திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த விவசாயி அழகர்சாமி, பி.ஏ.வி.எம். என தனது பெயரில் புதிய முருங்கை ரகத்தை உருவாக்கி, வேளாண் பல்கலையின் அங்கீகாரம் பெற்றுள்ளார்.
இதற்காக 25 ஏக்கரில் நர்சரி அமைத்து ஒட்டு முருங்கை ரகங்களை பதியன் இட்டுள்ளார். இந்த ரகங்கள் நட்ட ஐந்தாவது மாதத்தில் காய்ப்புக்கு வருகிறது என, தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியது: பல ஆண்டுகள் ஆராய்ச்சியில் புதிய ரகத்தை உருவாக்கியுள்ளேன். நர்சரியில் ஏழு மாதங்கள் வரை முருங்கை ஒட்டுக்கன்று வளர்த்து, 70 ரூபாய்க்கு விற்கிறேன். செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை முருங்கைக்காய்க்கு நல்ல விலையும், விளைச்சலும் கிடைக்கும்.
நட்ட ஐந்தாம் மாதத்தில் காய்க்கும். முதலாண்டில் மரத்திற்கு கிலோ 100 - 150 கிலோ காய்க்கும். அடுத்தடுத்த ஆண்டுகளில் 300 கிலோ வரை காய்ப்புத் திறன் அதிகமாகும். பூக்கள் அதிகம் பூக்கும் வகையில் ஆர்கானிக் டானிக் தயாரித்துள்ளேன்.
முருங்கைமரத்திற்கு ஒரு லிட்டர் தண்ணீரில் 15 மில்லியும், மற்ற பயிர்களுக்கு 20 மில்லியும் சேர்த்து ஊற்றினால் பூக்கும் திறன் அதிகரிக்கும். மார்ச், ஏப்ரலில் விலை மலிவாக இருக்கும் என்பதால், அந்த நேரத்தில் காய்க்கும் திறனை குறைப்பது நல்லது. ஒருமுறை நட்டால் நிரந்தரமாக காய் காய்க்கும் தன்மையுடையது என்பதால் சுற்றியுள்ள விவசாயிகள் இந்த ரகத்தை விரும்பி வாங்குகின்றனர். ஏக்கருக்கு 200 கன்றுகள் நட வேண்டும்.
இதுவரை 60 ஆயிரம் விவசாயிகளுக்கு ஒரு கோடி வரை கன்றுகள் தயாரித்து கொடுத்துள்ளேன். இரண்டடி நீளம் வரை காய் இருப்பதால், ஏற்றுமதிக்கும் உகந்தது என்றார்.
தொடர்புக்கு: 97917 74887.
-எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!