Advertisement

மா மரத்தில் தத்துப்பூச்சி தாக்குதல்

மாமரங்கள் பூத்துள்ளதா, மா இலைகள் வெயிலில் பளபளவென எண்ணெய் தேய்த்து விட்டதுபோல் மினுமினுப்பாக உள்ளதா, என கவனிக்க வேண்டும். மினுமினுக்கும் இலைகளை தொட்டு பார்த்தால் தேன் தெளிக்கப்பட்டது போன்று பிசுபிசுப்பாக உள்ளதா.
அப்படி இலைகள் மினுமினுப் புடன், பிசுபிசுப்புடன் காணப்பட்டால், அந்த இலைகளுக்கு மேலுள்ள பூங்கொத்துக்களை மா தத்துப்பூச்சி தாக்கியுள்ளது என அர்த்தம். பூங்கொத்துக்களை உற்று நோக்கினால் சிறிய பழுப்பு நிறமுள்ள பக்கவாட்டில் நகரக்கூடிய தத்துப்பூச்சிகளை காணலாம்.

தத்துப்பூச்சியின் சேதம்



மா தத்துப்பூச்சிகள் முட்டைகளை இளங்குருத்துக்கள், பூங் கொத்துக்கள், இலைகளின் காம்புகளில் துளைத்து வைக்கின்றன. இதனால் முட்டை உட்செலுத்தப்பட்ட பகுதிக்கு மேற்பகுதி வாடி கருகிவிடும். மேலும், முட்டையிலிருந்து வெளிவரும் இளம் குஞ்சுகள் மற்றும் முழு வளர்ச்சியடைந்த தத்துப்பூச்சிகள் இலைக்குருத்து மற்றும் பூங்கொத்துக்களின் சாற்றினை உறிஞ்சுகின்றன.
இதனால், பூங்கொத்துக்கள் வலுவிழக்கின்றன. தாக்குததல் தீவிரப்பட்டால் பூ மொட்டுக்கள், பூக்கள், இளம் பிஞ்சுகள், காய்கள் உதிர்கின்றன. இப்பூச்சிகள் வெளியேற்றும் தேன்பாகு போன்ற கழிவுகள் இலைகளின் மீது படிந்து கரும்பூசணம் வளர்ந்து ஒளிச்சேர்க்கை பாதிக்கப்படுகிறது. நெருக்கி நடப்பட்ட தோப்புகளில் சேதம் விரைந்து பரவும். மல்கோவா, நீலம், செந்துாரம் போன்ற ரகங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றன. பெங்களூரா மற்றும் சப்பட்டை ரகங்களில் தாக்குதல் சற்று குறைந்து காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை



பாதிப்புக்குள்ளான பூங்கொத்துக்களை கவாத்து செய்து அகற்றி எரித்து அழிக்க வேண்டும். காய்ந்த சருகுகளை தீயிட்டு புகை மூட்டம் செய்து தாக்குதலை ஓரளவு குறைக்கலாம். ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒன்றரை மில்லி பாசலோன் 35 இ.சி., அல்லது ஒரு கிராம் அசிப்பேட் 75 எஸ்.பி., கலந்து ராக்கர் தெளிப்பான் மூலம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
மாலை நேரத்தில் தெளிப்பது நல்ல பலன் தரும். மருந்து கரைசல் இலைகளில் நன்கு படிவதற்காக சாண்டோவிட், இன்ட்ரான் போன்ற திரவ சோப்புக்களில் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் மருந்து கரைசலுக்கு அரை மில்லி வீதம் சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும்.

- முனைவர். இரா.விமலா
தலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம்
ஸ்ரீவில்லிப்புத்துார்

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement