Advertisement

அதிமேதாவி அங்குராசு!

Share

மின்னலும் விமானமும்!
மேகங்களுக்கு மேலே பறக்கிறது விமானம். வான்பரப்பின் முதல் அடுக்கான, 'டிரபோஸ்பியர்' பகுதியில் இயற்கையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
இடி, மின்னல் மற்றும் மழை தரும் மேகங்கள் இந்த அடுக்கில் தான் உள்ளன. இதற்கு மேலே உள்ள, 'ஸ்ட்ரட்டோஸ்பியர்' என்ற அடுக்கு பகுதியில், விமானம் பறக்கும். அங்கு வானிலை மாற்றங்களால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. தரையிறங்கும் போதும், முதல் அடுக்கை கடந்துதான் வர வேண்டும். அப்போது, இடி, மின்னல் விமானத்தை தாக்கும் வாய்ப்பு உண்டு.
அப்படி தாக்கினால், சமாளிக்கும் விதத்தை பார்ப்போம்.
மின்னலின் போது வெட்ட வெளியில் நிற்பதை விட, காரில் இருப்பது பாதுகாப்பானது. விஞ்ஞானி பாரடே விளைவுப்படி, மூடப்பட்ட உலோக சுற்றின் வழியே பாயும் மின்னோட்டம், அதன் உட்புறத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.
மின்னல் என்பது, ஒரு மேக கூட்டத்தில் இருந்து இன்னொரு மேக கூட்டத்திற்கோ அல்லது தரைக்கோ பாயக்கூடியது. குறுகிய காலத்தில் அதிக மின்சாரம் பாயும் போது, விமானம் முழுவதும் மின்சக்தி நிலை பெறும். ஆனால், விமான பாகங்களுக்கு இடையே மின்சாரம் பாய்வதில்லை.
விமானம் என்பது மூடப்பட்ட உலோகம். அதன் புறச்சுற்றின் வழியாகத்தான் மின்னோட்டம் பாயும். இதனால் உள்ளே இருப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படுவதில்லை.
விமானத்தை சுற்றி பாயும் மின்னோட்டம், பூமிக்குள் செல்ல வழி இல்லாத காரணத்தால், காற்றில் கலந்துவிடும். அதனால், மின்னோட்டம் பாய்ந்து வெளியேறும் பகுதி மட்டும் சற்றே பாதிப்படையும். பெரிய ஆபத்து எதுவும் இருக்காது.
விமானம் வேகமாக செல்லும்போது, காற்றின் உராய்வினால், 'ஸ்டேட்டிக்' என்ற நிலை மின்னோட்டம் உருவாகும். அதனால், விமானத்தில் அனைத்துப் பகுதிகளையும் மின் கடத்தியால் இணைத்திருப்பர்.
அப்போதுதான், விமானம் முழுவதும், ஒரே மின் சக்தி நிலையாக செயல்படும். அதற்கேற்ப, விமானத்தில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள, 'ஸ்டேட்டிக் டிஸ்சார்ஜ்' என்ற கூர் பொருள் மின்சாரத்தை வெளியேற்றும். அப்போது அந்த கூர் பொருள் பாதிப்படைய வாய்ப்பு உண்டு. விமானப்பொறியாளர் அதை உடனடியாக கவனித்து, சீரமைப்பு பணிகளை செய்வார்.
குறிப்பாக, விமானம் தரை இறங்கிய பின், நிலை மின்சாரம் பல வழிகளில் தரைக்கு கடத்தப்படும். அதற்காக, விமான டயர்களில் கார்பன் கலந்து இருப்பர்.
மின்னல் காரணமாக, விமானங்கள் பழுதடைய வாய்ப்பு இல்லை. அதனால், விமானத்தில் பறக்கும் போது மின்னல் தாக்கி விடுமோ என்று பயப்படவேண்டிய அவசியமில்லை.

நாலுகால் அன்பு!
மனிதனுக்கு தோழனாகவும், காவலனாகவும் விளங்குகிறது நாய்!
'வாலைக் குழைத்து வரும் நாய்தான் அது மனிதர்க்குத் தோழனடி பாப்பா...' என, உணர்ந்து பாடியுள்ளார் மகாகவி பாரதி.
அறிவுத் திறனுள்ள உயிரினம் நாய்! அதன் புலன்கள் கூர்மையானவை. மோப்ப சக்தியையும், செவித்திறனையும், வேலைத்திறனையும், நன்றியையும் உணர்ந்து வெளிப்படுத்தும்.
ஜெர்மன் ஷெப்பர்டு, பாக்ஸர், பக், பொமரேனியன், ராஜபாளையம் உள்ளிட்ட பல இனங்கள் உள்ளன. நாய்கள் கேட்கும் திறனும் மேம்பட்டது. தனிப்பயிற்சி தந்தால் அபாரமான செயல்களை செய்யும்.
மறைத்து வைக்கும் போதை பொருட்கள், கடத்தல் பொருட்கள், வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க, காவல் துறைக்கு உதவுகிறது.
பனிக் குவியலுக்குள் புதையுண்டு கிடப்பவர்களையும், இடிபாடுகளில் சிக்கியவர்களையும் கண்டுபிடிக்க உதவுகிறது. அன்பும், கடமையும், விசுவாசமும் கொண்ட நாய்க்கு இணையாக உலகில் வேறு எந்த விலங்கும் இல்லை.
- என்னெறும் அன்புடன், அங்குராசு.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement