LOGIN
dinamalar telegram
Advertisement

நிலக்கடலையில் கந்தக, சுண்ணாம்புச்சத்தை அதிகரிக்க என்ன வழி

Share

ஏழைகளின் முந்திரி, எண்ணெய் வித்துக்களின் அரசன் எனப்படுவது நிலக்கடலை. இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 6.19 லட்சம் எக்டர் பரப்பில் 10.98 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் மானாவாரி மூலம் 70 சதவீதம், இறவையில் 30 சதவீத சாகுபடி நடைபெறுகிறது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் புதுக்கோட்டையில் 56ஆயிரத்து 163 எக்டரில் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. உற்பத்தியில் இரண்டாமிடத்தில் இருந்தாலும் மகசூலை ஒப்பிடும் போது மானாவாரியில் எக்டருக்கு சராசரியாக 986 கிலோவாக குறைந்தளவிலேயே உள்ளது.

மகசூல் குறைய காரணம்
சுண்ணாம்பு சத்து மற்றும் கந்தகச்சத்து குறைபாடே மகசூல் குறைவதற்கு காரணம். தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை மட்டும் பயன்படுத்துவதால் அவற்றுக்கு சுண்ணாம்பு, கந்தகச்சத்து கிடைப்பதில்லை. சுண்ணாம்புச்சத்து நிறைந்த மண்ணில் பயிரிட்டாலும் கந்தகம் மற்றும் நுண்ணுாட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை.

கந்தகத்தின் பயன்
பயிர்களில் பச்சையம் உருவாவதற்கும் அமினோ அமிலம், புரத உற்பத்திக்கும் கந்தகம் அவசியம். நிலக்கடலையில் எண்ணெய் அளவு அதிகரிக்கவும் உதவுகிறது. பயிர்கள் தழைச்சத்தை பயன்படுத்தும் திறனையும் அதிகரிக்கிறது. கந்தக குறைபாட்டால் இலைகள் வெளிறியும் மெலிந்தும் காணப்படும். செடியில் பச்சையம் குறைந்து மஞ்சளாக மாறும்.
இலை, தண்டு வேரின் உறுதித் தன்மைக்கு சுண்ணாம்புச்சத்து அவசியம். கடலை விதையின் உருவாக்கத்தில் இதன் பங்கு அதிகம்.
கடலை விழுதுகள் மண்ணில் இறங்கியவுடன் காய்கள் நேரடியாக சுண்ணாம்புச்சத்தை எடுத்துக் கொள்ளும். இச்சத்து குறைந்தால் பொக்கை கடலை உருவாகும். இலை நுனி மற்றும் ஓரங்கள் கிழிந்து காணப்பட்டால் சத்து குறைபாடு என அறிந்து கொள்ளலாம். பூக்களில் சூல் பை சிதைவு ஏற்படும். விதைகள் வளர்ச்சி குன்றி கருப்பாக இருக்கும்.

கந்தக, சுண்ணாம்பு சத்து அதிகரிப்பது எப்படி
கடலை விதைப்பதற்கு முன்பாக ஒரு ஏக்கரில் 80 ஏக்கர் ஜிப்சத்தை அடியுரமாக இட வேண்டும். விதைத்த 30 - 45 நாட்களுக்குள் பயிர் பூக்க தொடங்கும் போது மேல் உரமாக 80 கிலோ ஜிப்சத்தை இட்டு மண் அணைக்க வேண்டும். இலையின் மேற்பரப்பில் துாவக்கூடாது. மண்ணில்
10 - 12 சதவீத ஈரம் இருக்கும் போது ஜிப்சம் இட வேண்டும். மழை வரும் போது இப்படிச் செய்தால் மண்ணில் ஜிப்சம் கரைந்து செடிகளுக்கு நேரடியாக கந்தகம், சுண்ணாம்புச்சத்தை அளிக்கிறது.

- உதவி பேராசிரியர்கள்
கண்ணன், இந்திராணி,
மண் மற்றும் சுற்றுச்சூழல் துறை, மதுரை விவசாய கல்லுாரி
99764 06231.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • Madhu Kumaran - vellore,இந்தியா

    mad

  • ஆரூர் ரங் -

    இன்றும் சமையல் எண்ணைய்த் தேவையில் பாதியளவுக்கு மேல் இறக்குமதிதான் செய்கிறோம். கடலை எண்ணெய்யில் பெரும்பாலும் இறக்குமதி பாமாயில் கலந்தே விற்கிறார்கள். இதற்கு சட்ட பூர்வ அனுமதியும் உண்டாம்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement