Load Image
Advertisement

தூய்மையே முக்கியம்!

கொரோனா தொடர்பான பொதுவான சந்தேகங்களை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் முன்பு வைத்தோம். அவருடைய பதில்கள் இதோ:

இந்த வைரஸ் எந்த உயிரில் இருந்து தொற்றியது என்பது கண்டறியப்பட்டுவிட்டதா?
இல்லை. இது பழந்தின்னி வெளவால்களில் இருந்து வந்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. இருப்பினும் சீனாவில் வூஹான் நகரில் முதன்முதலில் தோன்றிய கொரோனா பாதிப்புக்கு இது தான் காரணம் என்று தெளிவாகக்கூற இயலவில்லை.

கொரோனா வைரஸ் உடலில் தொற்றியதிலிருந்து, அறிகுறிகள் வெளியே தெரிவதற்கு எவ்வளவு காலம் ஆகும்?
ஏறத்தாழ இரண்டு வாரங்கள் ஆகும். நோய் தொற்றிய நாளில் அறிகுறிகள் தெரியவில்லையாயினும், பெரும்பாலானவர்களுக்கு ஏழாவது அல்லது எட்டாவது நாளில் இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்படுகின்றன.

கொரோனா வைரஸ் எத்தனை நாட்கள் உடலில் இருக்கும்?
தெளிவாகத் தெரியவில்லை. நோய்க்காகச் சிகிச்சை பெற்று குணமடைந்த சிலரில், குணமடைந்த பிறகு இரண்டு வாரங்களுக்கு வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, இது இரண்டாவது முறை ஏற்பட்ட தொற்றினால் வைரஸ் இருக்கிறதா அல்லது முதன்முறை தொற்றிய வைரஸின் அளவே தொடர்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

யார் சூப்பர் ஸ்ப்ரெட்டர்?
நோய் அறிகுறி இல்லாதவர்களிடம் இருந்தே நோய் பரவுகிறது. அவர்களிடம் வைரஸ் இருக்கிறது. அப்படிப்பட்டவர்களை 'சூப்பர் ஸ்ப்ரெட்டர்' என்று அழைக்கிறார்கள்.

வெயில் அதிகம் இருந்தா வைரஸ் செத்துவிடும். அதனால என் ஊரில் வராது. இது சரியா?
சரி இல்லை. மனித உடலின் வெப்பநிலை சீரானது. எனவே, வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவும்போது, வெளியில் இருக்கும் வெப்பநிலை, அதைத் தீர்மானிப்பதில்லை.

வயசானவங்களை மட்டும்தான் கொரோனா தாக்குது. இளைஞர்களை அல்ல. சரியா?
இளைஞர்களையும் குழந்தைகளையும்கூட தாக்குகிறது. ஆனால், குழந்தைகளுக்கு வைரஸ் தாக்கினாலும் நோய் அறிகுறிகள் வெகு சிலருக்கே ஏற்படுகிறது. வயதானவர்களுக்கு வேறு நோய்கள், வேறு கோளாறுகள் காரணமாக, கொரோனா பாதிப்பின் தீவிரம் அதிகமாகிறது.
கை கொடுத்தால் மட்டும் பரவும். யாருக்கும் கைகொடுக்க மாட்டேன். எனக்குப் பிரச்னை இல்லை.
அப்படிச் சொல்ல முடியாது. ஒருவருடைய உடலில் இருந்து வெளிப்படும் வைரஸ் பக்கத்தில் இருக்கும் பொருட்களின் மீது படிந்திருக்கலாம். அந்தப் பொருட்களை நாம் தொடும்போது, அந்தப் பொருட்களின் வழியாக நம்மிடம் ஒட்டிக்கொள்ளும். கை கொடுப்பதற்குப் பதில் 'வணக்கம்' சொல்லுங்கள்.

கை கழுவாமல் சாதம் சாப்பிட்டு, அதன் வழியாக வைரஸ் வயிற்றுக்குப் போனால் என்ன ஆகும்?
பொதுவாக வைரஸ்கள் இரைப்பையில் சுரக்கிற அமிலத்தால் அழிக்கப்படும். இருப்பினும் ஒரு சில நேரங்களில், உணவு அல்லது உணவுத் தடம் வழியாகவும் இந்த வைரஸ் பரவக்கூடும். பாதிக்கப்பட்ட சிலருடைய உணவுத்தடத்திலும் அவர்களுடைய மலத்திலும் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முழுமையாக நமக்குத் தெரியவில்லை.

இது காற்றில் பரவுமா?
வெகு குறைவு. மூன்றடி தள்ளியிருந்தால், நோயாளியிடம் இருந்து வருகிற எச்சில் துளிகள் கீழே விழுந்துவிடுகின்றன.

மாஸ்க் அணிய வேண்டுமா?
நோயால் பாதிக்கப்பட்டவர்களை மட்டுமே மாஸ்க் அணியச் சொல்கிறோம். எல்லோரும் மாஸ்க் அணிந்துகொண்டால், அது தேவையானவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடும்.

கை கழுவுவதில் கவனம் குறைய அதிக வாய்ப்பிருக்கிறதே, என்ன செய்யலாம்?
கை கழுவியே தீர வேண்டும்.

கொரோனா மற்ற வைரஸ் நோயிடமிருந்து எதனால் வித்தியாசப்படுகிறது?
இதனுடைய பாதிப்பு வெகு விரைவாகவும் தீவிரமாகவும் நுரையீரலைப் பாதிக்கிறது. அதனால், ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

கொரோனா கொள்ளை நோயால் இறந்தவர்கள் உடலில் அந்தக் கிருமி எத்தனை மணி நேரம் உயிருடன் இருக்கும்?
அவருடைய இறப்பில் இருந்து ஓரிரு மணிநேரங்களிலேயே இந்தக் கிருமியும் அழிந்துவிடும்.

கொள்ளைக் கிருமி, இரும்பு, காப்பர், காட்டன், பிளாஸ்டிக் போன்றவற்றில் பல மணிநேரம் உயிருடன் இருப்பதாகப் படித்தேன். அப்படியெனில், மரத்தாலான பொருட்களான மேஜை, நாற்காலியில் தொற்றாதா, உயிர் வாழ முடியாதா?
பிளாஸ்டிக், துணி போன்றவற்றில் இருக்கும் நேரத்தைவிட, மரப்பொருட்களில் அது படிந்ததும் உயிர் வாழ்வதற்கான நேரம் குறைவு. இருப்பினும் மேஜை, நாற்காலி போன்றவற்றையும் துடைத்து தூய்மையாக வைத்துக்கொள்வது அவசியம்.

நெருப்பில் குளிர்காய்ந்து, நாம் பனியை விரட்டுவது போல், நெருப்பின் அருகிலேயே நாம் உட்கார்ந்து இருந்தால், இந்நோய் நம் உடம்பில் தொற்றுவதைத் தடுக்க முடியுமா?
இல்லை. நெருப்பின் அருகில் இருந்தால் தோல் பாதிக்கப்படலாம். வேறு பாதிப்புகளும் ஏற்படலாம்.

கொள்ளை நோய் வந்த ஒருவர் தன் செல்லப் பிராணியைத் தொட்டால், அந்தப் பிராணிக்கும் இந்நோய் வர வாய்ப்பு உண்டா?
இதுவரை மனிதரில் இருந்து பிராணிக்குச் சென்றதாகக் கண்டயறியப்படவில்லை.

கொள்ளை நோயாக இருக்கும் கோவிட், ஃப்ளு போன்று ஆண்டுதோறும் வரும் பருவகால கொள்ளை (Seasonal Epidemic) நோயாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவா?
இது புதிய வைரஸ், 2019 டிசம்பரில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், எதிர்காலத்தில் இது எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

கொரோனா செயற்கையாக மரபணு பிறழ்வு செய்யப்பட்டது இல்லை என்று எப்படி உறுதியாகச் சொல்கின்றனர்?
அது பற்றியும் தெரியவில்லை.

வைரஸ் தொற்று உறுதியானவர்களுக்கு என்ன மருத்துவம் அளிக்கப்படுகிறது?
இந்த வைரஸுக்கு நேரடியான எதிர்ப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், மலேரியாவுக்குக் கொடுக்கப்படும் க்ளோரோகுவின் உட்பட வேறு சில மருந்துகள், இதன் பாதிப்பை குறைப்பதாகத் தெரிகிறது.
நோய் வந்தவர்கள், அவர்களுடைய நுரையீரலைப் பாதுகாப்பதற்கும், கூடுதலான் நீர்ச்சத்து வெளியேறாமல் தடுப்பதற்கும், காய்ச்சலைக் குறைப்பதற்குமான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

உணவில் மாற்றம் தேவையா?
தேவையில்லை. காரம் போன்றவை குறைவாகவும், உணவுத் தடத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும் இருக்க வேண்டும்.
இந்த இதழுக்கு மருத்துவர்களையும் ஆய்வாளர்களையும் ஒருங்கிணைத்து உதவிய டாக்டர் சுதா சேஷய்யனுக்கு நன்றி!வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement