Advertisement

வாயு கோளாறுக்கும் தோள்பட்டை வலிக்கும் தொடர்பில்லை!

மூட்டு வலிக்கும், வாயு கோளாறுக்கும் தொடர்பு உள்ளதா?



தோள்பட்டை வலி, உயர்த்த முடியாத அளவிற்கு கைகளில் வலி, இவற்றுடன் அடிக்கடி ஏப்பம் வந்தால், வாயு கோளாறாக இருக்கலாம் என்பது, பலரின் எண்ணம். பொதுவாக, வாயு கோளாறு என்பது, அஜீரணத்தை குறிப்பது. அது, வயிறு மற்றும் குடல் சார்ந்த பிரச்னை.அரிதாக சிலருக்கு, வயிற்று வலியை தோள்பட்டையில் உணர முடியும். அவ்வாறு வலி வந்தாலும், தோள்பட்டையை நன்றாக அசைக்கவும், உயர்த்தவும் முடியும். ஏப்பம் வருவதற்கும், தோள்பட்டை வலிக்கும் சம்பந்தம் இல்லை.இந்த இரு பிரச்னைகளும் ஒரே நேரத்தில் இருந்தால், எலும்பியல் மற்றும் வயிறு மற்றும் குடல் பிரிவின் சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனையை பெற வேண்டியது அவசியம்.

'குளூக்கோசமின்' மாத்திரைகளால், சர்க்கரை நோய் வருமா?



மூட்டு தேய்மானத்திற்காக கொடுக்கப்படும் குளூக்கோசமின் மாத்திரைகள், மூட்டுகளின் ஜவ்விற்கு ஆகாரம் போன்றது. இதன் பயன்கள், முழுமையாக உறுதி செய்யப்படவில்லை. ஆனால், பக்க விளைவுகள் மிகக் குறைவு என்பதால் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மருந்தால், சர்க்கரை நோய் வருவது மிக அரிது.

நுரையீரலை பாதிக்கும் காசநோய், எலும்புகளை தாக்க வாய்ப்பு உள்ளதா?



'மைக்ரோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ்' என்ற பாக்டீரியா கிருமியால் உண்டாவது, காசநோய். இது, நுரையீரலை மட்டுமல்ல, உடலின் வேறு எந்தப் பகுதியிலும் வர வாய்ப்பு உண்டு. சிலருக்கு, நுரையீரலே பாதிக்காமல், பிற இடங்களில் மட்டும் வரலாம். எலும்புகளில், முதுகெலும்பு பகுதியில் மிக அதிகமாக பாதிக்கும். மூட்டுகளிலும் வரலாம். காசநோயை, முற்றிலும் குணப்படுத்த முடியும்.

'ஜயன்ட் செல் டியூமர்' என்பது கேன்சரா? இதற்கு சிகிச்சை உண்டா?



ஜயன்ட் செல் டியுமர் என்பது, எலும்பில் உள்ள அணுக்களில் இருந்து உற்பத்தி ஆகிறது. இந்தக் கட்டி, எலும்பைக் கரையச் செய்யும் தன்மை உள்ளது. பெரும்பாலும், இந்நோய் பரவுவதில்லை. ஆனால், ஆபத்து கிடையாது.இதற்கான சிகிச்சையாக, அந்தக் கட்டியை அகற்றி, அந்த இடத்தில் உலோக தகடை பொருத்த வேண்டும். அவ்வாறு செய்தால், முழுமையாக குணமடையும் வாய்ப்பு உள்ளது.

டாக்டர் கே.என். சுப்பிரமணியன்,
எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர்,
மதுரை
93442 46436

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement