Advertisement

24/7 மகிழ்ச்சி

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கிறது பேம்பூலா ப்ளே ஸ்கூல் இப்பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியை, 42 வயது சுஜாதா விஜய், 24/7 பொழுது, இவருக்கு மகிழ்ச்சியாக கழிய காரணம்... இவரது பள்ளி மழலைகள் உடனான பல நிகழ்வுகள்; பின், அதன் நினைவுகள்....

அழகென்றால்...?
சுஜாதா: ஒரு வட்டத்தை வரைஞ்சு வைச்சு, 'இதுதான் குக்கர்'னு பிள்ளைகள் சொல்றது ஓர் அழகு; யானையோட உச்சந்தலையில இருந்து துதிக்கையை வளர்த்து வைச்சிருப்பாங்க பாருங்க... அது பேரழகு! அவங்க வரையுற சைக்கிளோட சக்கரம் நெளிஞ்சு போயிருக்கும்; ஆனா, பார்க்க அவ்வளவு நளினமா இருக்கும்.தனக்கு பிடிக்காத வேலையை, செய்யவே செய்யாத குழந்தையோட குணம்... பேரழகின் உச்சம்.

அது ஏன் மழலையர் பள்ளி ஆசிரியப் பணின்னாலே பெண்கள் மட்டும்?
பதில் ரொம்பவே எளிமையானது! பொதுவா, குழந்தைகளை கவனிச்சுக்க ஒரு ஆணாலேயும் முடியும்; ஆனா, குழந்தைகளுக்கு தேவையானதை அவங்க கேட்காமலே கொடுக்க பெண்களால மட்டும் தான் முடியும்.
'வீட்டுக்கு வெளியே தான் உலகம் இருக்கு'ன்னு இயங்குறவங்க ஆண்கள்; 'வீட்டுக்குள்ளேயே ஓர் உலகம் இருக்குது'ங்கிறதை உணர்றவங்க பெண்கள். 'இந்த உலகம் இப்படித்தான்னு குழந்தைகளுக்கு புரிய வைக்கிற திறன் பெண்களுக்கு அதிகம்'ங்கிறது என் எண்ணம்.

அந்த சில தருணங்கள்
* எந்த கோபத்தையும் கரைக்கிற சிரிப்பு
* துாங்குவது மாதிரியான நடிப்பு
* கஷ்டப்பட்டு அடக்குற அழுகை
இதெல்லாத்தையும் விட, சுவாரஸ்யமான ஒரு விஷயத்தை நான் சொல்லிக் கொடுத்துட்டு இருக்கும் போது, 'எனக்கு துாக்கம் வருது; நான் துாங்கப் போறேன்'னு சொல்லிட்டு, என் அனுமதிக்காக காத்திருக்காம உடனே படுத்து துாங்குற குழந்தையோட அழகு... அடடா... எப்போ நினைச்சாலும் மனசுக்குள்ளே பூ பூக்கும்.

பெண் எனும் டாக்டர்
காரணமே இருக்காது; ஆனா, குழந்தைகள் அழுவாங்க. எங்க பள்ளியில ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு செடி உண்டு. குழந்தைங்க அழுற சமயத்துல, பூவாளியை கையில கொடுத்து அவங்க செடிக்கு தண்ணீர் ஊத்தச் சொல்வேன்; அழுகை நின்னுடும். 'ஏதாவது ஒரு வேலையை ஈடுபாடா செய்றப்போ மனசுல இருக்குற பாரம் குறைஞ்சிடும்'ங்கிற உண்மையை எனக்கு கத்துக் கொடுத்தது என் பெண்மையும், பெண்மைக்குண்டான மதிப்பிற்குரிய கடமைகளும் தான்!

'மம்மி'களுக்கு செல்லமா ஒரு குட்டு வையுங்களேன் சுஜாதா..
'மிஸ்'கிட்டே சொல்லிடுவேன்'னு உங்க குழந்தைகளை பயமுறுத்தி, எங்களை பூச்சாண்டிகள் ஆக்காதீங்க மம்மியரே!

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement