Advertisement

இளஸ்... மனஸ்..! (39)

Share

அன்புள்ள பிளாரன்ஸ் அம்மாவுக்கு....
அன்பு மகன் எழுதும் கடிதம்; என் வயது 18; சிறு வயதிலேயே, தந்தை இறந்து விட்டார்.
அவர், விட்டுச் சென்ற வீட்டின் வாடகை வருவாயில் தான், என்னையும், தம்பியையும் வளர்க்கிறார் தாய்.
நினைவு தெரிந்த நாளில் இருந்து, தந்தையின் அன்பையும், தாயின் பாசத்தையும் பார்த்ததில்லை. தம்பியை நேசித்த அளவிற்கு என்னை நேசித்ததில்லை தாய்; எப்போதும் திட்டியபடியே இருப்பார். என்னை ஊக்குவித்ததில்லை.
'நானும், அவர் வயிற்றில் பிறந்தவன் தானே.. ஏன் என்னை எப்போதும் கரித்துக் கொட்டுகிறார்' என்பது, புரியாத புதிராகவே உள்ளது.
நான், 7ம் வகுப்பு படித்த போது, மாறுவேடப் போட்டிக்கு பெயர் கொடுத்திருந்தேன். போட்டிக்கான ஆடைகள், அழகு சாதனங்கள் வாங்க பணம் இல்லை.
'கலந்து கொள்ள வேண்டாம்...' என, தடுத்து விட்டார் தாய்.
அதில் பங்கேற்க முடியாத வருத்தம் இன்றும் நினைவில் உள்ளது.
பத்தாம் வகுப்பு படித்த போது, வட்டார நீச்சல் போட்டியில் கலந்து, முதல் பரிசு பெற்றேன். இதையடுத்து, தனியார் நீச்சல் குளத்தில் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கும் அனுமதிக்கவில்லை; படிப்பு பாழாகி விடும் என்றார்.
தம்பியுடன், ஒருமுறை, 'மெகா மால்' சென்று, 'வீடியோ கேம்ஸ்' என்ற நிழல்பட ஆட்டம் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது, அலைபேசியில் அழைத்தார் தாய்.
விளையாடிக் கொண்டிருப்பதை கூறி, சில நிமிடங்களில் அழைப்பதாக தெரிவித்தேன். ஆனால், திரும்ப அழைக்க மறந்து விட்டேன்.
சிறிது நேரத்தில், என்னை கண்டபடி திட்டினார். அன்று முழுவதும் துாங்வில்லை; அவர் திட்டியது தான் காதில் எதிரொலித்தது.
எந்த காரியத்தை செய்வதாகச் சொன்னாலும், அவர் கூறும் முதல் வார்த்தை, 'அதெல்லாம் உன்னால் முடியாது...' என்பது தான்.
நண்பர்களுடன் பேச அனுமதிக்க மாட்டார். ஒரே முறை கெஞ்சி, நண்பர்களுடன் திரைப்படத்திற்குச் சென்றேன். கல்லுாரியில் சேர்க்கவும் முயற்சிக்கவில்லை.
'படித்தது போதும்... வேலைக்கு போ...' என்றார். கல்லுாரி கனவு, பகல் கனவானது.
இந்த நிலையில் தான், எனக்கு மாற்றத்தை தந்தது, கூரியர் நிறுவன வேலை. அங்குள்ளோர் காட்டிய அன்பு நெகிழச் செய்தது. அத்துடன், குடிப் பழக்கமும் தொற்றிக் கொண்டது. இது தெரிந்ததும், வீட்டை விட்டு விரட்டினார் தாய்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டேன்; இதில் இருந்து மீள விரும்புகிறேன். எல்லாவற்றையும் மறந்து, புதிய மனிதனாக வாழ விரும்புகிறேன். நல்ல ஆலோசனை சொல்லுங்க அம்மா.

அன்புக்காக ஏங்கி, அறியாமையில் விழுந்து கிடக்கும் மகனே...
சிறு வயதில் இருந்து, தாயிடம் எதிர்மறையான தாக்கத்தை அனுபவித்து வந்திருக்கிறாய். அதன் பலனாக இந்த வயதிலேயே போதைக்கு அடிமையாகி இருக்கிறாய். தாய் தான், இந்த நிலைக்கு காரணம் என, சாக்கு கூறுவது தவறு.
அன்பிற்கு ஏங்குவோர், முகம் தெரியாதவர் காட்டும் சிறு கரிசனத்தில் கூட, காலில் விழுந்து விடுவர். அன்பின் சக்தி அத்தகையது. உன் தாய்க்கு அது தெரியவில்லை; அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
அதற்காக, குடியை நாடுவது மிகப் பெரிய முட்டாள் தனம்; நல்ல வேளையாக, உடனடியாக விழித்து, விடுபட முயற்சி எடுப்பதற்கு என் பாராட்டுகள்.
எப்போது, போதையில் இருந்து விடு பட வேண்டும் என, நினைத்தாயோ, அதுவே நீ பெற்ற முதல் வெற்றி. கவலைப்படாதே... குடியில், கவலையை மறப்பது என்பது ஒரு மாயை; சிறிது நேர மயக்கம். குடிப் பழக்கத்தால் பிரச்னை மேலும் மேலும் அதிகரிக்கவே செய்யும்.
நீ செய்ய வேண்டியதெல்லாம், 'குடிப்பதை அறவே நிறுத்தி, இந்த சமூகத்தில், கண்ணியவானாக வாழ்ந்து காட்ட வேண்டும்' என, சபதம் எடுப்பது தான். எதை செய்ய நினைத்தாலும், 'என்னால் முடியும்...' என, எண்ணு. அதுவே, 'டானிக்' மாதிரி உன்னை உற்சாகப்படுத்தும்.
உன் நிலை உயரும் போது, வசை பாடிய தாயின் வாய், ஊரார் மெச்சும் வகையில், உன் புகழ் பாடும். தாய்க்கு செய்யும் கைமாறு அதுவே; உன்னை, 10 மாதம் சுமந்து பெற்றவள் அவள்.
ஒரு நாள், 'உன்னை பெற்றதற்கு நான் பெருமைப்படுகிறேன்...' என, சொல்ல வைக்க வேண்டியது உன் கடமை. அது, உன் முயற்சியில் தான் உள்ளது. வைராக்கியத்துடன் செயல்படு; வெற்றி கிட்டும். அப்போது, இளமையில் கிடைக்காத அன்பும், பாசமும் கிடைக்கும்.
வாழ்த்துக்களுடன், பிளாரன்ஸ்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement