Advertisement

தோலுக்குள் ஊடுருவி பார்க்கும் கண்கள்!

கண்ணால் கண்டறியும் தோல், முடி, நகம் சார்ந்த நோய்களை, நுண்ணோக்கியால் ஆய்வு செய்வது, நோய்களுக்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளவும், ஒன்று போல் தோன்றும் பல தோல் நோய்களை மிகத் துல்லியமாக வகைப்படுத்தும் அறுதியிடலுக்கும், நோயின் தாக்கத்தையும், அதன் வீரியத்தையும் முழுமையாகப் புரிந்து கொள்ளவும், பெருந்துணை ஆற்றுகிறது.

தோலின் மேலும், முடியின் வேரிலும், நகங்களின் அடியிலும் பற்றிப் படரும் பூஞ்சைக் காளான் தொற்று முதல், தோலின் அடி ஆழத்தில் உள்ள கொழுப்புப் படலத்தின் பாதிப்புகளையும், நவீன நுண்ணோக்கிகளின் உதவியால் மட்டுமே சரியாகக் கண்டறிய முடியும். எனவே, நுண்ணோக்கிகளை, தோலுக்குள் ஊடுருவிப் பார்க்கும் மூன்றாம் கண் என்றால் அது மிகையன்று.மாவீரன் அலெக்ஸாண்டருக்கும், நிலவுலகையும் வெல்லத் துடித்த நெப்போலியனுக்கும், மாபெரும் உலகப் போர்களுக்கும், மனித எதிரிகளை விட மிகப் பெரிய எதிரியாக இருந்து தோல்வியைக் கவ்வச் செய்த சிரங்குச் சிறு வண்டு கண்டுபிடிக்கப்பட்டு, உலகெங்கும் பரவிக் கொன்ற அந்தச் சிறு அரக்கனைக் கொல்வதற்கான தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டதும், நுண்ணோக்கியால் தான்.

மாற்றங்கள்தோலின் மேற்புறத்தில் பற்றிப் படர்ந்து, பணம், பதவி, பாலினம், வயது என்று எந்த பாரபட்சமுமின்றி தாக்கித் துன்புறுத்தும் பல்வேறு பூஞ்சைக் காளான்களை வகைப்படுத்தி, அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்க உறுதுணையாக இருப்பதும், நுண்ணோக்கிகள் தான்.
இத்தகைய நுண்ணோக்கிகளின் உறுதுணையோடு, தோல் திசுவில் உள்ள ஒவ்வொரு செல்லும் அடையும் துயரையும், துன்பத்தையும், அதனால் தோலின் பல்வேறு அடுக்குகளில் ஏற்படும் மாற்றங்களையும் துல்லியமாக அறிந்து, அவற்றை வகைப்படுத்தி, எந்தெந்த மாற்றங்கள், எந்தெந்த நோய்களைக் குறிக்கின்றன என்ற வரையறை மூலம் நோயறிவது தான், தோல் நோய்த்துயரியல்.
இவ்வாறு கண்டறிந்த நோயை, அதன் அறிகுறிகளோடு ஒப்பிட்டு, இது இன்ன நோய் தான் என்ற தீர்மானமான முடிவுக்கு வருவது தான்-, நோயறிகுறி -நோய்த்துயராய்வு ஒப்பிடல். வெள்ளிச்செதிற்படை - 'சோரியாசிஸ்' என்று சொல்லப்பட்டு, பல ஆண்டுகள் அதற்காகவே பல்வேறு மருந்துகளையும், மருத்துவ முறைகளையும் மாற்றி மாற்றி மருத்துவம் செய்து, உடலும், மனமும் நொந்து, இறுதியில் ஒரு நாள், தோல் திசு ஆய்வு செய்யும் போது, அந்த நோய் சோரியாசிஸே அல்ல, வெறும் அரிகரப்பான் தான் என்று கண்டறியப் படலாம்.
அதே போல், பல நாட்கள், அரிகரப்பான் என்று காலம் தள்ளப்பட்ட, முற்றிய நிலைக்கு ஆளான நோய், சோரியாசிஸ் என்று, தோல் திசு ஆய்வில் கண்டறியப்படலாம். பல தோல் நோய்கள் ஒரே தோற்றத்தை, ஒரே அறிகுறிகளை வெளிப்படுத்துவதால், தோல் நோய்களைக் கண்டறிவதில், மிக முக்கிய அங்கம் வகிக்கும் ஒரே தோல் ஆய்வாக, இந்த தோல் திசு ஆய்வு விளங்குகிறது.
மேலும், தோல் நம் அகம் காட்டும் கண்ணாடி என்பதையும், தோல் திசு ஆய்வின் மூலம், எந்தத் தோல் நோய், எந்த உறுப்பின் பாதிப்பை, எந்த உடல் நோயின் பிரதிபளிப்பைக் காட்டுகிறது என்பதையும், நாம் மிகச் சரியாக கண்டறியலாம். தோல் நோய்களை மிகத் துல்லியமாக, இது இன்ன நோய் தான் என்று அறுதியிட்டு, உறுதியாகக் கண்டுபிடிக்கக் கூடிய ஆய்வு ஒன்று உண்டென்றால், அது தோல் திசு ஆய்வு தான் என்றால் மிகையாகாது.பெரும்பான்மையான மக்களிடையே, திசு ஆய்வு - 'பயாப்சி' என்றாலே, அது புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் ஒரு ஆய்வு என்ற தவறான கருத்தும், புரிதலுமே காணப்படுகிறது.
எந்தவொரு திசுவையும், அந்தத் திசுத்துயரியல் ஆய்வின் மூலம், அந்தத் திசுவில் பாதிக்கப்பட்ட நோயைத் துல்லியமாகக் கண்டறிய முடியும். ஆகவே, எல்லாத் திசு ஆய்வுகளும் புற்றுநோயைத் தான் காட்டும் என்ற பயமும், அச்சமும் தேவையில்லை.'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பது போல், தோல் நோய் பாதிக்கப்பட்ட இடத்தில், ஒரு மிகச் சிறிய அளவு தோலை சுரண்டியோ அல்லது வெட்டியோ எடுத்து, பதப்படுத்தப்பட்டு, மெழுகில் அச்சாக வார்க்கப்பட்டு, மிக மெல்லிய படிமங்களாக பகுக்கப்பட்டு, திசுக்களையும், பல்வேறு செல்களையும், ரத்த நாளங்களையும் என, ஒவ்வொன்றையும் துல்லியமாக, வெவ்வேறு நிறத்தில் காட்டும் பல்வேறு வேதிப் பொருட்களால் நிறமூட்டப்பட்டு, நுண்ணோக்கியின் உதவியால் ஆய்வு செய்யப்படுகிறது.

முற்றுப் புள்ளிஒரு தோல் நோயை, மருத்துவர் கண்களால் பார்த்து அறியும் செய்திகளை விட, நோயைக் கண்டறிய உதவும் பல முக்கிய தகவல்களை, குறிப்புகளை, தோல் திசு ஆய்வு நமக்கு அளிக்கிறது.உடலெங்கும் தோல் சிவந்து, உரிந்து, முடி அனைத்தும் இழந்து, நகங்கள் அனைத்தும் கழன்று போகும் மிகத் தீவிரமான தோல் நோயாக இருப்பினும், தோலின் உள்ளும், புறமும், உச்சந்தலை முதல், உள்ளங்கால் வரை நீர் கொப்புளங்கள் தோன்றி, தாங்கொணாத துன்பதைத் தரும் மிகக் கொடிய தோல் நோயாக இருப்பினும், காலம் தாழ்த்தாமல் தோல் திசு ஆய்வு செய்வதன் மூலம், நோயையும், அதன் காரணத்தையும் விரைவில் கண்டறிய முடியும்.
அதற்கான சரியான தீர்வை, குறித்த நேரத்தில் அளித்து, அந்த தோல் நோயாளியின் உயிரைக் காப்பாற்றி விட முடியும். அணுவையும் துளைத்து, அதனுள் புதைந்துக் கிடக்கும் நோயையும், நோய்க்கான காரணங்களையும், நோயினால் ஏற்படும் மாற்றங்களையும், தோல் திசு ஆய்வின் நவீன வளர்ச்சியடைந்த தொழில்நுட்பத்தின் மூலம் மிக ஆழமாக, மிகத் துல்லியமாக கண்டறிந்து விட முடிகிறது.
ஒரு காலத்தில், காரணமே இல்லை என்று சொல்லப்பட்ட பல தோல் நோய்களுக்கான காரணங்கள், இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றால் அது, தோல் திசு ஆய்வின் நவீன வளர்ச்சியால் தான்.தினவுப்படை என்று சொல்லப்படும், 'அர்ட்டிக்கேரியா' என்ற ஒவ்வாமை படையால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையானோர், அதன் காரணம் தெரியாமல், வருடக் கணக்கில், அரிப்பைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகளையும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஸ்டீராய்டு வகை மாத்திரைகளையும் உட்கொள்ள வேண்டி இருந்தது. ஆனால், இன்றைய நவீன தோல் மருத்துவ ஆய்வு முறைகளின் மூலம், ஒவ்வாமைக்கான காரணம் மிகச் சரியாக கண்டுபிடிக்கப்பட்டு, அக்காரணத்தை தவிர்ப்பதன் மூலம், பல ஆண்டுகள் தொடரக்கூடிய தினவுப்படைக்கு, ஒரே நாளில் முற்றுப் புள்ளி வைக்க முடிகிறது.
தலைமுடி சாயம் முதல், காலில் அணியும் செருப்பு வரை, நம் உடலில் படும் மற்றும் நாம் தொடும் பல பொருட்களில், எது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது என்பதை, படு பொருள் ஒவ்வாமை ஆய்வு மூலம் கண்டறிந்து விட முடிகிறது.வேலியே பயிரை மேய்வதைப் போல், நமக்கு பாதுகாப்பு தருவதற்காக படைக்கப்பட்ட எதிர்வினைப் புரதங்கள், எதிர்ப்பு சக்தி மண்டலத்தில் ஏற்படும் குழப்பத்தால், நம் செல்களையே தாக்கும் சுய எதிர்வினை தினவுப்படையைக் கூட, ஒரு எளிமையான தோல் ஆய்வின் மூலம் கண்டு கொள்ளலாம்.
சில தோல் நோய்கள் கறுத்து, தடித்து, அருவருக்கத்தக்க தோற்றம் தருவதாலும், சில தோல் நோய்கள் வெளுத்து, நிறமிழந்த வெண்படை தோற்றத்தைத் தருவதாலும், ஒரு பாவமும் அறியாத கத்தரிக்காய், கருணைக்கிழங்கு மற்றும் தோலுக்கு மிகவும் அத்தியாவசியமான, 'வைட்டமின் சி'யைத் தரும் புளிப்புச் சுவை தரும் பழங்களும், காய்கறிகளும், ஒவ்வாமை தரும் பொருட்கள் என்று, எந்த ஆதாரமுமின்றி, மூட நம்பிக்கையாக, பரவலாகப் போதிக்கப்பட்டு வருகிறது.

பொய்யான கருத்துகள்பல ஆண்டுகள் இந்த உணவுகளைத் தவிர்த்தும், எந்த பலனுமின்றி, ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்ட தோல் நோயாளிகளே மிக அதிகம். உண்மையில், எந்த உணவுமே, ஒவ்வாமையோ அல்லது தோல் நோயையோ தோற்றுவிக்கும் உணவு அல்ல. உணவை பதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களும், சில கடல் உணவுகளும் மட்டுமே, ஒவ்வாமை தரக் கூடியவை.
இந்த உண்மை புரியாமல், தோல் நோயாளிகள், குறிப்பிட்ட சில உணவுகளை, வாழ்நாள் முழுதும் தவிர்க்க வேண்டும் என்ற மூடக் கருத்து, இன்றும் பரப்பப்பட்டு வருகிறது.ஆனால், ஒரே ஒரு ரத்த பரிசோதனையில், எந்த உணவுப் பொருள் ஒவ்வாமை, யாருக்கு உள்ளது என்பதை, இன்றைய நவீன தோல் மருத்துவத்தில், கண்டுப்பிடித்து விட முடியும். தோல் திசு ஆய்வின் மூலமும், நவீன தோல் மருத்துவ ஆய்வுகளின் மூலமும், தோலியலில், தோல் நோய்களை கண்டறியும் முறைகளில் மற்றும் தோல் மருத்துவத்தில் பெரும் புரட்சி ஏற்பட்டு வருகிறது.
தோல் நோய்கள் தீராது, அவை தொன்று தொட்டு தொடரும், அவற்றுக்கான தீர்வு நவீன மருத்துவத்தில் இல்லை என்பதெல்லாம், எவ்வளவு பொய்யான கருத்துகள் என்பது, இப்போது வெட்ட வெளிச்சமாகிறது.

டாக்டர் எஸ். முருகுசுந்தரம்
மருத்துவ இயக்குனர்,
தோல் மருத்துவ மையம்
சென்னை
93811 22225, 93813 22234

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement