நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து, டாக்டர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.
சமூக வலைதளங்கள் போட்டி போட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது பற்றி விதவிதமாக கூறுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வது உணவு தான். ஆனால், உணவின் மூலம் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்ய முடியுமா என்றால், நிச்சயம் சாத்தியம் இல்லை.
துாக்கம்
சத்தான உணவோடு சேர்ந்து, ஆறு - ஏழு மணி நேர துாக்கம், ஆரோக்கியமான மனநிலை இருந்தால் தான், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சத்தான உணவு சாப்பிடுவேன்... ஆனால், நான்கு மணி நேரம் மட்டுமே உறங்குவேன் என்றால், அந்த உணவு எந்த வகையிலும் சக்தி தரப் போவதில்லை. சரியான நேரத்திற்கு துாங்கி, விழிக்காத எந்த உடம்புமே ஆரோக்கியமான உடல் ஆகாது.
வீட்டில் தானே இருக்கிறோம், சற்று நேரம் தாமதித்து எழலாம் என்ற மனநிலை. இந்த பூமி சந்திரன், சூரியன் அடிப்படையில் மட்டுமே இயங்கும். அதனால், நீங்கள் வீட்டில் இருந்தாலும், அலுவலகம் சென்றாலும் பிரபஞ்ச இயக்கம் மாறப் போவதில்லை. அதனால், சூரிய உதயத்திற்கு பின் எழுவது உடலுக்கு பலவீனம் தான்.
காலையில், 4.30 மணிக்குள் எழுவது சிறப்பு. எழுந்து உடற்பயிற்சி, யோகா, நடைப்பயிற்சி ஆகியவை மேற்கொள்வது நலம்.
உணவு
வீட்டில் இருப்பதால் பசி எடுப்பதில்லை. அதனால், ஒருவேளை உணவைத் தவிர்த்து விடுகிறேன் என்று சொல்கின்றனர். வீட்டில் இருந்து வேலை செய்தாலும், உடலுக்கு சத்து தேவை. பல மணி நேரம் லேப்டாப், மொபைல் பார்த்த படி இருப்பதால், உடலில் இருந்து வெளியேறும் வெப்பம் அதிகரிக்கும். அதனால் உணவைத் தவிர்க்கக் கூடாது.
வீட்டில் இருப்பதால் நொறுக்குத் தீனி அதிகம் கொறிக்கத் தோன்றும். இதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல புது புது உணவை சாப்பிட்டு, ஜீரண மண்டலத்தை சிரமத்திற்கு ஆளாக்காமல் இருக்க வேண்டும்.
உடற்பயிற்சி
சரியான நேரத்தில் செய்ய வேண்டும். இரவு முழுதும் கண் விழித்து, காலையில் உடற்பயிற்சி செய்யும் போது உடல் அதிகம் பலவீனமாகும்.
தண்ணீர்
அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்வதால், உடல் உஷ்ணம் அதிகரிக்கும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால், சிறுநீர் கழிப்பதில் எரிச்சல், சிறு கட்டிகள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.
பெண்கள்
வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதால், பல பெண்களுக்கு வீடு, அலுவலகம் இரண்டிலும் கவனம் செலுத்த முடியவில்லை.
குழந்தைகளுக்கு தேவையானதை சரியாக செய்ய முடியவில்லையே என்ற கவலை, 12 - 14 மணி நேரம், அலுவலக வேலை, வீட்டு வேலைகள், இவையெல்லாம் சேர்ந்து ஒருவித குற்ற உணர்வு உருவாகி, அது மன அழுத்தமாக மாறுகிறது.
தேவையற்ற இந்த மன குழப்பம் உடலளவில் அதிகம் பாதிப்படையச் செய்து, மாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாக்கும்.
* சமூக வலைதளங்களில் தேவையில்லாமல் நேரத்தைச் செலவிடாமல், கிடைக்கும் நேரத்தை குடும்பத்துடன் மகிழ்ச்சியாகச் செலவிடுங்கள்
* தினமும், 10 - 15 நிமிடங்கள் தெரிந்த உடற்பயிற்சிகளை செய்யுங்கள்
* ஒரே இடத்தில், 30 - 45 நிமிடங்கள் உட்கார்ந்து இருக்க வேண்டாம். சிறிது நேரம் நடந்து விட்டு வருவதால், ரத்த சுழற்சி சீராகும்
* எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும். தினமும் உணவில் ரசம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* காலையிலும், மாலையிலும் குளிர்ந்த நீரால் கண்களை கழுவி, நேரம் கிடைக்கும் போது தேங்காய் எண்ணெய் தடவி, சில நிமிடங்கள் கண்களை மூடி இருக்க வேண்டும்.
டாக்டர் மது கார்த்தீஸ்,
சித்த மருத்துவர், சென்னை.
99944 93687
நோய் எதிர்ப்பு சக்தி! - உதயத்திற்கு பின் எழுவது பலவீனம்!
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
வாசகர் கருத்து (1)
இன்றைய சூழ்நிலையில் பலர் இரவு பகல் பாராமல் உழைக்கிறார்கள். அவர்கள் நைட் ஷிஃப்ட் முடிந்து காலை நாலு மணிக்குத்தான் வீட்டுக்கே வருகிறார்கள். இரவு முழுவதும் பணிபுரியும் போக்குவரத்து ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள் எப்படி சூரிய உதயத்திற்கு முன் விழிக்க முடியும்? விடியற்காலை எழுவது, நடைப்பயிற்சி செய்வது போன்றவை எல்லோருக்கும் தெரியும். இரவில் பணி புரியும் மக்களுக்கு உதவற மாதிரி ஏதாவது ஆய்வு செய்து யோசனை கூறவும்.