ஆடு, மாடு, கோழிப்பண்ணைகளை குளிர்காலத்தில் பராமரிப்பது அவசியம். மாட்டுப்பண்ணையில் மழைநீர் தேங்காமல் வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கறவை மாடுகள் மழையில் நனைந்தாலோ சேறு சகதியான தரையில் படுத்தாலோ பால் உற்பத்தி குறைந்து விடும்.
பொட்டாசியம் பர்மாங்கனேட் கலந்த நீரில் பசுக்களின் மடியை கழுவ வேண்டும். சாக்குப்பை அல்லது உலர்ந்த வைக்கோலால் கன்றுகளுக்கு படுக்கை அமைக்க வேண்டும். குளிரை குறைத்தால் கன்றுகளுக்கு ஏற்படும்
நிமோனியா காய்ச்சல், கழிச்சல் நோய்களில் இருந்து பாதுகாக்கலாம்.மழை பெய்யும் காலத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. தழைகள், உலர்கம்பு, சோளத்தட்டைகளை தீவனமாக கொடுக்கலாம். ஈரமான, சகதியான தரையில் ஆடுகள் மேயும் போது அவற்றின் கால் குளம்புகளில் புண் ஏற்படும். ஆட்டுகொட்டகையை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொண்டால் கொசுப் பெருக்கத்தால் ஏற்படும் நீலநாக்கு நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றலாம்.
கோழிப்பண்ணையில் ஈரம் இன்றி காத்தால் கழிச்சல் நோயிலிருந்து பாதுகாக்கலாம். கோழித்தீவனத்தில் ஈரம்படக்கூடாது. ஈரத்தீவனங்களை உண்ணும் கோழிகளுக்கு பூஞ்சாண நோய் ஏற்படும். பண்ணையை சுற்றி வளர்ந்துள்ள புதர்த்தாவரங்களை அப்புறப்படுத்தினால் பாம்புகள் வருவதை தடுக்கலாம்.
-ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்புத்துறை
திண்டுக்கல்.
73880 98090
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!