Advertisement

ரெளத்ர வீணை

தமிழக முதல்வர் பழனிசாமிக்கு,

புயல் தாக்கி இறந்தவங்களுக்கு நிவாரணம் கொடுத்த நீங்க, அந்த புயல் தந்த பாதிப்பினால உயிரை மாய்ச்சுக்கிட்டவங்க குடும்பத்தை கண்டுக்கவே மாட்டேங்குறீங்களே!

தஞ்சாவூர் குறுங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில வேலை பார்த்துட்டு இருந்தார் என் கணவர் சாமிக்கண்ணு. கூடவே, எங்க மூணு ஏக்கர் நிலத்துல கரும்பு, வாழை விவசாயமும் பண்ணிட்டு இருந்தார். மில்லு, வயக்காடுன்னு எந்நேரமும் ஓய்வில்லாம உழைச்ச மனுஷன்யா அவரு!

'கஜா' வர்ற வரைக்கும் இப்படி நல்லாத்தான்யா இருந்துச்சு வாழ்க்கை. ஆனா, வந்த வேகத்துல வயல் மொத்தத்தையும் புயல் நாசம் பண்ண, டிசம்பர் 1, 2018 ராத்திரி மருந்தை குடிச்சுட்டு அவர் சாய்ஞ்சிட்டார்.குறுங்குளம் கிராம நிர்வாக அதிகாரி நேர்ல வந்து விசாரிச்சிட்டு, நிவாரணத்துக்கு ஏற்பாடு பண்றேன்னு சொன்னார். நானும், தஞ்சாவூர் தாலுகா ஆபிஸ், கலெக்டர் ஆபிஸ்ல நிறைய தடவை மனு கொடுத்துட்டேன்.

ஒரு வருஷம் தாண்டிருச்சு; புயல் காலத்துல நீங்க அறிவிச்ச எந்தவொரு நிவாரணப் பொருளும், பண உதவியும் இன்னும் கிடைக்கலை. 'கஜா' கொண்டு போன எங்க வாழ்க்கையை மீட்டுத் தர்ற சக்தி, அதிகாரத்துல இருக்குற உங்களுக்குத் தான் இருக்குன்னு நம்புறேன்; என் நம்பிக்கையை அழிச்சிடாதீங்க!

- 'கஜா' சூறையாடிய தன் வாழ்க்கையை சீரமைக்க நிவாரணம் கேட்கும், 48 வயது மாரிக்கண்ணு, தஞ்சாவூர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement