Advertisement

கால்நடைகளுக்கு தாது உப்பின் பங்கு

கால்நடைகளுக்கு வழங்கப்படும் தீவனத்தில் கொழுப்பு, புரதம் மற்றும் மாவுச்சத்து மட்டும் இருந்தால் போதாது. அவைகளின் உற்பத்தி திறனுக்கும், இனவிருத்தி செயல்பாடுகளுக்கும் தாது உப்புக்கள் மிக அவசியம். கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், சோடியம், குளோரின் மற்றும் கந்தகம் ஆகிய தாது உப்புக்கள் மிகுதியான அளவில் தேவைப்படுகின்றன. கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை எலும்பு வளர்ச்சிக்கு மிக அவசியம்.

கறவையில் உள்ள பசுக்களின் உடம்பில் இருந்து பாலில் கால்சியம் சத்து அதிகம் வெளியேறுவதால் கால்சியம் சத்து கறவை மாடுகளுக்கு மிக அத்தியாவசியம். இவற்றை தராமல் இருந்தால் குறைபாட்டால் பால்ச்சுரம் போன்ற நோய் ஏற்படக்கூடும். பாஸ்பரஸ் சத்து குறைபாட்டால் மாடுகளில் சிறைப்பிடிக்கும் திறன் பாதிப்படைகிறது.

முட்டையிடும் கோழிகளுக்கு கால்சியம் குறைபாடு ஏற்பட்டால் அவை தோல் முட்டையிடும். சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் குறைபாட்டால் பசியின்மை உண்டாகும். கந்தகம் சிரான உடல் வளர்ச்சிக்கும், இனப்பெருக்கத்துக்கும் தேவைப்படுகிறது. எனவே தாது உப்புக்களை தீவனத்தில் தகுந்த அளவு கலந்து கொடுக்க வேண்டும். தாது உப்பு கலவைகளை தீவன கட்டியாக கொடுக்கலாம். தீவனத்துடன் சேர்த்து சத்துாட்டப்பட்ட பொருளாக தரலாம். ஊசி மருந்து மூலமும் செலுத்தலாம்.

தாது உப்புக்கலவையின் தேவை அனைத்து இடங்களிலும் உள்ள கால்நடைகளுக்கும் ஒரேமாதிரியாக இருப்பது இல்லை. தமிழ்நாடு கால்நடை பல்கலை இதற்கென சிறப்பு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு ஒவ்வொரு மாவட்டத்தில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு அம்மாவட்ட மண் வள சோதனை அடிப்படையில் தாது உப்புக்கலவையை வெளியிட்டு உள்ளது. இந்த ஆராய்ச்சியில் நான்கு வகையான தாது உப்புக்கலவைகள் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி தாது உப்புக்கலவை கால்நடை பல்கலையால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு 'தானுவாஸ் ஸ்மார்ட் தாது உப்புக்கலவை' என பெயரிடப்பட்டுள்ளது. ஒரு கிலோ தாது உப்புக் கலவை ரூ.45க்கு விற்கப்படுகிறது.

இந்த தாது உப்புக் கலவை தினமும் 10 லிட்டருக்கு குறைவாக பால் கறக்கும் மாடுகளுக்கு ஏற்றது. 10 லிட்டருக்கு மேல்கறக்கும் மாடுகளுக்கு உகந்ததல்ல. ஏனெனில் அதிகம் பால் கறக்கும் மாடுகளுக்கான தாது உப்பு தேவை, இந்த தாது உப்புக்கலவையை வழங்குவதால் பூர்த்தி செய்யப்படாது. தானுவாஸ் தாது உப்புக்கலவை பசு மாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 50 கிராம் கொடுக்க வேண்டும். தானுவாஸ் ஸ்மார்ட் தாது உப்புக்கலவை கால்நடை பல்கலையின் கீழ் இயங்கும் அனைத்து ஆராய்ச்சி மையங்களிலும் விலைக்கு கிடைக்கும், என கால்நடை பல்கலை அறிவித்துள்ளது.

- டாக்டர். வி.ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்புத்துறை
94864 69044

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Sundar - Hartford,யூ.எஸ்.ஏ

    மிகவும் பயனுள்ள தகவல். நன்றி அய்யா.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement