Advertisement

நோய் முதல் நாடி!

அன்று அமாவாசை...
'அம்மாடி... முதுகு பிடிச்சிடுச்சே... கொஞ்சம் தைலம் எடுத்துக் கொடேன்... என்னால முடியலயே...' என்று புலம்பினாள் வசந்தி.
'இதோ வரேம்மா...' என்று, சமையலுக்கு புளி கரைத்த கையோடு, தைலத்தை எடுத்துக் கொடுத்தாள் மருமகள் செல்வி.
'நானே எப்படி தேச்சுப்பேன்... தேச்சு விடுடி...' என கத்திய மாமியாரை, சமாதானப்படுத்தியதும் கண்ணயர்ந்தாள்.
'இந்த அம்மா துாங்கினாத்தான் நமக்கு வேலை ஆகும்; இல்லன்னா... அங்க வலிக்குது... இங்க வலிக்குதுன்னு உயிரை வாங்கிடுவாங்க' என்று முனகியபடி, சமையலறைக்குள் புகுந்தாள் செல்வி. வேகமாக வேலைகளை முடித்தாள்.
தொலைகாட்சியில் வரும், அழுகைத் தொடர்களைப் பார்ப்பதும், உண்பதும் மட்டும் தான் வசந்தியின் வேலை. இடையிடையே, மருமகளை குறை சொல்லி திருப்திப்பட்டுக் கொள்வாள்.
ஆண்டுக்கு, 365 நாளும் நோய் தான். தலை வலிக்குது, கால் வலிக்குது, முதுகு வலிக்குது, காய்ச்சலா இருக்குது என்று புலம்பியபடியே இருப்பாள். இதைக் கேட்டு கேட்டு, செல்விக்கு பழகிவிட்டது.
அன்று கண் விழித்ததும், 'அய்யோ சீரியல் போட்டிருப்பானே... சீக்கிரமா 'டிவி'யை போடு...' என்று கத்தினாள்.
'இதுக்கும் நம்மை கூப்பிடறாங்களே' என நொந்தபடி, அவசரமாக, 'டிவி'யை போட்டாள் செல்வி. விளம்பர இடைவேளையில், 'தலை வலிக்குது' என்று புலம்பினாள். உடனே, தைலம் தேய்ச்சு விட்ட செல்வியை, 'ஏன்டி... உன் உடம்புக்கு ஒண்ணுமே வராதா...' என்று நக்கலாக கேட்டாள் வசந்தி.
'உடம்பு சரியல்லைன்னாலும், வீட்டு வேலைகளை செஞ்சுதானம்மா ஆகணும். அப்பதான், குடும்பம் நல்லாயிருக்கும். சும்மா உட்கார்ந்து இருந்தா தான் நோய் வரும். உடம்புல உள்ள உறுப்பு எல்லாத்துக்கும் வேலை கொடுக்கணும்... அப்ப தான் சுறு சுறுப்பா இயங்கும்...'
'அதெல்லாம் என்னால முடியாதுடி...'
'முன்னாடி எல்லாம், அம்மியில தானே அரைப்பீங்க... உரலில் அரிசி குத்துவீங்க... அப்போ உங்களுக்கு எங்கம்மா நோய் வந்தது. நான் ஆலோசனை சொல்றேன்னு தப்பா நினைச்சுகாதீங்க... மனசுல பட்டத சொன்னேன்...'
'நானும் வேலை செய்யணும் தான் நினைக்கிறேன்; ஆனா முடியலயே...'
'சின்னதா செய்யுங்க... வெளியில நடந்தே போயிட்டு வாங்க... காய்கறி வெட்டுங்க... இதையெல்லாம் செஞ்சே ஆகணும்ன்னு நினைங்க...'
கோபப்படாமல், செல்வி சொல்வதை பொறுமையாக கேட்டாள் வசந்தி.
மறு நாள், சிறு சிறு வேலைகளை செய்ய ஆரம்பித்தள். கால் வலியைப் பொருட்படுத்தவில்லை. வீட்டுக்குள் நடந்தாள். அவளது தேவைகளை, அவளே பூர்த்தி செய்து கொண்டாள். மனதில் மகிழ்ச்சியை உணர்ந்தாள். கோபமும், எரிச்சலும் காணாமல் போயிருந்தது.
வேலை செய்யாதிருந்தால் தான் நோயை உணர முடிகிறது. பகலில் துாங்குவதால் தானே தலை வலிக்கிறது என நினைவில் வந்தது. துாங்கும் நேரத்தில் புத்தகம் படிக்க திட்டமிட்டாள்.
'டிவி' பார்த்தால் தானே முதுகு வலிக்கிறது; அந்த நேரத்தில், கடைக்குச் சென்று வந்தாள். இவ்வாறு வேலை செய்ய துவங்கியதும், நோயை மறந்தாள். மகிழ்ச்சி வானில் பவுர்ணமி பொங்கியது.
குழந்தைகளே... துாங்கும் நேரம் தவிர, எப்போதும் ஏதாவது பணிகளை செய்து கொண்டே இருங்க... உடலும், மனமும் சுறுசுறுப்பாக இயங்குவதை உணர்வீங்க.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement