Load Image
Advertisement

கன்று வளர்ப்புக்கு சீம்பால் அவசியம்

கன்று ஈன்றவுடன் தாய்ப் பசுவின் மடியில் சுரக்கும் கெட்டியான, சிறிது மஞ்சள் நிறமான முதல் பால் சீம்பால் எனப்படும். இது ரத்தத்திலுள்ள புரதத்திலிருந்து சில நிணநீரின் துாண்டுதலால் கன்று ஈணுவதற்கு சில வாரங்கள் முன்னதாக அதன் மடியில் உருவாக்கப்படுகிறது. கன்று ஈன்ற மூன்று முதல் நான்கு நாட்கள் வரையில் சீம்பால் சுரக்கும். இதில் மாவுச்சத்து கொழுப்புச் சத்துக்களுடன் கன்று வளர்ச்சிக்கு தேவையான புரதம், உயிர்ச்சத்துக்கள், தாது உப்புக்கள் மற்றும் நோய் எதிர்ப்புசக்தி போன்றவை அதிக அளவில் உள்ளன.
இதில் அதிகளவில் உள்ள 'இம்யூனோகுளோபுளின்' நோய்க் கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கும் சக்தியை தருகின்றன. சாதாரண பாலை விட ஏழு மடங்கு புரதச்சத்தும் இரண்டு மடங்கு மொத்த திடப் பொருளும் அதிகமாக உள்ளன. சீம்பால் சிறந்த மலமிளக்கி.கன்று பிறக்கும் போது அவைகளிடம் குறைந்து காணப்படும் 'ஏ, டி, ஈ' போன்ற உயிர்ச்சத்துக்கள் சாதாரணப் பாலை விட சீம்பாலில் அதிக அளவில் உள்ளன. சீம்பாலை கிரகிக்கும் தன்மையானது பிறந்த சில மணி நேரத்தில் அதிகமாகவும், 24 மணி நேரத்திற்குப் பிறகு முற்றிலுமாகக் குறைந்து விடுகின்றது.

அதனால் கன்றுகள் பிறந்த 30 நிமிடங்களுக்குள் முதல் முறையும் 10 மணி முதல் 12 மணி நேரத்தில் 2வது முறையும் கன்றின் உடல் எடையில் பத்தில் ஒரு பங்கு கொடுக்கப்பட வேண்டும். கன்று தானாக எழுந்திருக்காவிட்டால் தாயிடமிருந்து சீம்பால் குடிக்க உதவ வேண்டும். சீம்பால் அதிகளவில் குடிக்க கொடுத்தால், கன்றுகளுக்கு கழிச்சல் ஏற்படும். பலவீனமான கன்றுகளுக்கு பால்புட்டி மூலமாக சீம்பாலை கொடுக்க வேண்டும்.
தாயின் மடியில் பால் சுரக்காவிட்டாலோ, தாய்ப்பசு இறந்தாலோ செயற்கை சீம்பால் தயாரிக்க வேண்டும். அரைலிட்டர் பாலுடன் 300 மில்லி தண்ணீர், ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெய், ஒரு முட்டை கலந்து ஒரு நாளைக்கு 3 தடவை கொடுக்க வேண்டும்.
- உமாராணி,
பேராசிரியர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையம்,
திருப்பரங்குன்றம்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement