Advertisement

தேநீர் விடுதி!

தாங்கள் பெற்ற, மெகா பார்லிமென்ட் தேர்தல் வெற்றியை, இந்தியா முழுக்க கொண்டாடிக் கொண்டிருந்தனர், பா.ஜ.,வினர். மழப்பாடி மாரிசாமி, வளைந்து நெளிந்து, சோடியை கும்பிட்டது போல, ஜோதிடரை கும்பிட்டார், மந்திரமூர்த்தி. வயது, 46.
சாம்பல் நிறம். அடர்த்தி குறைந்த நரை கலந்த கேசம். மஞ்சளித்த கண்கள். நாசி துவாரங்கள், எடுப்பாய் தெரியும் மூக்கு. இரு நுனிகளுக்கு கீழ் வளைந்த மீசை. நிகோடின் கறை படிந்த பற்கள். கட்சி கரை வேட்டி. மினிஸ்டர் ஒயிட் காட்டன் சட்டை. கழுத்தில் மைனர் செயின். உயரம், 170 செ.மீ.,
அ.இ.ப.மு.ச., கட்சியின் வட்ட செயலர், மந்திரமூர்த்தி. கட்சி பணியில், 26 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். படிப்பு வராமல், 9ம் வகுப்புடன் நிறுத்தி, ரவுடியிசம் பண்ண ஆரம்பித்தார்.
கட்சி போஸ்டர் ஒட்டுவது, பொது கூட்டங்களுக்கு ஆள் சேர்ப்பது, எதிர்க்கட்சிகாரன் கூட்டங்களில் புகுந்து கலாட்டா செய்வது, கடைகளில் மாமூல் வசூல் பண்ணுவது, ஓடும் ஆட்டோ மைக்கில், கூட்டங்கள் நடப்பதை அறிவிப்பது போன்ற பணிகளை ஆரம்ப காலத்தில் செய்தார். பின், ஒன்றிய செயலர் ஆனார். தொடர்ந்து வட்ட துணை செயலர், இப்போது, வட்ட செயலர்.
''வாங்க, மாண்புமிகு,'' வரவேற்றார், ஜோதிடர். வயது, 70 இருக்கும். நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி சாயல். அரசியலையும், ஜோதிடத்தையும் கரைத்து குடித்தவர்.
''வட்ட செயலருக்கு எதுக்கு மாண்புமிகு அடைமொழி. நான் என்னைக்கு முதல்வராகிறேனோ, அன்னைக்கு மாண்புமிகுன்னு கூப்பிடுங்க, ஜோஸ்யகார்!''
''முதல்வர் அடுத்த கிரகத்திலிருந்தா பறந்து வர்றார். கட்சிக்காரங்களுக்குள்ள யாராவது ஒருத்தர்தானே வர்றாங்க!''
''எனக்கு முன், லட்சக்கணக்கானவங்க, 'க்யூ'ல நிக்கிறாங்க, சாமி!''
''தர்ம தரிசனத்துல ஏன் போறேள்... சிறப்பு தரிசன, 'டோக்கன்'ல போமய்யா!''
''புரியல!''
''நம் நாட்டுல, நேர் வழில போறவன், அஞ்சுக்கும், பத்துக்கும் அல்லாடிகிட்டு இருக்கான். குறுக்கு வழியில போறவன், கோடிகள்ல தவழ்ந்துகிட்டு இருக்கான். எந்த வழில வந்தாலும் வெற்றி தான்!''
''என் வழி, குறுக்கு வழி தான். ஆனா என்ன, எனக்கு முன், நுாத்துக்கணக்கான குறுக்கு வழிகள். எந்த குறுக்கு வழில போறதுன்னு குழப்பமா இருக்கு!''
சிரித்தார், ஜோதிடர்.
''மந்திரம், இப்படி எனக்கு எதிர்த்தாப்புல வந்து உக்காரு!''
சம்மணமிட்டு அமர்ந்தார், மந்திரமூர்த்தி.
''பொறுமையா நான் சொல்றத கேப்பியா?''
''கேக்கறேன்!''
''உன் ஜாதகத்தை எடுத்து வந்திருக்கியா?''
''எடுத்து வந்திருக்கேன்!''
''எனக்கு தட்சணையா, 1,001 ரூபாய் தரவேண்டியிருக்கும்!''
''தந்துட்டா போச்சு!''
மந்திரமூர்த்தியின் ஜாதகத்தை வாங்கி, அலசி ஆராய்ந்தார், ஜோதிடர்.
''உன் பிறந்த தேதி, ஜூலை 25, 1972. சிம்ம ராசி, பூர நட்சத்திரத்துல பிறந்திருக்க!''
சோழிகளை உருட்டினார்; ஏதேதோ கணக்குகள் போட்டார். மந்திரமூர்த்தியின் கையை நீட்ட சொல்லி, ரேகைகளை உன்னித்தார்; வெற்றிலையில் மை தடவி பார்த்தார்.
கண்களை இறுக மூடி, இரு கைகளை தொடையில் நீட்டி, நிஷ்டையில், 10 நிமிடங்களுக்கு பின், கண்களை திறந்தார். இரு கண்களும் ரத்த சிவப்பில் மிளிர்ந்தன.
''சாமி, உங்களை பார்க்க பயமா இருக்கு!''
''பயப்படாதே... உனக்கு, ஒரு நல்ல செய்தி கொண்டு வந்திருக்கேன்!''
''சொல்லுங்க!''
''டீ குடிப்பியா, மந்திரம்?''
''ஒரு நாளைக்கு ஏழெட்டு தரம் குடிப்பேன்!''
''வீட்டுலயா, கடையிலயா?''
''முதல் டீ வீட்டுல. மீதியெல்லாம் அங்கங்க போற இடத்துல இருக்கிற கடைகள்ல!''
''எந்த கடைன்னாலும் அங்க போய், டீ குடிச்சிருவியா?''
''அதெப்படி... சில கடைகள்ல கழனி தண்ணி மாதிரி போடுவான். டீயை பார்க்கறப்பவே தெரிஞ்சிரும், அது சுவையான டீயா, இல்லையான்னு. டீ, அரக்கு கலர்ல இருக்கணும். ஒரு துளி குடிச்சா கசப்பு துாக்கலாவும், இனிப்பு மறைமுகமாவும் இருக்கணும். சில கடைகள்ல, டீ மேல ஆடையை எடுத்து போட்டிருப்பான். அதை உறிஞ்சி சுவைச்சா, சூப்பரா இருக்கும்!''
''டீ மட்டும் குடிப்பியா, மசால் வடை அல்லது உளுந்த வடை வாங்கி கடிப்பியா?''
''ரெண்டு மசால் வடை தின்னு தான் டீயே குடிப்பேன்!''
''டீ குடிச்சிட்டு வந்துருவியா அல்லது டீக்கடை பெஞ்ச்ல உட்கார்ந்து, உள்ளூர் அரசியலில் இருந்து உலக அரசியல் வரை பேசுவியா, அங்குள்ள பேப்பர வாசிப்பியா?''
''டீக்கடைல ஏற்கனவே சில பெருசுகள் உக்காந்து, பெஞ்சை தேச்சுகிட்டு இருக்கும்க. பெஞ்ச் மேல 'தினமலர்' பேப்பரோ, 'தினத்தந்தி'யோ கிடக்கும். நாலு நாலு பக்கமா எடுத்து, ஒவ்வொருத்தரும் படிச்சிட்டு இருப்பாங்க. நமக்கு கிடைக்கிற பேப்பரை படிச்சுகிட்டே பேசுற வாய்களை பராக்கு பார்க்கலாம்.
''சில சமயம், டீக்கடை பெஞ்சுகள், சட்டசபையை விட வன்முறை நிறைஞ்ச இடமா காட்சியளிக்கும். டீ மாஸ்டரோட அரசியல் கருத்துகள், கருத்தாளரை விட தடாலடியா இருக்கும்!''
''டீக்கடைகாரங்களை பத்தி உன் அபிப்ராயம் என்ன?'' என்றார், ஜோதிடர்.
''பாவம், அன்னாடங்காய்ச்சிகள். டீ குடிக்கிறவன்ல பாதி பேர், கடன் சொல்லிட்டு போயிடுவாங்க. மூன்று வடை தின்னுட்டு, ரெண்டு வடைக்கு கணக்கு சொல்வான்க. ஒரு டீயை, 'ஒன் பை டூ' போட்டு, ரெண்டு பேர் குடிச்சுட்டு, டீக்கடை பெஞ்ச்ல நாலு மணி நேரம் உட்கார்ந்திருப்பான்க. ஒரு நாளைக்கு, 200 ரூபாய் மிஞ்சினா பெரிய விஷயம்.

''என்ன சாமி, டீக்கடைகளை பத்தி விலாவாரியா பேசிக்கிட்டு இருக்கீங்க?''
''காரணம் இருக்கு, மந்திரம்!''
''சொல்லுங்க!''
''உன்னை, ஒரு டீக்கடை வைக்க
சொன்னா வைப்பியா?''
''என்ன சாமி இது, முதல்வராக ஐடியா கேட்டா, டீக்கடை வைக்க ஐடியா குடுக்கறீங்க!''
''டீக்கடைன்னா உனக்கு அவ்வளவு கேவலமா போச்சா... நாட்டு அரசியலை, அக்குவேறா, ஆணிவேறா அலசுற இடங்கள் ரெண்டே ரெண்டு. ஒன்று, சலுான் கடை. இன்னொன்று, டீக்கடை. ஒரு டீ மாஸ்டரோட, முடி வெட்டுறவரோட அரசியல் கருத்துகள், அரசியல் மற்றும் விஞ்ஞானிகளின் கருத்துகளை விட துல்லியமா, தெளிவா இருக்கும்.
''ஒரு டீக்கடை பெஞ்ச், மினி சட்டசபை மாதிரி. தேர்தல் நேரத்துல, டீக்கடையில ஒரு மணிநேரம் நின்னா, எந்த கட்சி ஜெயிக்கும்கிறதை, 'ஈசி'யா கண்டுபிடிச்சுடலாம். ஒரு டீக்கடைக்கு, நாலு கட்சிக்காரங்க வந்து டீ சாப்பிடுவாங்க. அத்தனை பேரையும் சமாளிக்கிற திறமை, டீ மாஸ்டருக்கு உண்டு!''
''டீக்கடை பெருமைகள் போதும், ஜோதிடரே!''
''உன் ஜாதகத்துல, ஒரு தோஷம் இருக்கு. அதுக்கான பரிகாரத்தை தான் சொல்லிட்டு வரேன்!''
''டீக்கடை பரிகாரமா?''
''நீ, என்ன வேலை பார்க்கிற, மந்திரம்?''
''நான் முழு நேர அரசியல்வாதி!''
''உடனே நீ பண்ண வேண்டியது, ஒரு டீக்கடையை ஆரம்பிப்பது!''
''புரியல!''
''நீ, ஒரு கூரை கொட்டகையில, டீக்கடை ஆரம்பி. டீ மாஸ்டர் வேலையை நீயேதான் பார்க்கணும். மசால் வடையும், உளுந்த வடையும் சுட்டு போடு. டீக்கடை முன், பெஞ்சிலே, 'தினமலர்' அல்லது 'தினத்தந்தி' பேப்பரோ, வாங்கி போடு. சிகரட் அட்டைகளில், கடன் விபரம் எழுத பழகு.
''ஒரு கையிலிருந்து, இன்னொரு கை குவளைக்குள், டீயை சிந்தாமல் ஆற்ற பயிற்சி செய். டீக்கடைக்கு என்று தனியாக டீத்துாள் விற்கிறது. அதை வாங்கி உபயோகி. கடையில், காந்திஜி, அம்பேத்கர், அண்ணாதுரை படம் மாட்டு. குறைந்தபட்சம் ஒரு வருஷம், அதிகபட்சம் அஞ்சு வருஷம் டீக்கடை நடத்தினால், நீ முதல்வர் ஆகிவிடுவாய்!''
''இதற்கென்ன கேரண்டி?''
''டீக்கடை நடத்துனதால தான், சோடி மீண்டும் அசுர பெரும்பான்மையுடன் பிரதமராய் இருக்கிறார். டீக்கடை நடத்துன, ஓ.பி.கின்னீர்செல்வம் ராசியால் தான் அவரது மகன், கிவீந்திரநாத், ஒத்த எம்.பி.,யா ஜெயிச்சு, அமைச்சராகி இருக்கிறார்!''
''அப்படின்னா, டீக்கடை நடத்தின எல்லா அரசியல்வாதிகளும், பெரிய பெரிய பதவிகளுக்கு வந்திருக்கணுமே!''
''விதண்டாவாதம் பேசாதே. நீ டீக்கடை வை, முதல்வர் ஆவாய்!''
''என் அரசியல் வாழ்க்கை!''
''டீக்கடையிலேயே உன் அரசியல் வாழ்க்கையை தொடர், மந்திரம்!''
''எல்லாம் சரியாக வரும்தானே?''
''உன் டீக்கடைக்கு, 'தர்மயுத்தம் தேநீர் விடுதி' என, பெயர் பலகை வை. வெற்றி உனதே!''
மந்திரமூர்த்தி டீக்கடை ஆரம்பித்த, ஒரே ஆண்டில், மாவட்ட செயலராக பதவி உயர்வு பெற்றார்.
அதற்கடுத்த ஆறே மாதத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், மாற்று வேட்பாளராக முன்மொழியப்பட்டார். அதிகாரப்பூர்வ வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால், மந்திரமூர்த்தி வேட்பாளர் ஆனார். சட்டசபை தேர்தலில், 1,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ., ஆனார்.
முதல்வரை தேர்ந்தெடுக்கும், எம்.எல்.ஏ., கூட்டத்தில் ஏக கலாட்டா.
எம்.எல்.ஏ.,க்கள் நான்கைந்து அணிகளாக பிரிந்து, சண்டை போட்டனர். கடைசியில், எந்த அணியிலும் சேராத, மந்திரமூர்த்தியை, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சேர்ந்து வீம்புக்கு, முதல்வராக தேர்ந்தெடுத்தனர்.
முதல்வரான மறுநாளே, மந்திரமூர்த்தி, தன் டீக்கடைக்கு சென்று, தொண்டர்களுக்கு, டீ போட்டு வழங்கினார். பரிகாரம் கூறிய ஜோதிடரை, அறநிலைய துறை அமைச்சராக்கினார்.
அதற்கடுத்த ஆறே மாதத்தில், தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான ஊர்களில், முதல்வர் கனவுகள் கொண்ட அரசியல்வாதிகள், டீக்கடைகள் ஆரம்பித்தனர்.
அரசியல் கட்சிகள், கட்சி பதவிகளுக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கும்போது, டீக்கடைக்காரர்களுக்கு முன்னுரிமை அளித்தனர்.
கிமலஹாசன் - 'இச் இச்' உலகநாயகன் தேநீர் விடுதியும், கீமான் - ஈழத்து ஆமைக்கறி தேநீர் விடுதியும், கிம்பு - ஒரு விரல் புரட்சி தேநீர் விடுதியும், அஷால் - அஷால் சுரலட்சுமி தேநீர் விடுதியும் ஆரம்பித்தனர்.
ஓம் டீக்கடையாய நமஹ!

ஆர்னிகா நாசர்

Advertisement
 

வாசகர் கருத்து (10)

 • Rajas - chennai,இந்தியா

  இந்த கதையை படித்தாலே, உதவி ஆசிரியர்களின் கதை தேர்ந்தெடுக்கும் திறமை பளிச்சிடுகிறது. இத்துடன் நிறுத்தி கொள்ளாமல் ஆர்னிகா நாசருக்கு தினமலரில் பெரிய பதவியை கொடுங்கள்.

 • bharani - chennai,இந்தியா

  நல்ல ஸ்டோரி யா போடுங்க.எல்லாமே மொக்க

 • Shan, Ngl -

  What is this Nasser? எதுக்காக ஓம் டீக்கடையாய நமஹ னு மத நம்பிக்கைளை கேவலப்படுத்துறீர்கள்? ஓம் என்னும் ப்ரவணவ மந்திரத்தை அவமரியாதை செய்ததற்கு கண்டனங்கள்.

  • Girija - Chennai

   இவர் ஓய்வு பெற்ற பேராசிரியர் மார்க்கசார்பற்றவராம்

  • Rajesh - Chennai

   அல்லாரும் [புரியுதா ] ஓம்னு சொல்லித்தான் ஆகணும் இருக்கும்போது இல்லைன்னா போகும்போது ......

 • Prasanna -

  ? தயிரியமா சொல்லுங்க...

 • Girija - Chennai,இந்தியா

  பக் ஜாமூன் டக்கிற் டீ கடை ?

 • Aravind Krishna -

  No comments simply waste

 • kee -

  no comments ...simply waste

 • saravanan - NAMAKKAL ,இந்தியா

  இரண்டு பக்கம் வேஸ்ட்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement