Advertisement

அதிமேதாவி அங்குராசு!

நிகழ்பட ஆட்டம்!

'வீடியோ கேம்' என்ற விளையாட்டை, நிகழ்பட ஆட்டம் எனலாம். சிறுவர், சிறுமியருக்கு மிகவும் விருப்பமானது. கட்டுப்பாடின்றி விளையாடினால் அவதியைத் தரும்; மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தி செயல்திறனை இழக்க செய்யும்!
இந்த ஆட்டத்தின் வரலாற்றை தெரிந்து கொள்வோமா...
முதன்முதலில் நிகழ்பட ஆட்டம், 1950ல் அறிமுகமானது; அதன் பெயர், 'ஸ்பேஸ்வார்' என்பதாகும். கணினி வளர்ச்சி அடையாத காலத்திலேயே, 'ஆஸிலோஸ்கோப்' என்ற வரை கருவி உதவியால் விளையாடப் பட்டது.
நிகழ்பட ஆட்டக் கருவி, நவ., 29, 1972ல் விற்பனைக்கு வந்தது. அமெரிக்க பொறியாளர் நோலன் புஷ்னெல் என்பவர், 'பாங்க்' என்ற கருவியைத் தயாரித்து விற்பனைக்கு விட்டார். இது, 'டேபிள் டென்னிஸ்' என்ற மேஜை பந்தாட்ட அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்தது.
ரசனைக்கு தீனி போட்டதால் உலக அளவில் சந்தை மதிப்பை பெற்று பிரபலமானது இந்த ஆட்டம். பெரியவர்களும் லயித்து, அலைபேசி, கணினியில் விளையாடுகின்றனர். தினமும், புதிது புதிதாக விளையாட்டுகள் அறிமுகமாகின்றன; சந்தையில் குவிகின்றன.
விளையாடும் தன்மையைப் பொறுத்து, பங்குவகிப்பது, துப்பாக்கியால் சுடுவது, சாதுர்யத்தை வெளிப்படுத்துவது, கூட்டு பங்கேற்பு, தனி நபர் ஆட்டம் என, பல விதமாக ஆட்டங்கள் வருகின்றன.
அலைபேசி, கணினி, 'லேப்டாப்' என்ற மடிகணினி போன்றவை விளையாடும் கருவிகளாக உள்ளன. விளையாட்டுக்களை இணைய தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்; மின்னஞ்சலில் பகிர்ந்து ஆடலாம்; பிரத்யேக கருவியை வாங்கியும் ஆடலாம்.
அதிகமாக விற்பனையாவது, 'பிளே ஸ்டேஷன் - 2' என்ற நிகழ்பட ஆட்டக் கருவி தான். இது, சோனி நிறுவன தயாரிப்பு. தற்போது, இதன் புதிய பதிப்பு, 'பிளே ஸ்டேஷன் - 4' என்ற பெயரில் நவீன தொழில் நுட்பத்தில் சந்தையில் கிடைக்கிறது.
நிகழ்பட ஆட்டம் சுவாரசியம் தருவதாக இருந்தாலும், நேரத்தை வீணடிக்கும்; கல்வியில் நாட்டத்தை குறைத்து, கவனச்சிதறலை ஏற்படுத்தும்; தொடர்ந்து ஆடும் சிறுவர், சிறுமியரை கட்டுப்படுத்த முடியாமல் கடும் மன அழுத்தத்துக்கு உள்ளாகிவருகின்றனர் பெற்றோர்.
இந்த விளையாட்டுக்கு அடிமையானால், உடல், மனம் கெடும்; எதையும் திட்டமிட்டு செய்ய முடியாது. எதிர்காலம் கேள்விக்குறியாகும். இவற்றை மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கையாக விடுத்துள்ளனர்.
குழந்தைகளே... அறிவு, ஆற்றலுடன் வளர, உடல் திறன் சார்ந்த விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்; அதுதான் உங்களையும், உலகத்தையும் காக்கும்!
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement