்பு முடிந்து, ஒரு ஏக்கரில் 1500 பெட்டி தக்காளி கிடைத்தது. ஒரு பெட்டியில் 16 கிலோ இருக்கும். பெட்டிக்கு ரூ.150 - 160 வரை விலை கிடைத்தது. செலவு போக லாபம் கிடைத்தது. அந்த செடிகள் அறுவடைக்கு பின் கருகி, மீண்டும் சிம்பு வெடித்துள்ளது. தழைத்து வரும் போது கயிறு கட்டினால் போதும், மீண்டும் தக்காளி அறுவடை செய்யலாம். இதற்கு நாற்று செலவும் இல்லை. புதிதாக நட்ட நாற்று போல நன்றாக வளர்கிறது.
பச்சை மிளகாயும் 5 மாதம் கடந்த நிலையில் காய்ப்பு தொடர்கிறது. இன்னும் 10 டன் வரை எடுக்கலாம். பச்சை மிளகாய் புரட்டாசி ஆரம்பித்து மாசி மாதம் வரை தாக்குபிடிக்கும். இங்கே தண்ணீர் ரொம்ப குறைவு தான். ஒரு போர்வெல் உள்ளது. போர்வெல் தண்ணீரை கிணற்றில் நிரப்பி, செடிகளுக்கு அளவுத் தண்ணீர் தருகிறேன். விவசாயிகள் சொட்டுநீர் பாசனத்தின் அருமை புரிந்து கொண்டால், விவசாயம் என்றுமே செழித்து வளரும் என்றார்.
இவரிடம் பேச : 98432 99618
- எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை
சொட்டுநீரின் அருமை விவசாயத்தில் தெரியும்
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!