Advertisement

ஊரடங்கு தந்த வாழ்க்கை முறை மாற்றங்கள்

Share

இந்த ஊரடங்கு நமக்கு வாழ்க்கை முறை மாற்றங்களை கற்று கொடுத்திருக்கிறது. நம் நடைமுறை பழக்க வழக்கங்கள், உணவு பழக்கங்களை ஆரோக்கியத்திற்கேற்றவாறு மாற்றிக் கொண்டு பின் அதையே வாழ்நாள் முழுவதும் பின்பற்றுவதே வாழ்க்கை முறை மாற்றங்கள். நமக்கு வரும் ஒவ்வொரு நோயும் இந்த வாழ்க்கை முறையை ஒட்டி தான் வருகிறது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், ஆஸ்துமா, கேன்சர், குழந்தையின்மை, மாதவிடாய் கோளாறுகள், மூட்டுவலி தொந்தரவு, வாயு கோளாறு, ரத்த சோகை, மாரடைப்பு, பக்கவாதம், மெனோபாஸ் தொந்தரவுகள், கல்லீரல், சிறுநீரக கோளாறுகள், PCOD என்ற நீர்கட்டி பிரச்னைகள்.... இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

இத்தனை நோய்களையும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் தடுக்கவும், சரி செய்யவும் முடியும்.

வரும் முன் காப்பதே முக்கியம்நாம் செய்யும் வேலை, எடுத்துக் கொள்ளும் உணவு, எப்படி ஓய்வு நேரத்தை செலவு செய்கிறோம், குடும்பத்தினருடனான நெருக்கம் இவை எல்லாம் தான் வாழ்க்கை முறையை தீர்மானிக்கின்றன.

உணவுப்பழக்கம்கட்டாயம் தவிர்க்க வேண்டியவை கொழுப்பு மிக்க மற்றும் துரித உணவுகள். ருசிக்காக இவற்றில் அதிக உப்பு, சர்க்கரை, கொழுப்பு மற்றும் தேவையற்ற ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இவற்றால் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் அதிகம். ஊரடங்கால் சில மாதங்களாக நல்ல வீட்டு சாப்பாடு சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். ஜங்க் புட் சாப்பிடாமல் நாம் என்ன குறைந்தா போய் விட்டோம். நிச்சயமாக நம் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் இருக்கும்.

உடல் பருமன் பெரிய பிரச்னைஎடை கூடுவது வெகு சீக்கிரமே வந்து விடும். குறைப்பது தான் கஷ்டம். உடல் பருமன் உள்ளவர்களுக்கு சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு, PCOD எல்லாம் வரும். ஆரம்பத்திலேயே நல்ல உணவு பழக்கங்களை பின் பற்றினால் இந்த ஆபத்திலிருந்து தப்பிக்கலாம்.

எப்படி சாப்பிட வேண்டும்எடுத்தவுடன் சாதத்தில் கை வைக்க வேண்டாம். முதலில் ஏதேனும் சூப், பின் காய்கறிகள் அடுத்து சாதம் என பழகுங்கள். 'நாற்பதிற்கு பிறகு தட்டை திருப்பி போட்டு சாப்பிடு 'என்று ஒரு பழமொழி உண்டு. என்ன அர்த்தம் தெரியுமா? சாதாரணமாக தட்டில் நம் பக்கம் சாதம் எதிர் புறம் கொஞ்சமாக காய் கூட்டு இருக்கும் அல்லவா. திருப்பி போட்டால் நம் பக்கம் காய் கறிகள் அதிகமாகவும் சாதம் குறைவாகவும் இருக்கும்.
வளர்இளம் பெண்கள் ரத்த சோகை வராமல் இருக்க இரும்பு சத்து உள்ள கீரைவகைகள், பீட்ரூட், பேரீச்சை, வெல்லம், சோயா, இஞ்சி, நெல்லிக்காய், வேர்க் கடலை, எலுமிச்சை சாப்பிடுவது நல்லது.

உடற் பயிற்சிஐயோ... எனக்கு நேரமே இல்லை என புலம்புவர்கள் அதிகம். என் ஆரோக்கியத்திற்காக நான் நடை பயிற்சி செய்து தான் ஆக வேண்டும் என்று மனதில் தீர்மானம் இருந்தால் அரை மணி முன்னதாக எழுந்து வேலையை சீக்கிரம் முடித்தால் நேரம் நம் கையில். நடை பயிற்சியுடன் எளிய உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். வாரத்தில் 150 நிமிடம் வேகமான நடைபயிற்சி அவசியம்.

மன அழுத்தம் குறையபாட்டு, இசை, கவிதை, சமையல் என்று ஊரடங்கு நேரத்திலும் மக்கள் திறமைகளை வெளிப்படுத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். நிறைய பேர் தியானம், யோகா செய்ய ஆரம்பித்தனர்.நமக்கு தெரிந்த பிரார்த்தனை, ஸ்லோகங்கள் சொல்ல ஆரம்பித்தோம். இவற்றை ஊரடங்கிற்கு பிறகும் நம் தினசரி செயல்களில் சேர்த்து கொண்டால் மனசு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.கொரோனா கற்று தந்த கை, கால் கழுவும் பழக்கத்தையம் மறக்க வேண்டாம். எனவே இவை எல்லாவற்றையும் தொடர்கதையாக, நம் வாழ்க்கை முறை மாற்றமாக ஏற்படுத்திக் கொள்வோம். நலமாக வாழ்வோம்.

- டாக்டர். ரேவதி ஜானகிராம்
மகப்பேறு மருத்துவர்,
மதுரை.
94430 40355

Share
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Selva Kumar - abiramam,இந்தியா

    தரமான பதிவு நன்றி

  • Rameeparithi - Bangalore,இந்தியா

    மாற்றம் மகிழ்ச்சி தரட்டும் ...

  • SAPERE AUDE -

    "ஊரடங்கு தந்த வாழ்க்கை நெறிமுறைகளை" வாசகர்களுக்கு அளித்ததற்கு மிக்க நன்றி அம்மணி.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement