dinamalar telegram
Advertisement

முதல்வர் பேசுகிறேன்!

Share

பள்ளிப் பருவத்துல, 'எதிர்காலத்துல என்னவாக ஆசைப்படுறீங்க'ன்னு டீச்சர் கேட்டப்போ, 'உங்களை மாதிரி டீச்சர் ஆகணும்'னு சொன்னவ இந்த திலகம்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னாடி, திண்டுக்கல், சின்னாளப்பட்டி, சேரன் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில 24 மாணவர்கள், 5 ஆசிரியைகளுக்கு நான் முதல்வர்; இன்னைக்கு அதே பள்ளியில 1,800 மாணவர்கள், 90 ஆசிரியர்களுக்கு முதல்வர்!

முதல்வர் எனும் நான்
யாருக்காக செயல்படுறோமோ அவங்களுக்காகவே 24 மணி நேரமும் சிந்திக்கணும். இந்த கொள்கையோட, முதல்வர் பொறுப்பு தந்த அதிகாரத்தை எனக்கான சுதந்திரமா மாத்திக்கிட்டேன். இன்னும் கூட ஆங்கில பாட வகுப்புகள் எடுக்குறேன். என் பார்வையில இதுதான் ஆளுமை!

கம்பீர கவுரவம்
வகுப்பறைக்கு வெளியிலேயும் கல்வி இருக்குதுங்கிறது என் நம்பிக்கை! அழிந்து வரும் சிறுமலை வாழை, கல்குவாரியால் இடமாற்றமாகும் நிலத்தடி நீர் உள்ளிட்ட என் மாணவர்களோட சமூக ஆய்வுகளுக்கு தேசிய அளவிலான அங்கீகாரம் கிடைச்சிருக்கிறது என் நம்பிக்கைக்கான கவுரவம்.

என் பலம்
மாணவர்களோட பழகுறதால அவங்க உற்சாகம் ஆசிரியர்கள்கிட்டேயும் எப்பவும் இருக்கும். அதனால, மிரட்டல் இல்லாமலே நட்போட அவங்க தவறை சுட்டிக்காட்டி திருத்த முடியும்ங்கிறது என் அனுபவம்; இதுதான் என் பலம்.

எனக்குள் ஒரு தோழி
பணிக்கு போற பெண்களோட குரல் வீட்டுல நியாயமா உயர்ந்தா கூட, 'எல்லாம் வேலைக்குப் போய் சம்பாதிக்கிற திமிரு'ங்கிற விஷ வார்த்தைகளை கேட்டே ஆகணும்; இந்த எதார்த்தத்தை உணர்ந்திருக்கிறதால, ஆசிரியைகளோட பிரச்னையை புரிஞ்சு நடந்துக்கிற ஒரு தோழியா இயங்குறேன்!

மாணவர்களே...
நீங்க விரும்புற பதவியெல்லாம் வாழ்க்கையோட இலக்கு கிடையாது; சம்பாதிக்க தேர்ந்தெடுக்குற ஒரு பாதை... அவ்வளவுதான்! இதை புரிஞ்சுக்கிட்டு வாழ்க்கையை கொண்டாடுங்க!

பெற்றோரே...
தோல்வியை கடக்க பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்க! 'நீட்' தற்கொலைகளுக்கு காரணம் அரசியல் விளையாட்டுன்னு புரிய வையுங்க! முக்கியமா... அவங்க இலக்கை நீங்க தீர்மானிக்காதீங்க!

ஓர் உண்மை
'விளையாட்டு மட்டுமே மாணவர்களோட திறனை மெருகேற்றும்; கூன் விழுந்த முதுகையும் நிமிர்த்தும்!' - விளையாட்டு மைதானமே இல்லாம பள்ளி நடத்துறவங்க இந்த உண்மையை புரிஞ்சுக்கணும்!

அர்த்தமுள்ள வாழ்க்கை
ஆதரவற்ற முதியவர்களுக்காக ஓர் இல்லம் தொடங்கி மிச்சமுள்ள அவங்க வாழ்க்கையை அழகாக்கணுங்கிறது என் ஓய்வுகால திட்டம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement