Advertisement

இளஸ்.. மனஸ்! (54)

Share

அன்பு பிளாரன்ஸ்,
சென்னையில், பல்பொருள் அங்காடி நடத்தும், 38 வயது பெண் நான். மூத்த மகளுக்கு, 15 வயதாகிறது; 10ம் வகுப்பு படிக்கிறாள்.
விலையுயர்ந்த, ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்துள்ளோம். சமீபத்திய பிறந்தநாளையொட்டி பரிசாக, 'செல்பி ஸ்டிக்' கேட்டாள். வாங்கி கொடுத்துள்ளோம். இரண்டு வருடங்களாக, செல்பி கிறுக்கு பிடித்து அலைகிறாள்.
ஒரு நாளைக்கு, பத்துக்கும் மேற்பட்ட போட்டோக்களை, சோஷியல் மீடியாவில் பதிவேற்றுகிறாள்; ஒவ்வொன்றுக்கும் கவர்ச்சிகரமான தலைப்பு வேறு.
ஏன் தான் இந்த பிள்ளை இப்படி திரியுதோ... இந்த கிறுக்கை குணப்படுத்த வழி தெரியாமல் தவிக்கிறேன். ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்க...

அன்புள்ள அம்மா,
செல்பிக்கு, துாயதமிழ் சொல், சுயமி அல்லது சுயஉரு. இது தன்னைத்தானே எடுத்துக் கொள்ளும் டிஜிட்டல் புகைப்படம். உலகின் முதல் செல்பியை, அமெரிக்கரான, ராபர்ட் கார்னிலியஸ், 1839ல் எடுத்தார். கண்ணாடியில் பிரதிபலித்த தன் பிம்பத்தை, புகைப்படக் கருவியால் சுட்டார். அதுதான் முதல், 'செல்பி' என மதிக்கப்படுகிறது.
அமெரிக்க நடிகை பாரிஸ் ஹில்டன், 2007ல், செல்பிகளை, 'ட்வீட்டர்' என்ற சமூக வலைதளத்தில், 'ட்வீட்' செய்த போது, மிகவும் பிரபலமானது. இன்று உலகில் எடுக்கப்படும் புகைப்படங்களில், 82 சதவீதம் செல்பி படங்கள் தான்.
தினமும், 9.3 கோடி படங்கள் உலகம் முழுக்க எடுக்கப்படுகின்றன. ஆண்டு தோறும் ஜூன் 21ம் தேதி, செல்பி தினமாக கொண்டாடப்படுகிறது. ஐரோப்பாவில், 16- முதல், 25 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்கள், வாரத்துக்கு, ஐந்து மணி நேரத்தை செல்பி எடுக்க ஒதுக்குவதாக ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது.
மகிழ்ச்சியை பரப்புவது, அழகை பறைசாற்றுவது, தன்னம்பிக்கையை வீரியப்படுத்துவது போன்றவை தான் செல்பி படங்களின் பிரதான நோக்கம்.
இது, அளவுடன் இருந்தால், உடலுக்கும், மனதுக்கும் நன்மை பயக்கும். மிதமிஞ்சினால் உயிருக்கு உலை வைக்கும்.
கடந்த, 2011 முதல் -2017 வரை, விபரீதமான முறையில் செல்பி எடுத்த, 259 பேர் மரணமடைந்துள்ளனர்.
ரயில் முன் நின்று... நீர்வீழ்ச்சி உச்சியிலிருந்து... மிருககாட்சி சாலை சிங்கம் அருகில்... என, செல்பி எடுத்துக் கொள்வது எல்லாம், மகா ஆபத்தான சாகசங்கள்.
ஒரு நாளில், மூன்று முறை செல்பியை சமூக வலைதளத்தில் பதிவேற்றுபவர் ஓரளவு பிரச்சனையுள்ளவர்; தினம், ஆறு என்றால், 'செல்பைட்டிஸ்' என்ற மனேநாய்க்கு உள்ளானவர் என, கோல்கட்டா விஞ்ஞானி, அவேதஷ் பி சிங் சோலங்கி கணித்துள்ளார்.
செல்பி ஆர்வத்தில் அலையும் மகளை திருத்த சில யோசனைகள்...
* சிலர் வாயைக்கோணி, கைவிரல்களை பக்கவாதம் வந்தது போல் இழுத்தபடி செல்பி எடுப்பர். இது போன்ற கோணங்கிதனம் செய்யாமல் செல்பி எடுக்க அனுமதிக்கலாம்
* ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்க அனுமதிக்க கூடாது
* ஆபாசமான, சர்ச்சைக்குரிய தலைப்பு இடக்கூடாது
* மகளுக்கு தன்னைத்தானே ரசிக்கும், 'நார்சிசம்' தொற்ற வாய்ப்புண்டு; கவனமாக இருக்கவும்
* ஆபாசமாக செல்பி எடுக்கும் தோழியர் இருந்தால், உறவைத் துண்டித்து கண்காணிக்கவும்
* சாதனையாளர்கள், பிரபலங்கள், அற்புதமான இயற்கை காட்சிகளுடன், செல்பி எடுப்பற்கு மகளை ஊக்கப்படுத்தவும்
* இரு பக்கமும் கூர்மையுள்ளது இந்த புகைப்பட கலை; இதை, ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும்
* உபேயாகரமான பொழுது போக்குகள் பக்கம், மகளின் கவனத்தை திருப்பு
* புகைப்படக்கலை மிகச்சிறந்த பொழுதுபோக்கு. செல்பி மட்டும் எடுக்காது, மனதை கவரும் காட்சிகளை எடுத்தால் திறமை வளரும்; அவளது கிறுக்கு தெளியும்.
உன் மகளுடன், நானும் ஒரு செல்பி எடுத்துக் கொள்ளலாமா?
-- என்றென்றும் அன்புடன், பிளாரன்ஸ்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • buvi -

    நன்று

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement