Advertisement

இளஸ் மனஸ்! (53)

Share

அன்பு பிளாரன்ஸ்...
என் வயது, 36; இல்லத்தரசியாக இருக்கிறேன். கணவர் பலசரக்கு கடை நடத்திவருகிறார். அதிகாலையில் கடையை திறந்து, இரவு, 11:00 மணிக்கு மூடி வீடு திரும்புவார். மதிய சாப்பாட்டை கடைக்கு கொடுத்து விடுவேன்.
ஒரே மகள், 8ம் வகுப்பு படிக்கிறாள். எதையும் மிகைபடுத்தி பேசுவாள்.
'எங்க மிஸ்ஸுக்கு தரை வரை நீண்ட கூந்தல்...' என்பாள். நேரில் பார்த்தால், எலிவால் போல் அரையடி தான் இருக்கும்.
'ஸ்கூலுக்கு பக்கத்துல பெரிய ஆக்ஸிடென்ட்; ஸ்பாட்லயே, 20 பேர் அவுட்...' என்பாள். பதைபதைத்து விசாரித்தால், யாருக்கும் காயம் கூட இல்லாத சிறு விபத்து என்ற உண்மை தெரியவரும்.
மிகை பேச்சுடன் சரளமாக பொய்களையும் அள்ளி வீசுவாள்.
-'என் தாத்தாவுக்கு மூணார்ல மிகப்பெரிய தேயிலை எஸ்டேட் இருக்கு...'
'எங்கப்பாவிடம் மூணு கார் இருக்கு...'
'எங்க சித்தப்பா தேக்கடில இருக்கார்; சொந்தமா வீட்ல யானை வளக்கிறாரு...'
- இப்படி, வகை வகையாய் அள்ளி விடுவாள். பள்ளி தோழியர், 'டூப் மாஸ்ட்டி' என்று பட்டம் கொடுத்து, கிண்டல் செய்தும் உறைக்கவில்லை.
சாமி படத்தின் முன் நிறுத்தி, 'இனி, மிகையாகேவா, பொய்யாவோ பேச மாட்டேன்' என, சத்தியம் வாங்கினேன். பின்னரும் பொய்களை குவிக்கிறாள். இது எதிர்காலத்தில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற பயத்தால் வாடுகிறேன். இதை தடுக்க என்ன செய்யலாம்; எனக்கு ஒரு வழி சொல்லுங்க.

மகளின் மிகை பேச்சைக் கண்டு அதிர்ந்து நிற்கும் அம்மா,
மிகையாக பேசுதல், எழுதுதல் எல்லாம், கவிதை, கதைக்கு உகந்த அழகு; வாழ்க்கைக்கு கேடு. பொய் பேசுபவர்களில், இருவகையினர் உண்டு. முதல்வகை, எப்போதாவது அதுவும் நம்பும்படி பொய் பேசுவர். இரண்டாவது வகை, வார்த்தைக்கு வார்த்தை பொய்; பிறர் நம்புவரா என்பதை பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை.
பொதுவாக, பொய் பேசுபவர்களுக்கு கற்பனை சக்தியும், தாழ்வு மனப்பான்மையும் மிக அதிகமாக இருக்கும். ஒன்று ஆயிரம் குட்டிகளை போடும். பொய் பேச ஞாபகசக்தி அபாரமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், அப்பட்டமாகி தலைகுனிவை ஏற்படுத்திவிடும்.
மகளை அழைத்து வாஞ்சையுடன் பேசி, பக்குவமாக எடுத்துச் சொல்லுங்கள். தெளிவு பெற அறிவுரையுங்கள்.
இனி வரும் பகுதியை, அவளிடம் படிக்க கொடுங்கள்.

மிகையில் மகிழும் அன்பு மகளே...
பொய் பேசுதல் அரசியல்வாதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் வருமானத்தை தரும். மிகையும், பொய் பேசுதலும் உடனடி பிரமிப்பை ஏற்படுத்தும். ஆனால், அலசி ஆராயும் போது, தீராத அவமானத்தையும், இழிவையும் பரிசாக அளிக்கும்.
நொடிநேரத்துக்கு பிரமிப்பு தேவையா... நாம் சாமானியர்கள் என்ற உண்மை, பள்ளி தோழியருக்கு தெரிவதில் எந்த ஆபத்தும் இல்லை. நீ உண்மையானவள், புத்திசாலி, ஆசிரியைக்கும், சக மாணவியருக்கும் மரியாதை தருபவள்... என்ற இமேஜ் கிடைத்தால் போதும். அதுவே உனக்கான தங்க பதக்கம். 'பொய்க்காரி' என்கிற செய்தி பரவிவிட்டால், நீ சொல்லும் உண்மைகளை கூட யாரும் நம்பமாட்டார்கள்.
தாத்தா எஸ்டேட் ஓனராய் இருந்தால் என்ன... பெரியப்பாவிடம் யானை இருந்தால் என்ன... இவற்றால், உன் தோழியருக்கு என்ன லாபம்.
கடினமாக உழைத்து முன்னேறினால், ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியருக்கு முன்மாதிரியாக திகழ்வாய். இந்த உலகத்தில் வாழ்வது ஒரு முறைதான்; எனவே நன்மைகளை நாடி அர்த்தப்பூர்வமாக வாழ பழகு.
நினைத்ததை எல்லாம் பேசும் வாய்க்கு பூட்டு போடு மகளே...
கோடீஸ்வரர் என, வாய் பந்தல் போடவும் வேண்டாம்; பரம ஏழை என சுயபச்சாதாபம் பாடவும் வேண்டாம். காந்திஜி எழுதியுள்ள, 'சத்தியசோதனை' என்ற நுாலைப் படி. உண்மை எவ்வளவு உயர்வானது என்பது விளங்கும்.
எளிமையும், வாய்மையும் மேன்மை யானவை; கற்றலும், தொடர் உழைப்பும் நிரந்தர வெற்றியைத் தருபவை; இவற்றை மனதில் கொள் மகளே. உண்மைகளால் உன் வாழ்க்கை ஜொலிக்கட்டும்.
- என்றென்றும் அன்புடன், பிளாரன்ஸ்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement