Advertisement

'தூக்குப்போட்டு செத்துப்போன ராதா வந்திருக்கேன்!' - பெண்களை மட்டும் 'பேய்' பிடித்தாட்டுவதேன்!

Share

''என் மகளுக்கு பேய் பிடிச்சிருச்சு... பேயை ஓட்ட பல இடத்துல வைத்தியம் பார்த்தும் குணமாகலை...,''- கவலை தேய்ந்த முகத்துடன் பெண்ணின் தந்தை கூறினார். அப்பெண்ணின் உடலில், பல இடங்களில், ரத்தக்காயங்கள் இருந்தன. பரிசோதித்த கோவை ராயர்கேர் மருத்துவமனையின் மனநல மருத்துவர் பரந்தாமன் சேதுபதி, முதலில் காயத்துக்கான மருத்துவம் அளித்தார்.
பின்னர், அப்பெண் ஹிஸ்டீரீயா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக் கொண்டு, அதற்குரிய மருத்துவம் மற்றும் ஆலோசனைகளை, குறிப்பிட்ட இடைவெளியில், மூன்று மாதங்கள் அளித்தார்.
சில கவுன்சிலிங்கில், பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினரும் பங்கேற்றனர். தற்போது, அப்பெண் பூரண நலம் பெற்று, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக உள்ளார். ''டாக்டர்...இது போல் பேய் பிடிக்கறதுன்னு சொல்றதெல்லாம் உண்மையா...,'' என்ற நம் கேள்வியை சிரித்தபடி எதிர்கொண்ட டாக்டர் பரந்தாமன், ''ஒருவர் தனது இயல்பு நிலையை இழப்பதே, இதற்கு காரணம். இதை ஹிஸ்டீரியா என்று அழைக்கின்றனர். விஞ்ஞானத்தை ஏற்க மறுப்பவர்கள் இதை பேய், ஆவி, சூன்யம் என்கின்றனர்,'' என்றார்.
''எதனால் இந்த இயல்பிழப்பு ஏற்படுகிறது,'' என்று கேட்டதற்கு, ''இயல்பிழப்பு என்பது ஆளுமையில், தைரியம் குறைந்த மக்களிடையே ஏற்படும். மனதுக்குள் தேங்கி கிடக்கும் கோபம், வெறுப்பு, இயலாமை ஆகியவை தாங்க முடியாத கட்டத்தில், வெடித்துச் சிதறி இவ்வகை நோயாக வெளிப்படும். இது போன்ற சூழ்நிலையில், தன் மீது அதிகாரம் செலுத்தியவர்கள், தன்னிடம் தஞ்சமாவதை பார்த்து, ஆழ்மனதுக்குள் மகிழ்ந்து, அதே போன்ற சூழ்நிலையை, சிலர் தங்களுக்கு, தாங்களே அடிக்கடி உருவாக்கிக் கொள்வர்,'' என்றார் டாக்டர்.
இது குறித்து, மேலும் அவர் விளக்கி கூறியதாவது:காலம், காலமாக வளர்க்கப்பட்டு வரும், சில நம்பிக்கைகளும், இதற்கு ஒரு காரணம். சிலருக்கு கோவிலின் சூழல், வாத்தியங்களின் முழக்கம் ஆகியவை, இவ்வகை வெளிப்பாடு தோன்ற காரணமாக அமையலாம். ஆழ் மனப்போராட்டங்களையும், குமுறல்களையும், வெளிக்கொணரும் ஒரு வாய்ப்பாகவே, இது உள்ளது.பெரும்பாலும் பூசாரிகள், மந்திரவாதிகளால் இது குணப்படுத்தப்படுகிறது என்ற நம்பிக்கை உண்டு. இது ஒரு மனநல பாதிப்பு. இதற்கு மருத்துவ ஆலோசனையும் தேவை என்பதை, அனைவரும் உணர வேண்டும். பல நேரங்களில், இது போன்று நோய் வந்தவர்களுக்கு, சமூகத்தில் மதிப்பு ஏற்படுகிறது. இவர்கள் தெய்வசக்தி, உள்ளவர்களாக கருதப்பட்டு வணங்கப்படுகிறார்கள்.

வெளிநாடுகளில் இல்லை
ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருக்கின்ற ஆழ்மனம், மேலும் அழுத்தப்படும்போது, மனதில் இருந்து வெளிப்பட்டு, உதவிக் கோரும் குரலே இந்த நோய் எனலாம். இது வேண்டுமென்றே, திட்டமிட்டு செய்யப்படும் செயல் அல்ல. குறிப்பிட்ட நபரை அறியாமல் நடக்கின்ற அனிச்சை செயலே.இது போன்ற நோய்கள், வெளிநாடுகளில் ஏறக்குறைய இல்லை. ஆனால், நம் நாட்டில் இது பெரும்பாலும், இளம் பெண்களுக்கே இந்த மனநல பாதிப்பு வருகிறது. பெண்களுக்கு கருத்து சுதந்திரம் இல்லாத காரணத்தாலும், ஆண்களை போல, சொந்த பிரச்னைகளை வெளியே சொல்ல முடியாத காரணத்தாலும், நம் நாட்டில் இந்த இயல்பிழப்பு அதிகம் காணப்படுகிறது.
என்னதான் தீர்வு
இது தற்காலிகமான, முற்றிலும் தீர்க்கப்படக்கூடிய மன நோயாகும். இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு, குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்களுடைய சொந்த பிரச்னைகள், உறவுகளுக்கு இடையே உள்ள புரிதல் ஆகியவை குறித்து, தெளிவான கவுன்சிலிங் கொடுப்பதால், குணமாக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

மந்திரவாதிக்கு சக்தி இருக்கிறதா?
''சாமியார்கள், மந்திரவாதிகளால் இது முடியும் அல்லது முடியாது என்று அறுதியிட்டு கூற முடியாது. இது முற்றிலும் மனம் சார்ந்த விஷயம் என்பதால், அவர்கள், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை, ஆதரவான மொழியில் பேசி, குணமடைய செய்ய வாய்ப்புண்டு. பல இடங்களில், அது போல் நடந்து இருக்கிறது,''

இறைச்சியும் மதுவும் ஏன்?
''கிராமங்களில் பெண்களுக்கு 'பேய்' பிடித்து விட்டால், அவர்கள் அதே பகுதியில் வசித்து, இறந்து போன நபரை போல பேசுவதும், அளவில்லாமல் இறைச்சி உண்ணுவதும், மது அருந்துவதும் ஒரு வகையான ஆழ்மன பாதிப்புதான். இந்நோயால் தாக்கப்பட்டவர்கள், குறிப்பிட்ட நபரின் நடவடிக்கைகள், பாவனைகளை தன் ஆழ்மனதில் இருத்திக் கொண்டு, அதே போல நடப்பது, பேசுவது, உண்ணுவது என, அனைத்து பாவனைகளையும் செய்வர்,''.

டாக்டர் பரந்தாமன் சேதுபதி,
மனநல மருத்துவர்,
95974 27975.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (6)

 • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

  ஹிப்னோஸிஸ் மூலமாக ஒருவரை மிகவும் ஆழமான நிலைக்கு கொண்டு செல்ல முடியும். ஆழ் மனம் எதையும் மறப்பதில்லை. நமக்கு இருக்கும் புரிய முடியாத பயங்கள், உணர்ச்சிகள் போன்றவை எப்போதோ ஒரு காலத்தில் அடைந்த அனுபவத்தால் வந்தவை. ட்ரான்ஸ் என்கிற நிலையில் ஒருவரை முன் காலத்தில் நடந்ததை முழுதும் நினைவுக்கு கொண்டு வர செய்ய முடியும். இரண்டு வயதில் கீழே விழுந்த பெண்மணி, உயரத்தில் சென்றால் தலை சுற்றி விழுந்ததற்கு இந்த அனுபவம்தான் காரணம் என்பதை கண்டு பிடித்து குணமடைந்திருக்கிறார். ஒருவர் அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்தால் நினைவிழந்து இருந்தார். அப்போது மருத்துவர்களும், நர்ஸுகளும் எதோ பேசிக்கொண்டது அவரது உல் மனதிற்கு கேட்டு அதனால் அவர் கழுத்து வலி வந்து கஷ்டப் பட்டார். ஹிப்நோசிஸ் மூலமாக, அவரது மனதை காலத்தில் பின்னோக்கி அழைத்து செல்ல முடிந்தது. அப்போது அவர் தனது கழுத்து வலியின் காரணத்தை அறிந்தார். வலி குணமாகி விட்டது. இதை போல இன்னும் ஆழமாக செல்ல செல்ல, சிலர் போன பிறவிகளை நினைவுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அப்போது வேற்று மொழியில் பேசியிருக்கிறார்கள். இது ஒரு அறிய முடியாத ஒன்று. வாயிலும் மூக்கிலும் ஊசிகளை குத்திக்கொண்டு, வலி தெரியாமல் ஆடுவதும் ஒருவர் ட்ரான்ஸ் என்கிற நிலையை அடைவதால் ஏற்படுகிறது. அதைத்தான் சாமியாடுவது என்கிறார்கள். இது வெளி நாடுகளில் நிச்சயம் இருக்கிறது. இந்த டாக்டர் அறியாமல் சொல்கிறார். பென்டகோஸ்டல் சர்ச்களில் சாமியாடுவார்கள். தென் அமெரிக்காவில் நிறைய இந்த மாதிரி நடக்கிறது. முழுவதும் இறந்தவன் மாதிரி ஒருவனை செய்ய முடியும். ஆனால் உயிரி பெற்று எழுவான். சிலர் மண்ணுக்குள் தங்களை புதைத்துக் கொண்டு பல நாட்களுக்கு இருப்பார்கள். இதெல்லாம் கட்டுக்கதை என்று கிறித்துவ ஆதிக்கம் அடைந்த நாடுகளில் அமுக்கி வைத்திருக்கிறார்கள். நமது நாட்டில் முன்னேற்றம் என்றால் கிறித்துவ நாடுகளின் நிலையை அடைவதை எண்ணுகிறார்கள். மிகவும் ஆழ்ந்த தியான நிலையில் ஒருவரால் முன் பிறப்புக்களை அறிய முடியும். அவர்களால் இறந்தவர்கள் உலகத்திலும் சஞ்சாரம் செய்ய முடியும். அதை பற்றி அவர்கள் மற்றவர்களிடம் பேசுவதில்லை. என்னல்லாமோ இருக்கிறது. அதுவும் ஒரு வகை விஞ்ஞானம்தான். ஆனால் அதை மட்டம் தட்டினால் முன்னேறி விட்டோம் என்கிற எண்ணத்தை வளர்த்து வருகிறார்கள். அதிசயமான உலகம் இது. இந்த மாதிரி இருந்தால்தான் பகுத்தறிவு என்பது மடமை.

 • Vasudevan Jayaraman - Chennai,இந்தியா

  மௌனமே மாமருந்து

 • jysen - Madurai,இந்தியா

  He is a naive doctor who doesn't know the mystery of the world. There are things which defy the doctor and medicine.

 • Nagercoil Suresh - India,இந்தியா

  ஆவிகள் இல்லை என்பது தவறு, ஒரு முறை ஒரு 8 ஆம் வகுப்பு வரை படித்த கிராமத்து பெண்ணுக்கு பேய் பிடித்துவிட்டது அப்போது அவர் ஆங்கிலேயர் பேசும் அதே அக்ஸ்ன்ட்டில் பின்னி தள்ளிக் கொண்டிருந்தார் இதை அறிந்து அவர் எதிரே அமெரிக்காவிலிருந்து வந்த ஒருவர் அந்த பெண்ணை பார்ப்பதற்காக வந்தார் திடீரென அவருடைய முன்னாள் காதலியை குறித்து புட்டு புட்டு பிரெஞ்சு மொழியில் வைத்தது, பார்க்க வந்தவர் தலை குனிந்து நழுவி விட்டார், தமிழ் பேப்பரை வாங்கி ஆங்கிலத்தில் படித்தது அது எப்படி மருத்துவரே? மருத்துவர் கூறுவதுபோல் பல்வேறு காரணங்களுக்காக மன உளைச்சலில் உள்ள பெண்களையும், ஆண்களையும் அதிகம் பிடிப்பது வழக்கம்...விலங்குகளுக்கு தெரியுமாம் ஆனால் மனிதர்களின் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது...படைப்பின் ரகசியத்தை மனிதர்களால் அறிய முடிவதில்லை...அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயாக தெரியும் என்பார்கள்...

 • oce -

  இவரது ஆய்வுகள் மனோ ரீதியானவை. ஆயுள் முடிவடையாமல் அதாவது ப்ரி மெச்சூர் டெத் ஆனவர்கள் ஆவிகள் உலகம் முழுவதும் அவரவர் ஜாதக ரீதியான பிறப்பின் குணாதசியங்களுக்கு ஏற்ப வகுத்து வைத்துள்ள ஆயுள் முடிவு வரை பேய்களாகவும் பிசாசுகளாகவும் பூத கணங்களாகவும் இரவு நேரத்தில் உலா வரும். மனிதரின் வாழ்க்கை பகல் என்றால் அவைகள் வாழ்க்கை இரவுகளாம்.

 • சி. முத்துக்குமரன் -

  டாக்டர் பரந்தாமன் சேதுபதி அவர்களின் இந்த ஆய்வு மற்றும் கருத்து சரி.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement