Advertisement

பசுமை புரட்சியால் பட்டினியை விரட்டியவர்!

உலகில் வேளாண் உற்பத்தியை பெருக்கி, பசிபிணி போக்கிய சாதனை விஞ்ஞானி, மான்கொம்பு சாம்பசிவம் சுவாமிநாதன். சுருக்கமாக, எம்.எஸ்.சுவாமிநாதன் என்பர். விவசாயத்தில் நவீனத்தை புகுத்தி, பசுமை புரட்சியால், நம் நாட்டில் பட்டினியை ஒழித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், ஆகஸ்ட் 7, 1925ல் பிறந்தார். அங்கேயே பள்ளி படிப்பை முடித்தார். கோவை, வேளாண் கல்லுாரியில் பட்டம் பெற்றார்.
ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் உள்ள லண்டன், கேம்பிரிட்ஜ் பல்கலையில் ஆய்வு செய்து, டாக்டர் பட்டம் பெற்றார்.
தானிய உற்பத்தியில், 1950 வரை, இந்தியா தன்னிறைவு பெற்றிருக்கவில்லை. கடும் உணவு பற்றாக்குறை நிலவியது. சுதந்திர இந்தியாவில் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் வாடினர் மக்கள்.
இந்த நிலையில், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன இயக்குநராக, 1961ல், இவரை பணியமர்த்தியது மத்திய அரசு. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறும் வகையில் கடுமையாக உழைத்தார். அயராத முயற்சிகளால், உணவு உற்பத்தியில் படிப்படியாக முன்னேறி தன்னிறைவு பெற்றது நம் நாடு. பசி, பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை குறைந்தது.
அரிசி, கோதுமை, பார்லி, மக்கா சோளம், சணல், எண்ணெய் வித்து பயிர்களில் கலப்பின ரகங்களை உருவாக்கினார். இவற்றை, விவசாயிகளிடையே பரவலாக்கினார். உயர் விளைச்சல் ரகங்களால், தானிய உற்பத்தி பன்மடங்கு பெருகியது. பட்டினியின் கோரப்பிடி விலகியது.
அறிவியல் பூர்வ அணுகுமுறைகளால், இந்திய வேளாண் துறையை உலகப் புகழ்பெற செய்தார். விவசாயி - விஞ்ஞானி இடையே நல்லுறவை ஏற்படுத்தினார். பசுமை புரட்சி இயக்கத்தை வெற்றிப் பாதையில் நடத்தி, உணவு தானிய பெருக்கத்துக்கு அடித்தளமிட்டார்.
வேளாண் உற்பத்தியில், பெண்கள் பங்கேற்பதை ஊக்குவித்து வருகிறார். பயிற்சிகளால் திறனை மேம்படுத்த அயராது பாடுபட்டு வருகிறார். இந்த முயற்சியை பாராட்டி, சர்வதேச மகளிர் மேம்பாட்டு சங்கம், விருது வழங்கி கவுரவித்துள்ளது.
உலக மக்களின் பசிபிணி போக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, ஐக்கிய நாடுகள் சபை, அறிவியல் ஆலோசனைக் குழு தலைவராக, 1980ல் பொறுப்பு வகித்தார். உலகம் முழுவதும் உணவுப் பற்றக்குறையை போக்குவதில் பெரும்பங்காற்றினார்.
இயற்கை மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் சர்வதேச ஒன்றிய தலைவராக பொறுப்பேற்று, அரும் பணிகளை ஆற்றியுள்ளார். தேசிய வேளாண் அறிவியல் அகாடமி, தேசிய விவசாயிகள் ஆணையம் போன்ற அமைப்புகளின் தலைமை பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
ஆசிய நாடான பிலிப்பைன்சில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில், டைரக்டர் ஜெனரல் என்ற உயரிய பொறுப்பு வகித்து சிறப்பாக பணிபுரிந்தார். அப்போது உயர்விளைச்சல் தரும் கலப்பின நெல் பயிர் ரகங்கள் பலவற்றை உருவாக்கினார்.
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பிரபலமான, 'டைம்ஸ்' இதழ், 20ம் நுாற்றாண்டின் உலகில் செல்வாக்கு மிக்க, 20 ஆளுமைகளில் ஒருவராக தேர்வு செய்து, அவர் புகழை பரப்பியது. ஐக்கிய நாடுகள் சபை, 'சூழலியல் பொருளாதாரத்தின் தந்தை' என்று வர்ணித்து கவுரவித்தது. ஐரோப்பிய நாடான சுவீடனில் உள்ள விதைக்கழகம், உயர்ந்த பதவி கொடுத்து கவுரவித்தது.
உணவு உற்பத்தியை பெருக்கியதற்காக, 'மகசேசே' விருது கிடைத்தது. இந்திய அரசு 1967ல், 'பத்மஸ்ரீ' விருதும், 1972ல், 'பத்மபூஷன்' விருதும் வழங்கி சிறப்பித்தது. இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கழகம், 'சாந்தி ஸ்வரூப் பட்நகர்' என்ற விருது வழங்கி சிறப்பித்தது. இந்திய தாவரவியல் சங்கம், 'பீர்பால் சகானி' என்ற பதக்கம் வழங்கி பாராட்டியது.
இங்கிலாந்தில் உள்ள லண்டன் ராயல் சங்கம், அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி உள்ளிட்ட உலகின் உயர்ந்த அறிவியல் அமைப்புகள், சுவாமிநாதனை கவுரவ உறுப்பினராக போற்றி வருகின்றன. உலகில் பல பல்கலை கழகங்கள், 84 கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன. சென்னை, தரமணியில், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் என்ற வேளாண் அமைப்பை நிறுவி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

பசியை உணர்ந்தால் உற்பத்தி பெருகும்!'சிறுவர்மலர்' வாசகர் கேள்விகளுக்கு, சுவாமிநாதன் தந்த, 'பளிச்' பதில்:

உங்கள் இளமைப் பருவம் பற்றி...
இளம் வயதில், பஞ்சம் மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டேன். அனைவருக்கும் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என விரும்பினேன். அந்த வகையில், விவசாய உற்பத்தியை பெருக்கும் துறையை தேர்ந்தெடுத்து படித்து, பணியாற்றி, சாதிக்க முடிவு செய்தேன்.

விவசாயம் பற்றி...
உணவுப் பற்றாக்குறையால் ஏற்படுகிறது பஞ்சம். அது பெரும் தீங்கு. சுதந்திரத்துக்கு முன், இந்தியாவின் கிழக்கு பகுதியான வங்காளத்தில், பெரும் பஞ்சம் தலைவிரித்தாடியது; கடுமையாக பாதிக்கப்பட்டனர் மக்கள்.
உணவு உற்பத்தி பெருக்கமே, பஞ்சத்தையும், பசிபிணியையும் தீர்க்கும் அருமருந்து. பசிக்கொடுமையை உணர்ந்தால், விவசாயத்தின் மதிப்பை அறியலாம். நிலையான உற்பத்தி, ஊட்டச்சத்துக்கு உத்தரவாதம்.

வேளாண்மை கல்வி பற்றி...
இயற்கையை நேசிக்க வேண்டும். வயல்வெளிக்கு செல்ல வேண்டும். பயிர் வளர்ச்சியை கூர்ந்து கவனித்து, பணிகள் செய்ய வேண்டும். ஆய்வகத்தில் மட்டும், விவசாயத்தைக் கற்க முடியாது.

சூழல் என்பது என்ன...
சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்கள், நிலச் சூழலை, ஐந்தாக பிரித்து விவரித்துள்ளனர். அவை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பனவாகும். இந்த அடிப்படையில் விவசாய சூழலை அறிந்து கொள்ளலாம். அவற்றின் மீதான தாக்கத்தை கவனமாக கற்கலாம்.

உணவு உற்பத்தி பெருக...
விவசாயத்தை லாப நோக்கத்துடன் பார்க்க வேண்டும். அதை அடைய பொருத்தமான தொழில்நுட்பத்தை புகுத்த வேண்டும்.

பசுமை புரட்சி பற்றி..
உற்பத்தித்திறனை மேம்படுத்திய மாற்றுச்சொல் தான் பசுமை புரட்சி. தொழில் நுட்ப வளர்ச்சியாலும், அரசின் கொள்கையாலும் வென்றது. இலக்கை அடைய பருவமழையும், சந்தை படுத்தலும் முக்கிய காரணியாக விளங்கின.

பயிர்த் தொழிலை அறிய...
கிராம மக்களுடன் பழகுவதால் பாரம்பரிய வேளாண் அறிவை பெறலாம். அவர்களுடன் கலந்துரையாடினால், பயிர் வளர்ச்சி பற்றிய புரிதல் அதிகரிக்கும்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா

    பசுமை புரட்சி நாட்டின் அத்தியாவசிய தேவை அதற்கு தீர்வை அமைத்திட்ட வீரர் ஸ்வாமிநாதன் ஐயா அவர்கள் பசி பற்றாக்குறை போக்கிய உற்பத்தியை பெருக்கிட பாடுபட்ட பெருமைக்குரியர் இவரே. அயல் நாட்டிற்கு சென்று டாக்டர் பட்டம் படித்தும் நம் இந்திய நாட்டின் தன்னிறைவை கருத்தில் கொண்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு நம் நாட்டின் நலனுக்கு பாடுபட்டு தொழில்நுட்பத்தை புகுத்தினார். இவரை என் மகனுக்கு அறிமுகப்படுத்தி வைத்து அவரை பற்றி சொல்ல ஒரு தூண்டுகோலாய் அமைந்த சிறுவர் மலருக்கு நன்றி நன்றி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement