Advertisement

பாம்பும் பயமும்!

அரண்மனை மாடத்தில், நந்தவனத்தைப் பார்த்தவாறு, ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார், மொகலாய சக்கரவர்த்தி அக்பர். பிரதான மந்திரி பீர்பாலை உடனே அழைத்து வர கட்டளையிட்டார்.
அழைத்து வந்ததும், 'பீர்பால்... மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனரா... அதை நேரடியாக அறிய விரும்புகிறேன்... மாறுவேடத்தில் நகர்வலம் சென்று வரலாமா...' என்றார் அக்பர்.
'இன்றிரவே செல்வோம். தாமதம் செய்ய வேண்டாம்...' என்றார், பீர்பால்.
அன்று பவுர்ணமி பிரகாசித்தது.
இருவரும் நகர்வலம் பறப்பட்டனர்; மக்களால், அவர்களை அடையாளம் காண முடியவில்லை.
தலைநகர எல்லையை கடந்த போது, போதை மயக்கத்தில், மரத்தடியில் வாய் பிளந்து கிடந்தான் ஒரு குடிகாரன். சிறிய பாம்பு ஒன்று, அவன் வாயில் புகுந்து, வயிற்றுக்குள் சென்று விட்டது.
இதைக் கண்டதும், 'அவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்; உடனே வைத்தியரிடம் அழைத்துச் செல்வோம்...' என்றார் அக்பர்.
'கவலை வேண்டாம்... நானே பார்த்துக் கொள்கிறேன்...' என்று கூறி, குடிகாரனின் தலையில் தண்ணீரை ஊற்றி, தடியால் அடித்தார் பீர்பால்.
வலி பொறுக்காத குடிகாரன், அலறியபடியே எழுந்து, 'ஏன், என்னை அடிக்கிறாய்...' என்று கத்தியபடி ஓடினான்.
அதைக் பொருட்படுத்தாமல், தொடர்ந்து தடியால் தாக்கி, ஓட ஓட விரட்டினார் பீர்பால். தடுமாறி விழுந்தான் குடிகாரன்.
பீர்பாலின் செயலால், கடும் கோபம் அடைந்த அக்பர், 'ஏன் இப்படி அடிக்கிறாய்...' என்று கேட்டார். வேடிக்கை பார்க்க திரண்ட மக்களும் அதே கேள்வியை எழுப்பினர்.
'கோபம் கொள்ள வேண்டாம்... பொறுத்து பாருங்கள்... விவரம் விரைவில் புரியும்...' என்றார் பீர்பால்.
அடிக்கு பயந்து ஓடிக்களைத்து வியர்வையில் நனைந்த குடிகாரன், 'தாகமாயிருக்கிறது... குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் தாருங்களேன்...' என்று கெஞ்சினான்.
அருகில் ஓடிய சாக்கடை நீரை, ஒரு மண் குடுவையில் அள்ளிக் கொடுத்தார் பீர்பால். அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்தார் அக்பர். ஆனால், மேலும் தடியால் அடித்து, சாக்கடை நீரை குடிக்கும்படி வற்புறுத்தினார் பீர்பால்.
சாக்கடை நீர் கடுமையாக துர்நாற்றம் வீசியது. குடிகாரனுக்கு குமட்டியது; அதை குடிக்கும்படி மிரட்டிக் கொண்டிருந்தார் பீர்பால்.
அருவெறுப்பால் வாந்தி எடுத்தான் குடிகாரன்; வயிற்றுக்குள் இருந்த அனைத்தும் வெளியே வந்தது. புகுந்திருந்த பாம்பும், வாந்தியில் வெளியே வந்து விழுந்தது.
வாந்தியில் பாம்பைக் கண்ட மக்கள் திகைத்தனர்; அச்சமும், பீதியும் அடைந்தான் குடிகாரன்.
தாக்கியதற்கான காரணத்தை புரிந்த அக்பர், 'துன்புறுத்தாமல், வயிற்றுக்குள் பாம்பு புகுந்ததைக் கூறி, சிகிச்சை அளித்திருக்கலாமே...' என்றார்.
'அவனிடம் விஷயத்தைக் கூறியிருந்தால், பயத்திலேயே இறந்திருப்பான்; அதனால் தான், அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தேன்...' என்றார் பீர்பால்.
உண்மை புரிந்து, பீர்பாலின் பாதங்களில் விழுந்து, மன்னிப்புக் கேட்டான் குடிகாரன்.
வியந்த அக்பர், சபையில் மறுநாள் பீர்பாலைப் பாராட்டி, பரிசுகள் வழங்கினார்.
குழந்தைகளே... சமயோசிதமாக செயல்படுவதே வெற்றிக்கு முதல்படி... எப்போதும் சூழல்நிலையை புரிந்து செயல்பட்டால் இலக்கை அடையலாம்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement