Advertisement

லாபம் கொழிக்கும் கொத்தவரை சாகுபடி

கொத்தவரை ஓர் வணிக பயிராக கருதப்படுகிறது. இது வெப்ப மண்டல தாவரம் என்பதால், வறண்ட மற்றும் மித வெப்பநிலை பகுதிகளில் வளரும் தன்மையுடையது. இத்தாவரமானது 3 முதல் 4 அடி உயரம் வரை வளரக்கூடியது. 55 நாட்களில் அறுவடைக்கு தயாராகும் பயிராகும். கொத்தவரை பல்வேறு வகையான மண் வகைகளில் வளரும் தன்மையுடையது என்பதால் அனைத்து மண் வகைகளுக்கும் ஏற்றது.

குறிப்பாக களி மண்ணில் பயிர் சிறப்பாக வளரும். ஆனால், உப்பு மற்றும் கார மண்ணிற்கு ஏற்ற பயிரல்ல. இத்தாவரமானது மண்ணில் நைட்ரஜன் சத்தை அதிகரிக்கச் செய்து மண்ணின் வளத்தை பெருக்க உதவுகிறது. கோடைகாலத்தில் நீர்ப்பாசன நிலையில் கொத்தவரை வெற்றிகரமாக வளரக்கூடிய தாவரமாகும். விதைகளின் தரம் மிக முக்கியம் என்பதனால், அரசு சான்றளிக்கப்பட்ட நிறுவனங்களின் விதைகளை தேர்வு செய்து விதைப்புக்கு பயன் படுத்துவது நல்லது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் கொத்தவரைக்கு உகந்த மற்றும் பொருத்தமான நேரம். இதனையடுத்து ஜூலை முதல் பதினைந்து நாட்களில் பருவ மழை துவக்கத்தில் பயிடவேண்டும்.

தாமதப்படுத்தும் நிலையில் அதிக வெப்ப நிலை காரணமாக விளைச்சல் குறைய வாய்ப்புண்டு. நிலத்தை நன்கு உழுத பின்பு ஒரு எக்டருக்கு 25 முதல் 30 டன் மக்கிய தொழுஉரத்தை இடுதல் வேண்டும். விதையின் தேவையானது ஒரு ஏக்கருக்கு 10 முதல் 12 கிலோ என்ற விகிதத்தில் எடுத்துக் கொண்டு 35 முதல் 40 சென்டி மீட்டர் இடைவெளியில் அமைத்து பார்களின் பக்க வாட்டில் 15 செ.மீ., இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும்.

கொத்தவரை அதிக நோய் தாக்குதலுக்கு உள்ளாகாத தாவரமாகும். பயிருக்கு நீர்ப்பாசனம் தேவைப்படும் போது 15 நாட்களுக்கு ஒரு முறை என்ற வீதத்தில் 5 முறை நீர்ப்பாசனம் செய்யலாம். களையிருப்பின் 30 முதல் 35 நாட்களுக்குள் அகற்றினால் போதுமானது. கொத்தவரையானது எக்டருக்கு 10 முதல் 12 டன் மகசூல் கிடைக்க வல்லது.

- முனைவர். து.பிரபா
வேளாண் ஆலோசகர்
அவினாசி. 98940 54524

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

    அருமை எனது நண்பரும் இதனை சொன்ன பொழுது நான் சிரித்து வைத்தேன், இப்போ புரியுது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement