Advertisement

'மியோ வாக்கி' எனும் காடு வளர்ப்பு

ஜப்பான் நாட்டை சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியோ வாக்கி. இவர் மரங்கள் அதிவேகமாக வளர புது விதமான காடு வளர்ப்பு முறையை கண்டுபிடித்தார். இடைவெளி இல்லா அடர்ந்த காடுகளுக்கு, இவர் கண்டுபிடித்த முறையில் குறைந்த இடைவெளியில் அதிக எண்ணிக்கையில் மரங்கள் நடலாம். இந்த முறையில் இதுவரை 4 கோடிக்கும் அதிகமான மரங்களை வளர்த்து காடுகளை உருவாக்கியுள்ளார்.

மியோ வாக்கி முறை



குறைந்த இடத்தில் அதிக மரங்களை வளர்த்து காடுகளை உருவாக்குவதே மியோ வாக்கி முறையாகும். இது குப்பைகளை வைத்தே குட்டி வனத்தை உருவாக்கும் தத்துவம். ஆழமாக, நீண்ட அளவில் குழிகள் வெட்டி, அதனுள் குப்பையை இட்டு அதில் நெருக்கமாக செடிகளை நடும் முறை தான் மியோ வாக்கி.
இதை கண்டுபிடித்தவர் பெயரால் இதற்கு மியோ வாக்கி முறை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த முறையின் சிறப்பு என்னவென்றால் பத்து ஆண்டுகளில் ஒரு மரம் எவ்வளவு வளர்ச்சியடையுமோ, அந்த வளர்ச்சி இந்த முறையில் இரண்டே ஆண்டுகளில் கிடைத்து விடும்.
மரங்கள் நெருக்கமாக இருப்பதனால் ஒளிச்சேர்க்கைக்காக மரங்கள் சூரிய ஒளியை தேடி ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு வேகமாக வளர்கின்றன. ஆழமான குழியில் நடவு செய்யப்படுவதனால் மரங்களின் வேர்கள் வேகமாக நிலத்தினுள் இறங்கி பிடித்து கொள்கின்றன.

ஜூலை - டிசம்பர் ஏற்றது



நம் நாட்டை பொருத்தவரை நிறைய குப்பை முறையாக கையாளப்படாமல் வீணாய் ரோட்டோரங்களில் அசுத்தமாக கிடக்கின்றன. அவற்றை முறையாக பயன்படுத்தி மியோ வாக்கி முறையில் காடுகளை வளர்க்கலாம்.
இந்த முறையில் முதலில் காலி இடங்களை தேர்வு செய்து மூன்றடி ஆழத்திற்கு குழி தோண்டி அதற்குள் நமக்கு கிடைக்கும் குப்பைகளை சேகரித்து குழியை நிரப்ப வேண்டும். அதற்கு மேல் உயிர் உரங்களான பாஸ்போ பேக்டீரியா, அசோஸ்பைரில்லம் போன்றவற்றை போட்டு அதில் செடிகளை நெருக்கமாக நடவு செய்ய வேண்டும்.
இவ்வாறு நாட்டு மரங்களான மூங்கில், வேம்பு, மகோனி, சரக்கென்றை, அத்தி போன்ற மரங்களை நடுவது சிறந்தது. இம்முறையில் நடவு செய்ய ஜூலை முதல் டிசம்பர் வரை சிறந்த காலமாகும். சரியான மழைக்காலம் நடவுக்கேற்ற காலம். பெரிய மரங்களை விட நடுத்தரமான மரங்களை நடுவதே சிறந்தது.

நடவு முறை



முதலில் 10 அடி அகலம், 5 அடி ஆழம் மற்றும் 60 அடி நீளத்திற்கு குழியை உருவாக்கி, இரண்டு நாட்களுக்கு வெப்பம் தணிய குழியை ஆறவிட வேண்டும். அதன் பின்பு காய்கறி, கழிவுகள், இலை, தழைகளை நிரப்பி குழி முழுவதும் நிரம்பி வழியும் அளவிற்கு தண்ணீர் விட வேண்டும்.
பின் 1 அடிக்குள் 7 வகையான 12 நாட்டு மரக்கன்றுகளை நெருக்கமாக நடவு செய்ய வேண்டும். அக்டோபர் மாதத்தில் 6 அடி உயரமுள்ள செடியை நட்டால் அது மார்ச் மாதத்தில் 12 அடி உயரத்திற்கு வளர்ந்து விடும். சிறிய இடங்களில் பெரிய ஆக்ஸிஜன் தொழிற்சாலைகளை இந்த முறையில் உருவாக்கலாம். இவ்வகையான குட்டி வனங்களில் பறவைகள், புழு, பூச்சிகள், தேனீக்கள் அதிகளவில் வாழ்வதால் உயிர்ச்சூழல் மேம்படுகிறது. குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரங்களை வளர்க்க முடிகிறது. 1000 சதுரடி நிலத்தில் 300 முதல் 400 மரங்கள் வரை வளர்க்க முடிகிறது.

- எஸ். சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
63746 95399

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement