Advertisement

வைரஸ் இல்லாமல் வாழ்க்கை இல்லை!

Share

சென்னை, அண்ணா பல்கலையில், பி.டெக்., பயோடெக்னாலஜி படிப்பை முடித்து, அமெரிக்காவின், அரிசோனா மாகாண பல்கலையில், 2006 - 2012ம் ஆண்டு வரை, வைரஸ் பற்றிய ஆராய்ச்சி படிப்பை முடித்து, டாக்டர் பட்டம் பெற்றுள்ளேன். தற்போது, உலகையே அச்சுறுத்தி வரும், 'கொரோனா' வைரஸ், 120 நேனோ மீட்டர் அளவுள்ள, மிக நுண்ணிய கிருமி. இதை, சாதாரண நுண்ணோக்கியால் பார்க்க முடியாது. 2008ல், மின் நுண்ணோக்கி வழியே, 2 லட்சம் முறை இதை பெரிதாக்கி படம் பிடித்துள்ளேன்.
இது, புதிய வகை வைரஸ் கிடையாது. ஆனால், இதுவரையிலும் இந்த வைரஸ், மனிதர்களை பாதித்தது இல்லை. 'கொரோனா' வைரசில் உள்ள புரத கட்டமைப்பு, நம் உடலுக்குள் செல்லும் போது, செல்களுக்குள் அது வேலை செய்யும் விதம், எல்லா வைரசும் எப்படி செயல்படுமோ, அப்படித் தான் இருக்கிறது.
என் ஆராய்ச்சி முழுவதும், வைரசின் அமைப்பில் உள்ள புரத கட்டுமானத்தைப் பற்றியது. எல்லா வைரசிலும், இரண்டு பாகங்கள் உண்டு. ஒரு கட்டடம் கட்டும் போது, செங்கல் வைத்து சுவர் எழுப்புவது போன்றது, வைரசின் வெளிப்புறம். அதன் உள்புறம், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ., என்ற மூலக்கூறுகளால் ஆனது. வைரசின் வெளிப்புறம் முழுவதும், கிரீடம் வைத்தது போல, புரதங்கள் நீட்டிக் கொண்டிருக்கும். கொரோனா வைரசின் புரத அமைப்பிற்கு, 'என்வெலப் புரோட்டீன்' என்று பெயர். இது மிக சிறிய புரதம்.

பரிசோதனை



கொரோனாவால் பாதிப்பு உள்ளதா என்பதை அறிய, ரத்த மாதிரியை, மைக்ரோஸ்கோப்பில் வைத்து பார்ப்பதில்லை. நடைமுறையில் இருப்பது, பி.சி.ஆர்., என்ற பரிசோதனை முறை. இதில், வைரசின் உருவங்களை பார்க்க முடியாது. குறிப்பிட்ட இந்த கொரோனா வைரசில், ஆர்.என்.ஏ., இருக்கிறதா என்பதை, துல்லியமாக இப்பரிசோதனையில் தெரிந்து கொள்ள முடியும்.வைரஸ் மிகவும் புத்திசாலி. அதனுடைய நோக்கம், மனிதர்கள் உட்பட எல்லா உயிரினங்களையும் போன்று, வலிமையுடன் வாழ வேண்டும் என்பது தான். உயிர்களின் அடிப்படை விருப்பமே, வாழ வேண்டும், தங்கள் இனத்தை பெருக்க வேண்டும் என்பது தானே! அதைத்தான் வைரசும் செய்கிறது.

வைரஸ் கட்டுப்பாடு



பல வழிகளில் கட்டுப்படுத்தும் போது, வைரசின் வீரியம் குறைந்து விடுமா என்று கேட்கின்றனர். ஒரே நேரத்தில், பெரும்பாலானவர்களை பாதிக்கும் போது, மருத்துவ உதவி கிடைப்பதில் சிக்கல் வரும். சிகிச்சை செய்யும் டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு நோய் தொற்றும் அபாயம் அதிகம் உள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல், பாதிக்கப்பட்டவர்களை வைத்து பராமரிப்பது இயலாத விஷயம்.
அண்டை மாநிலத்தில், சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆகி உள்ளது. சிகிச்சை தருபவர்களுக்கே தொற்று ஏற்பட்டால், நிலைமை இன்னும் மோசமாகலாம்.அடிக்கடி கைகளை கழுவுவது, குறைந்தது, 1 மீட்டர் துாரத்தில், மற்றவர்களிடம் இருந்து தள்ளி நிற்பது, கைகளால் வாய், மூக்கு, கண்களை தொடாமல் இருப்பது போன்றவை மட்டுமே, வைரஸ் தொற்றாமல் நம்மை பாதுகாக்கும் வழிகள். சுய சுத்தத்தை பின்பற்றினால், தொற்று பரவும் விகிதம் குறையும். யாருக்கு அவசியமாக மருத்துவ உதவி தேவையோ, அவர்களுக்கு போய் சேரும்.புது புளு வைரஸ்புளு காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ், கொரோனாவைப் போன்று இருந்தாலும், அது வேறு மாதிரியான வைரஸ். பன்றிக்காய்ச்சலை உண்டாக்கும் ஹெச்1 என்1 வைரஸ், அதில் ஹெச் என்பது ஒரு புரதம்; என் என்பது இன்னொரு புரதம்.
இதில், ஹெச்1 தவிர, 2, 3, 4 என, பல வகை புரதங்கள் உள்ளன. அதே போலவே, என் வரிசையிலும். தற்போது ஹெச்1 என்1க்கு பதில், ஹெச்1, என்4 அல்லது ஹெச்3, என்2 என, வேறு வேறான இரண்டு புரதங்கள் சேர்ந்து, ஒரு வைரஸ் உருவாகி விட்டால், அது புது விதமான வைரஸ்.இப்படி புதிதாக உருவாகும் வைரஸ், சில நேரங்களில், வீரியமாக தாக்கலாம். வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பதே தெரியாமல், வீரியம் அற்றும் போகலாம். மனித இனம் இருக்கும் வரை, இரண்டு வெவ்வேறு புரதங்கள் இணைந்து, புதிய வைரஸ்கள் உருவாகிக் கொண்டே இருக்கும். வைரஸ் இல்லாமல், வாழ்க்கையே இருக்க முடியாது.
அதனால் தான், உலகம் முழுவதும் புளு தொற்றுக்கு, ஒவ்வொரு ஆண்டும், அந்தந்த பருவத்தில் வரும் தொற்றுக்கு தகுந்த மருந்து, புதிது புதிதாக வருகிறது. எந்த புதிய வைரசும், தென் துருவத்தில் உருவாகி, பாதிப்பை ஏற்படுத்தி, வட துருவத்திற்கு வரும். தென் துருவத்தில் என்ன மாதிரியான புதிய வைரஸ் உருவாகி உள்ளது என்பதை தெரிந்து, அதற்கேற்ப தடுப்பு மருந்தை தயாரிக்கின்றனர்; ஆண்டுதோறும், புளு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

முக கவசம்



முக கவசம் தேவையில்லை. அதனால், 100 சதவீதம் பாதுகாப்பு கிடையாது. பாதிக்கப் பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் டாக்டர்கள், சுகாதார பணியாளர்களுக்கு முக கவசம் தேவைப்படும். அதனால், அனாவசியமாக அனைவரும் முக கவசம் வாங்கி, தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என, சுகாதார துறையில் தொடர்ந்து அறிவுறுத்துகின்றனர். ஆனாலும், எதற்கும் இருக்கட்டும் என்று சிலர், வாங்கி வைத்துக் கொள்கின்றனர். அதை முறையாக பயன்படுத்தவும், பலருக்கு தெரிவதில்லை.
சுகாதார பணியில் இருப்பவர்களுக்கு, முககவசம் அணியும் பழக்கம் உண்டு. புதிதாக அணிபவர்கள், முக கவசத்தை போட்டவுடன், வாயில் அரிக்கும்; கண்களை கசக்க தோன்றும்; 20 ரூபாய் கொடுத்து வாங்கி விட்டோமே என, துாக்கி போட மனமில்லாமல், ஒரு நாள் பயன்படுத்தியதை அடுத்த நாளும் பயன்படுத்துகின்றனர். இப்படி செய்வதால், எந்த பலனும் இல்லை.

சீனாவில்...



கொரோனா வைரஸ், முதலில் சீனாவின் வுஹான் மாகாணத்தை தாக்கிய போது, அதற்கு, 'வுஹான் வைரஸ்' என, பெயர் வைத்திருந்தனர். சில நாட்களிலேயே, 'கோவிட் 19' என, பெயரை மாற்றிவிட்டனர். ஏன் தெரியுமா?வுஹான் வைரஸ் என்றதும், ஏதோ சீனர்களால் பரவும் வைரஸ் என தவறாக நினைத்து, சீனர்கள், யாரைப் பார்த்தாலும் அடிப்பது, திட்டுவது என்று ஆரம்பித்து விட்டனர். மற்ற நாடுகளில் இருக்கும் சீன உணவகங்களில், சீன உணவுகளை சாப்பிடலாமா என, ஆலோசனை பெறுவதும் நடந்தது.தனக்கு சாதகமான சூழல் எங்கிருக்கிறதோ, அந்த இடத்தில், வைரஸ் வீரியம் பெற்று பரவும். இதைப் புரிந்து கொள்ளாமல், சிலரை தனிமைப்படுத்த துவங்கி விட்டதால், பெயரை மாற்றி விட்டனர்.
இன்று இருக்கும் நிலையில், உலகமயமாகலுக்குப் பின், எல்லா நாட்டிலும், எல்லா நாட்டவரும் வசிக்கின்றனர். தொற்று நோய் பரவினால், இன பாகுபாடு இல்லாமல், அனைவரையும் பாதிக்கும் நிலை தான் உள்ளது. ஆரம்பித்த இடத்தை வைத்து, எந்த ஒரு இனத்தையும் தனிமைப்படுத்துவது தவறு.அருகில் இருக்கும் நம் இனத்தவர், எந்த பாதுகாப்பும் இல்லாமல், வாயை மூடாமல் இருமுகின்றனர்; தும்முகின்றனர்; நாம் அவர்களை கண்டு கொள்ளமாட்டோம். ஆனால், சற்று தள்ளி நிற்கும் சீனாக்காரர், லேசாக தொண்டையை செருமினாலே, பதற்றமாகி விடுவோம். இது தான் மனிதர்களின் மனநிலை.
இந்த சமுதாய சூழல் தான், தொற்று இருப்பது தெரிந்தால், எங்கே தன்னை தனிமைப்படுத்தி, ஏளனமாகப் பார்ப்பரோ என்ற பதற்றத்தை, சிலருக்கு தருகிறது. இத்தாலி சென்று திரும்பிய பெங்களூரு பெண், தனக்கிருக்கும் கொரோனா தொற்றை மறைத்து, டில்லி, ஆக்ரா என சென்றதற்கு, இது தான் காரணம் என்று நினைக்கிறேன். ஆனாலும், இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது.பாதிப்புஎந்த தொற்று ஏற்பட்டாலும், கர்ப்பிணிகள், குழந்தைகளை அதிகம் பாதிக்கும். புள்ளி விபரங்களை வைத்து பார்த்தால், கொரோனா வைரஸ் கர்ப்பிணிகளையும், குழந்தைகளையும் அந்த அளவு பாதிக்கவில்லை.
கொரோனா தொற்று பாதித்த, 90 சதவீதம் பேர், குணமாகி விடுகின்றனர். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், சுவாச கோளாறு, சர்க்கரை கோளாறு போன்று, நீண்ட நாட்கள் உடல் கோளாறுகளுடன் இருப்பவர்கள், அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

சுய பரிசோதனை



காய்ச்சல், இருமல், தொண்டை புண், சுவாசிப்பதில் சிரமம் போன்ற வழக்கமான தொற்று அறிகுறிகளை வைத்து, இது கொரோனா பாதிப்பு என, நாமாகவே கண்டறிவது சிரமம். அரசு அங்கீகரித்த பரிசோதனை கூடத்தில் மட்டுமே, பரிசோதனை செய்து முடிவு செய்ய வேண்டும்.
சீனர்களின் உணவுப் பழக்கம் தான் கொரோனா தொற்றுக்கு காரணம் என்று சொல்லப்படுவதிலும், அறிவியல் ரீதியிலான உண்மை இல்லை.'நிபா' வைரஸ் கேரளாவில், வவ்வால்கள் மூலம் பரவியது. அப்படியென்றால், கேரள மக்கள் வவ்வால்கள் சாப்பிடுகின்றனர் என்று அர்த்தமா? அசைவ உணவு உட்பட, சுத்தமாக சமைத்து, ஆரோக்கியமான சூழலில் சாப்பிட்டால், எந்த உணவும் ஆபத்தில்லை.மனித இனத்தை அழிக்க, சோதனை கூடத்தில் உருவாக்கப்பட்ட, 'பயோ வெப்பன்' என்று, கொரோனாவை சொல்வதையும், இதுவரையிலும் எந்த ஆராய்ச்சியும் உறுதி செய்யவில்லை.
இயற்கையில் உருவாகும் வைரசை விடவும், வலிமையான வைரசை, பரிசோதனை கூடத்தில் இதுவரை உருவாக்கவே முடிந்ததில்லை.என்னால் உறுதியாக சொல்ல முடியும்... இது, பரிசோதனை கூடத்தில் உருவாக்கப்பட்ட பயோ வெப்பன் கிடையாது; இயற்கையில் வந்த வைரஸ் தான்.

வெயில்



குளிர் காலத்தில், காற்றில் ஈரப்பதம் அதிகம் இருக்கும். இதனால், வைரசால் அதிக நேரம், வெளிப்புறத்தில் உயிர் வாழ முடியும். ஆனால், வெயில் காலத்தில், ஈரப்பதம் குறைந்த நிலையில், விரைவில் அழிந்து விடலாம். அதனால், பரவும் வேகம் சற்று குறையலாமே தவிர, வெயில் அடித்தால், வைரஸ் தொற்று பரவாது என்பதெல்லாம் உண்மை இல்லை.
கண்ணாடி பாட்டிலில் வைரசை மூடி வைத்தால், எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் அப்படியே இருக்கும். அதே வைரஸ், நம் உடலுக்குள் சென்றால், நம் செல்களின் உள் நுழைந்து, அதனுடன் சேர்ந்து, இதுவும் வளர துவங்கும். வைரசை அழிக்க மருந்து தரும் போது, அவை நம் உடலின் செல்களுக்குள் இருப்பதால், செல்களையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. மருந்துகளினால் வைரசை அழிப்பது சிக்கலான விஷயம். வைரசை அழிக்க, அதனுடன் தந்திரமாக செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால் தான், இதுவரையிலும் வைரசிற்கு மருந்து கண்டுபிடிக்க இயலவில்லை.
ஆனால், பாக்டீரியா அப்படி இல்லை. வெளியில் வளர்ந்து, உடலுக்குள் சென்றதும், பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும். எனவே தான், 'ஆன்டி பயாடிக்' மருந்துகளால் அவற்றை அழிக்க முடிகிறது. நம் உடல் வெப்பநிலை, 37 டிகிரி செல்ஷியஸ். இந்த வெப்பநிலையில் உயிர் வாழும் வைரசால், தமிழக வெயிலிலும், உயிர் வாழ முடியும்.

வவ்வால்கள்



வவ்வால்களில், விதவிதமான வைரஸ்கள் உள்ளன. அவை எந்த நோயையும், வவ்வால்களுக்கு உண்டாக்குவது இல்லை; வவ்வால்களுக்குள் ஏன் விதவிதமான வைரஸ்கள் உள்ளன என்பதும், அவற்றிற்கு நோயை ஏன் உண்டாக்குவது இல்லை என்பதும் புரியவில்லை.
நம்மைச் சுற்றி நிறைய வவ்வால்கள் உள்ளன. ஆனால், நாம் கண்களால் பார்ப்பது இல்லை. மாலை, இரவு நேரங்களில் வெளியில் சென்றால், வானத்தில் வவ்வால்கள் பறந்து செல்வதைப் பார்க்கலாம்.
மரங்கள் அடர்த்தியாக இருக்கும் பகுதிகளில் பார்த்தால், இரண்டு, மூன்று அங்குலம் உள்ள வவ்வால்கள் எல்லாம், படபடவென பறந்து செல்லும்.
நாம் அவற்றைப் பார்ப்பதில்லை. இவற்றின் வாயிலாக, வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது என்பது பொதுவான விஷயம். ஆனால், வவ்வால்களில் இருக்கும் எல்லா வைரசும், தொற்றை ஏற்படுத்தும் என்றோ, இறப்பை உண்டாக்கும் என்றோ சொல்ல முடியாது. சீனாவில், விலங்கு பண்ணையில் இருந்து கொரோனா பரவியதாக செய்திகள் வந்தன. பொதுவாக, விலங்குகளை பராமரிக்கும் பண்ணைகளில், ஷெட் இருக்கும். அதன் மேல் வவ்வால்கள் இருக்கும். பண்ணையை துப்புரவு செய்யும் பணியாளர்கள் வாயிலாக, மற்றவர்களுக்கு வைரஸ் பரவ வாய்ப்புகள் அதிகம். கடந்த 2002ம் ஆண்டிலிருந்து சார்ஸ் மெர்ஸ் என்று பரவிய வைரஸ் தொற்று எல்லாமே, விலங்குகளிடம் இருந்து தான் வந்துள்ளது. சார்ஸ் வைரஸ், சீனாவில், வவ்வால்களிடம் இருந்து பரவியது. மெர்ஸ் வைரஸ், சவுதி அரேபியாவில் ஒட்டகத்திடம் இருந்து வந்தது. 2016ல் நிபா வைரஸ், கேரளாவில், வவ்வால்களிடம் இருந்து வந்தது. விலங்குகளுக்கு வைரஸ் தொற்று இருக்கும். ஆனால், அது அவற்றை பாதிப்பதில்லை. அது ஏன் என்று தெரியவில்லை. விலங்குகளிடம், நாம் நெருக்கமாக இருக்கும் போது, அவற்றிடம் இருந்து நமக்கு தொற்றி விடுகிறது. நான் ஆராய்ந்த வரையில் பெரும்பாலான வைரஸ், வவ்வால்களிடம் இருந்துதான் வந்துள்ளது.

டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன்
ஆராய்ச்சியாளர், சென்னை
94450 45173

Share
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement